Sep 18, 2015

நீ நானில்லை....




சட்ட கீசையில பைசா இரிக்கி
பத்து ருவா எடுத்து குடு
பஸ்ஸுல டிக்கெட்டும் எடுத்து
உச்சக்கி சாப்பிடவும் சொல்லு
சாப்பாடு கொண்டு போவச்சென்னா
கெளரவக்குறச்சலு ஒம் மவனுக்கு.......
.
ரேஷன் கட அரி வாங்கி
தின்னு வளத்துனா என் உம்மா
பள்ளிக்கொடத்துக்கு புஸ்தவம்
வாங்க வழியில்லேண்ணு
அஞ்சாங்கிளாசோட நிறுத்திட்டேன்...
.
அதுக்குணு உங்க புராணத்த
படிக்கிய புள்ளைட்ட பாடாதீங்கோ
அவனும் அப்டிஒண்ணும் இல்லாம
வளரட்டுண்ணா செல்லுதீங்கோ
உங்களுக்கு வாங்கி தர யாருமில்ல
அவனுக்கு நீங்க இரிக்கிதீங்கல்லியா....
.
படிச்சிருந்தா சர்க்கார்
உத்தியோகத்துல இரிக்கிலாம்
படிக்காத்ததுனால இப்போ
இந்த வட்டு புடிச்சி நோவ நோவ
ஓடவேண்டியிரிக்கி....
.
புள்ளியளுக்கு பைசா செலவு
செய்யியத சொல்லைல - பைசாக்க
அரும தெரியாம வளரக்குடாதுண்ணுதான்
வாயில வாறதை பொலம்புறது.
மொவனுக்க மேல பாசம் கூடுன
உம்மாக்கு தேச்சியம் வரத்தான் செய்யும்....
.
நாம பட்ட பாடு நம்ம
புள்ள படப்டாது அதுதான்
எனக்க ஆசையும் பிரார்த்தனையும்
செரமம் அறியணும் ஆனால்
செரமப்படுத்தப்டாது....
.
துளித்திளியாய்
பெய்திறங்குகிறது கண்ணீர்
போட்டும்மா உனக்கு மட்டுமா புள்ள
என் வாரிசுல்லா அவன்
நல்லா வரணும் நல்லா இரிக்கணும்
அதுக்குத்தான் எல்லாம்...

Jul 12, 2015


அன்புள்ள அம்மாவுக்கு,

அண்ட சராசரங்கள் உன்னால்தான்
ஆளப்படுகிறது என உன் பிள்ளைகளால் ஆற்பரித்தறைகூவல் விடுத்தபோது
நீதியின் வெளிச்சம்காணவியலாமல்
நேற்றும் முந்தைய நாட்களிலும்
சிறை கொண்டிருந்தாய்...
.*
அஃதோர் அகல்விளக்கு
உடைந்து தெறித்ததில்
இருண்டுபோன இடைவெளியில்
சத்தமின்றி நீ வெளியேறியதில்
செத்து விழுந்த நீதியை நானறிவன்....
*
அதுவல்லவென் வினா..
.
அ' என எழுத்தறிவிப்பாயென
ஆ' வென்றழுதேன் நான் - ஆனால்
அம்மா என்றழைக்காத
உயிரில்லாவிடத்து சும்மாவேனும்
அம்மாவாகிப்போனாயோ நீ...
.
அமுதம் தொடும் காலத்தும்
அம்மாவென்றே அழுகிறேன் - என்
அம்மாவென்றால் நீ என்
அழுகுரல் கேட்டிருப்பாய் நீதான்
சும்மாவேனும் அம்மாதானே.....
.
பாலருந்து வயதில் எனக்கு
மதுவூட்டும் தமிழ்குலத்தில்
பிறந்துபோயினேன் நான் - விஷம்
கொண்ட நாவால் நான் சும்மாவேனும்
அம்மா என்றழைக்கிறேன் உனை...
*
தள்ளாடும் தந்தையும்
ஃபுள்ளாடி வீழும் தங்கையும்
அரை நிர்வாணமாகும் அண்ணனும்
ஆட்டுவிக்கப்படுகின்றனர்
உன் மதுக்குப்பிகளால் - இன்னும்
உனை தவிக்கவைக்கவில்லையோ
நீ சும்மாவாகிப்போன அம்மாவோ....
.
அன்றொருநாள் அப்பா
பிறசவித்த சாராயக்குப்பிக்கு
இன்றும் புனிதம் தேடுகிறார் -ஆனால்
அப்பாக்களையே குடிமுழுகவைத்து
சும்மாவேனும் ஆர்ப்பரிக்கிறாயோ...
.
என் வலிகளோ வார்த்தைகளோ
உனை ஏதும் செய்யாதிருக்கையில்
நீ அம்மாவல்லவே .....
நீ சும்மாவாகிப்போனவள்....

Nov 25, 2014

ஒரு நாள் வரும்......

ஒரு நாள் வரும்.....
*****************************
இன்னும் பெய்திறங்குகிறது
பெரும் மழை - நேற்றுவரையிலான
கடும் வெயிலில் காய்ந்து நிற்கும்
ஒலைச்சருகுகளினூடே
பெய்திறங்குகிறது மழை...
.
சாய்த்திறக்கிய மேற்கூரையில்
ஆங்காங்கே சொருகப்பட்ட
கமுகின் பாளைகளினூடே
வெளிப்பட்டிருக்கவேண்டும்
ஏழ்மையின் ஓட்டைகள்...
.

நிமிர்ந்து பார்த்து கருமேகத்தை
கோபித்துக்கொள்கிறேன் - நீர்த்துளிகள்
வீழ்வதும் வரையறைக்குள்
நிற்காத என் அறைகளுக்குள்..
.
கீச்சிடும் சப்தங்களினூடே
சில மூஞ்சூறுகளின்
மழைக்கோபம் என்மீதான
பரிவின் ஏக்கமாயிருக்கக்கூடும்.....
.
நீண்டு சுருங்கும் புழுக்கள்
எப்போதோ என் பாதங்களை
நக்கி வெளிப்படுத்திய மகிழ்ச்சியில்
சகதியில் வெந்து சுருங்கிய
சருமங்களில் நீற்றல்கள்....
.
எடுத்து வைத்த நேற்றைய
பழஞ்சோற்றில் சற்றே
முன்பு விழுந்திருக்கக்கூடும்
வாரியினின்றும் வழைந்து
நெழிந்த மழை அட்டை...
.
கைக விரல்களின் நடுக்கம்
ஒருபோதும் என் கால்களின்
பலத்தை பாதித்ததேயில்லை
நம்பிக்கையையும்தான்....
.
மறுகால்பாயும் ஓடைகளில்
இன்னும் என் முகம்
தெழிவாய் தெரிகிறது - யாரும்
மாய்த்துவிடவியலா ஏழ்மையின்
சபிக்கப்பட்ட முகம்...
.
ஒரு நாள் வரும்..
அருட்கொடைகளால்
நான் அகமகிழ்வேன்
காத்திருப்பின் அவஸ்த்தையை
அழகிய மேகங்களால்
மூடும் ஒரு நாள் வரும்.....
.
.அபூ ஃபஹத்

Mar 16, 2014

சுயமிழந்த சிங்கம்....


சுயமிழந்த சிங்கம்....
**************************


அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில் 
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....

சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......

அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....

சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....

வாலின் நீளம் வாயின் அகலம்
பற்களின் கூர்மை நகங்களின் பலம்
கால்களின் வேகம் என
தன் பலமறியாமல் பலனிழந்த
சிங்கம் இன்னும் ஆயத்தமாவதை
மறந்து நிழல் தேடுறது....

அட்டைகத்திகள் இன்னும்
நிமர்ந்து நிற்கிறது - காற்று
வேகமெடுக்காதவரை
அட்டைக்கத்திகள் வீரமிடும்
முழங்கும் ஜொலிக்கும்...

சலசலக்கும் சருகுகள்கூட
பயப்படுத்தும் - நரம்புகள்
புடைக்க நெற்றி வியற்க
பிரம்மை கொள்ளும்.....

சற்றும் சுணங்காது
எடுத்து வைக்கும் முன்னங்கால்கள்
பெருங்கூட்டத்தையும்
பின்வாங்கச்செய்யும்
எதிர்த்து நிற்கும்ஆயுதங்கள்
அடங்கிப்போகும்.....

சூழ்சிகளால்
வீழ்த்தப்படுகிறது வீரம்
வீரம் விழுந்தால்
வெற்றியும் வீழும்.....

உள்ளீடற்ற உருவம் கண்டு
பயந்து நடுங்கும்போது
நான் இரவில் இருக்கிறேன்
என்பதை மறந்துபோகிறேன்...

உள்ளீடற்றது உருவமா
அல்லது இரவின்
நிலா வெளிச்சத்தில்
வீழ்ந்த எதோ ஒன்றின்
நிழலா...

இவை இரண்டுமாயிருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்

பயம் மட்டும் நிஜத்தில்
என்னோடு பயணிக்கிறது.....

Feb 20, 2014


சூரிய வெளிச்சத்தில்
மட்டுமே கண்ணயர்கிறேன்
இரவுகள் ஒருவேளை
என் வாழ்க்கையை
இருட்டாக்கக்கூடும்....

என் நண்பர்கள் ஆங்கே
வேலிகளில் மண் குன்றுகளில்
மறைந்திருக்கக்கூடும் - நான்
தூங்குதற்காகவல்ல
என்போன்ற பலரை
மரணத்தினின்றும்
தற்காலிகமாய் காப்பதற்காக ...


நாளை இந்த கல்லைத்தான்
உடைத்து எறியப்போகி்றேன் - என்
தேசம் கொதிக்கும் சுதந்திரத்தை
இதினின்று எய்தும் ஏதோ
ஒரு கல் பெற்றுத்தரலாம்...

எனது உடை அழகானது
என் தந்தையைப்போலவே
என் தாயின் அன்பைப்போலவே  - அவர்கள்
எனக்கு உடுத்திய அன்றே
பீரங்கி ரவைகள் துளைத்து
இறந்துபோயினர்
அவர்களின் உடைகளில்
பல இடங்களில் ஓட்டைகள்..


இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
எனது அயர்வில் சற்றும்
நிம்மதியில்லை - இருப்பினும்
என் கனவுகளில் யூப்ரடிஸ் நதிக்கரை
வந்து சொல்கிறது....

ஆங்கே எனக்கான இடத்தில்
கற்களை மடியில் கட்டி
யாரோ ஒரு சிறுவன்
நிற்கக்கூடும் - அவன்
மரணித்துவிடுவானோ எனும்
பயத்தின் வலிகள் இமைகளை
திறந்துவிடுறது....


எந்த முயற்சியும் எங்களுக்கு
அயர்வை தரவில்லை - இறுதி வெற்றி
என்னைப்போலவேஅழகானதொரு
பூவாய் பூக்கும்
அழுக்கு படிந்த மனங்களில்
அழகு மலரும்...


தாய் மடிகள் இங்கே
இல்லவேயில்லை - வெறும்
கற்களாலான படுக்கைகள் மட்டுமே
கனவுகள் முழுக்க
என் தேசத்தின் வெற்றி பற்றியதாக
மட்டுமே இருக்கும்....

எங்கள் அங்காடிகளில்
தலையணைகளோ
பட்டுமெத்தைகளோ இப்போது
விற்பதற்கில்லை - இழந்த
தலைமுறையி்ன் முகங்கள்
மட்டுமே உள்ளன....

நான் தூங்கவேண்டும்....
அடுத்த முறை நானாகவும்
இருக்கலாம் - வேலிகளின்
குறுக்கே நிற்பதற்காக....



Feb 4, 2014




அந்த ஒற்றை காலடிச்சத்தம்
மட்டும் கேட்கவில்லை - கூடவே
ஒரு குழம்பொலி சத்தமும்
கேட்கிறது பலமாக....

அழைக்கும் சப்தம் மூடியிருக்கும் 
என் வீட்டுத்தளத்தையும்
தாண்டி என் சமையறைவரை 
கணீர் என ஒலிக்கிறது....

நிசப்தத்தின் முன்னால்
மண்டியிட்டிருந்தது அந்த
மதிய நேரம் - வெயிலின்
உச்சம் அவன் தொண்டையை
வரளச்செய்திருக்கவேண்டும்
இரைப்பின் ஓசை காற்றில்
கரைந்துகொண்டிருந்தது......

கிலுகிலுப்பையின் சில்லென்ற
ஒலியை தோற்கடித்தது
சில்லரைகளை குலுக்கும்
அமிர்தப்பாத்திரம்...

பகலின் வெளிச்சம் சீறும் வீட்டில்
என் கதவுகள் மூடியே இருந்தது
என் அறை முழுக்க இருட்டின்
ஆற்பாட்டமான சிவப்பு நிறம்
விழிகள் இழந்த நான்
இமை மூடி எப்போதோ
அறிந்து வைத்திருந்த அந்த நிறம்....

நான் சப்தமிடத்தான் வேண்டும்
குரல்வளை எப்போதோ
தீய்ந்துபோயிருந்தது வெற்றிலையும்
புகையிலையும் சேர்ந்து
மூட்டிய புற்றிலையின் நெருப்பு.....

அவன் மீண்டும் தன் கால்
முன்னெடுத்து வைக்கமுடியாத
பளிங்குத்தரை அது
முன்னெடுத்தாலும் வைக்க
இடம் கொடாத ஏழ்மை மனது....

சில பருக்கை மண் துகள்கள்
பளிங்குத்தரையில் உராயும்
சிராய்ப்புகளின் சப்தம் - அவள்
மெதுவாய் நகர்ந்து செல்வதை
உணர்த்திய அதிர்வுகள்.....

ஒட்டிய குடிலில் ஒரு
துளி தண்ணீர் ஒரு குவளை
பழைய சாதம் கேட்டு
பாத்திரம் நீட்டி கும்பிட்டு
காத்திருக்கிறது அந்த
ஒற்றைக்காலும் உடைந்ததோர்
ஒற்றை மரக்குழம்பும்....

என் தலைவாசல் கதவின்
பி்ன்னிலிருந்து அவள் 

பேசினாள் ஒற்றை வரியில் 
வீட்டில் யாருமில்லை 
அப்புறம் எங்கேயாவது போய் கேளும் ஓய்
சட்டென இருண்டது அந்த
கிழட்டு யாசகனின் உலகம்...

ஏமாற்றம் என்ற வார்த்தையை
அந்த பழிங்குத்தரையில்
தன் பார்வையால் பதித்துவிட்டு
திரும்பும்போது ஒரு
ஒற்றைத்துளி வியர்வை
தெறித்து வீழ்ந்தது தலைவாசலில்...

மீண்டும் என் காதுகள் கேட்டன
அந்த ஒற்றைக்காலடிச்சப்தம்
ஒற்றை குழம்பொலி சப்தம்
வேறு ஒரு வாசலில் அவனுக்காய்
காத்திருக்கலாம் அவனின்
ஒரு குவளை சோறும்
ஒரு கோப்பை நீரும்.....

அபூ ஃபஹத்