Oct 31, 2010

தே டு கி றே ன்....

பரந்து கிடக்கிறது பூமி
என் பகுதியை தேடிப்பாற்கிறேன்
ஆதாரங்களின்றி....


அலைகளும் மழைகளும்
அடிக்கடி வந்து போகின்றன
தற்காலிகமாய் வாழ்ந்து போகின்றன...


கூர்ந்து கவனிக்கிறேன்
மழைத்துளிகள் பூமியை
துளைத்துச்சென்றபோதும்
மரித்த உயிர்கள் உயிர்த்ததாய்
நான் காணவில்லை....


விருட்சங்களிலிருந்து
உதிர்ந்து போன விதைகள்தான்
விண்ணை நோக்கி
அறை கூவியதோ நான்
கேட்கவில்லை...


பூக்களும் ஈக்களும்
உறவுகளை முறித்துக்கெள்ளவே
இல்லை – சிலபல
காரணங்கள் இல்லாததால்
தேனையும் அருந்தி
மகரந்தத்தையும் மாறி மாறி
பரிமாறிக்கெண்டே போகின்றன....


நான் மறந்துபோன பல முகங்களில்
உனது முகம் இல்லை – உன்
நினைவிலிருக்கும் முகங்களில்
என் முகம் இருக்குமோ
தெரியவில்லை...
முகங்களா முக்கியம்
நினைவுகளும் உணர்வுகளும்தானே....


சில பாதைகளினூடே
நடந்து செல்கையில் உன்
கொலுசணிந்த பாதச்சுவடுகள்
நிஜமாகவே நிழலாய் தெரிகிறது
சின்னச்சில கொலுசொலி 
சிணுங்கல்களும் என் காதுகளில்.....


பேருந்து நிறுத்தங்களை
சமீபிக்கும்போதெல்லாம்
சில பெண்கள் புத்தகங்களை
நெஞ்சோடணைத்து நிற்கிறார்கள்
அவை உனது போல் சிவப்பு
அட்டைகளால் பொதியப்பட்டவையல்ல 


ஆனாலும்
அந்த பேருந்து நிருத்தங்களில்
உனது சந்தன வாசம்
இருப்பதாய் உணர்கிறேன்...


எனது வீட்டுக் கூரைகளில்
காகங்கள் சத்தமாய் அழைக்கும்போதும்
என் வீட்டு தெருக்கதவின்
இரைச்சல் சப்தம் கேட்கும்போதும்
நான் எதிர்நோக்குவது
உன்னையல்ல என்றாலும்
நீயோ எனும் ஏக்கம்....


தொழில் நுட்பத்தின் உச்சம் மீண்டும்
வானொலியில் பிறந்திருக்கிறது
மறு ஜென்மம் – வானொலியில்
எப்போதாவது வழங்கப்படும்
உனக்குப்பிடித்த பாடல் எனக்கு
மீண்டும் காதலை வரவைக்கிறது.....


என் அம்மாவின் சேலைத்தலைப்பில்
முகம் துடைத்துவிட்டு போகும்போது
அம்மா சொல்வாள்
எப்போதும் சின்னப்பிள்ளையா என்று...


காலம் கடந்து போன
எனது ஞாபகங்களுக்கு முக்கியத்துவம்
இல்லைதான் எனினும்
மரணம் உனை ஆட்கொள்ளும் முன்
ஒரு முறையேனும் எனது
ஞாபகங்கள் உன்னில் முக்கியமாகும்....


வெறும் மனதோடு திரிவதாய்
தோன்றும் பல நேரங்களில்
காற்றில்லா வெற்றிடங்கள்
இப்படித்தான் இருக்கும் என உணர்கிறேன்
எதுவென்று தெரியாத
ஏதோ ஒன்று தொலைந்ததுபோல்....


ஒரு மயானத்தில் நான்
எனது ஞாபகங்களை மறந்து செல்வேன்
அது உனதும் உனக்கு மட்டும்
சொந்தமென்பதால்...
பரந்து விரிந்து கிடக்கும்
இந்த பூமியில் அதுவே
எனது பகுதி......




அபூ ஃபகத்...

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...