மே தினம்......
தொழிலாளி
அதிகாலை குளித்து
புத்தாடை உடுத்தி
ஆட்டுக்கறி சமைத்து
குடும்பத்தோடு அழகாய் உண்டு
தோளில் கரை துண்டணிந்து
அரச மரத்தடி நோக்கிச்சென்று
அன்பர்களை குசலம் விசாரித்து
அப்படியே கடைத்தெருவுக்கு சென்று
கை நிறைய பைகளில்
இனிப்புகளும் சுவைகளும் வாங்கி
சொந்தங்களின் வீடுகளுக்கும் கொடுத்து
கொஞ்சம் தானும் எடுத்து வந்து
தன் பிள்ளைகளுக்கும் கொடுத்து
கையோடு வாங்கி வந்த
கண்ணாடி வளையல்களை மகளின்
கைகளில் கிலுங்கவைத்துவிட்டு
குங்கும சிமிழ் திறந்து
மனைவிக்கு சிந்தூரமிட்டு
கூடவே ஒரு முத்தமிட்டு
கடைசியாய் சட்டைப்பையில்
மீதமிருந்த பணம் எண்ணிப்பார்த்து
அதிர்ந்தபோது தொப்பென விழுந்தான்
தூக்கம் கலைந்து பேருந்து நிலைய
பயணிகள் காத்திருப்பு இருக்கையிலிருந்து....
அய்யய்யே..!!!! என்ன இது இன்னிக்கு
கெட்ட கெட்ட கனவா வருது என
தான் கண்ட நல்ல கனவையும்
தூக்கத்தையும் தூக்கியெறிந்து
இடுப்பிலிருந்த அழுக்குத்துண்டை
தலையில் கட்டி யாரோ ஒரு பயணியின்
பெட்டியை நோக்கி நகர்ந்தான் நிஜத் தொழிலாளி
அவனுக்கே உரிய தெம்போடு..... சார் போர்ட்டர்...... சார் போர்ட்டர்.......
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்....
அன்புடன்
அபூ ஃபஹத்
தம்மாம்.
May 1, 2011
ஒரு தொழிலாளியின் மே தினம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...