Oct 13, 2010

நான் பயணப்படுகையில்....

நிலவே.......



இரவுகளினூடே பயணப்படுகிறேன்
அது ஓர்
ஒருவழிப்பாதை ; ஓரு
ஒற்றையடிப் பாதையும்கூட !


இரு விழிகளை நம்பி
ஒரு வழியில் என் பயணம்
நீ மூன்றாவது விழியாய்
என் பின்னால் !


அலட்சியமான ஓர்
லட்சியமற்ற பயணம்,
பயணத்தினூடே நான்
காண்பதெல்லாம் எனக்கு
பாடமாகுமோ..


என்னைச்சுற்றி ஏதேதோ
நடந்தபோதும் நான்
அறிந்தும் அறியாமலுமாய்-ஆனால்
நீ முழுவதும் ரசித்தவாறே
பயணிக்கிறாய்.!.


நான் தன்னந்தனியாய்
பயணிக்கையில், நீ மட்டும்
பலகோடி முகங்களோடு !
நான் எங்கே நிற்கிறேனோ
அங்கே நீயும் நின்றுகொள்கிறாய் !


எனது தவறுகள்
எனது செயல்கள்
எனது அறியாமை என
அனைத்தையும் நீ
பதிவு செய்கிறாய்..


நான் உனை
பாற்கும்போதெல்லாம்
எனைப்பார்த்து நீ
சிரிக்கிறாய்..


உனது பயணத்தில் ஒரு
அலட்சியமில்லாத
இலட்சியம் தெரிகிறது-அது
என்னவென்று என்னால்
புரிய முடியவில்லை...


என்னை நீ ஏன் தொடர்கிறாய்
என என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன்...


பரந்து விரிந்த அந்த
இருண்ட வான்வெளியை
இரவினூடே நான் ரசிக்கையில்
நீ என் முகம் மறைக்கிறாய்..


சில நேரங்களில் நீ
வெறிக்கிறாயா சிரிக்கிறாயா
என்னால் அறிய முடியவில்லை...




அந்த ஒற்றையடி
ஒருவழிப்பாதையில்
பெரும்பகுதி கடந்துவிட்டேன்
நான் களைத்துப்போயினேன்-நீயோ
ஆரம்பத்தில் இருந்த அதே
உற்சாகத்தோடு...


இரவு நிறம் மாறி
விடியலெனும் புதிய நிறமாய்,
இப்போது கடலின்
கரை தொட்டு நிற்கிறேன்-அந்த
ஒற்றையடி
ஒருவழிப்பாதையின் முடிவில்- உன்னை
திடீரென தொலைத்த
அதே இடத்தில்..


நிலவே
இப்போது நான்
ஒரு புதிய வழிப்பாதையில்
அலட்சியமில்லாத இலட்சியமுள்ள
ஒரு புதிய பயணத்திற்காய்
உன்னைத்தேடி....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...