Jul 13, 2011

மண் வேலிகள்............


கள்ளிச்செடிகளும்

பனை ஈற்கல்களால் நேர்த்தியாய்

கட்டி முடியப்பட்டஓலைக்கீற்றுகளுமாய்

நேற்றைய வேலிகள்....


இடையிடையே பூவரச

மரங்களும் முருக்கம் கம்புகளும்

கம்பீரத்தோற்றத்தில்

வேலிகளுக்கு பலமும் அழகுமாய்....


ஓலைக்கீற்றுகள் நெருக்கமாய்

அடுக்கப்படினும் நாய்களும் பூனைகளும்

தலைகளால் வளைகளை

உருவாக்காமல் இருப்பதில்லை....


வேப்ப மரங்களை வேலிகளுக்கு

நடுவே வைப்பதில்லை – அவைகள்

வேர்கள் புடைக்க ஓடி

தெருவைக்கடந்து விடுவதால்...


உயர உயர பார்த்த ஞாபகம்

இருக்கிறது இன்றும் – பக்கத்து

வீட்டு வேலியில் ஒரு இலவம் மரம்

தலை விரி கோலமாய்.....


என் வீட்டு தென்னை மரங்கள்

வேலிகளில் சாய்ந்தே நிற்கிறது - கோடையில்

நிழல் தருவதாய் தோன்றும் எனினும்

மழை நீரை வேலிகளின் வயிற்றில்

பாய்ச்சி பிய்த்து காயப்படுத்தாமலுமில்லை.....


பச்சைப்பசேலென வளர்ந்துவிட்ட

செடிகளும் கொடிகளும் வேலிகள்

இல்லையெனில் கால் நடக்க கடித்தெறியும்

ஆடுகளும் மாடுகளும்......


உடைந்த மண்குடத்தின் வட்ட

வாய் பகுதியை மட்டும் வளைகளில்

வைக்கும் வரப்பாளனின் கோபம்

நாய்களின் கழுத்தில் மாலையாய்....


கோபத்தின் உச்சத்தில் ஒலைகளை

பிறாண்டும் பூனைகள் குத்திக்கிழிப்பது

வேலிகளை மட்டுமல்ல

வீட்டம்மாக்களின் காதுகளையும்தான்.......


மறந்து போயிருக்கிறோம் நாம்

மண் வேலிகளை – மானம்

கெட்டுப்போய் நிற்கிறது மனைகள்,

நாகரீகத்தின் வளற்சி

மதிற்சுவர்களாய் பரிணமித்து

நிற்கிறது மண் வேலிகள்....


மதிற்சுவருக்காய்

அளந்து முறித்ததில் அறுந்து போனது

அண்டை வீட்டு அண்ணன்

உறவு மட்டுமல்ல - ஆண்டாண்டுகால

மண்வாசனையும்தான்...


எதிர்வீட்டு மாமாவின்

வெளிக்கதவை நேற்று நடு நிசியில்

அளந்து பார்த்தேன் – என் இரும்புக்கதவினும்

ஓரடி குறைவுதான் அதுவே

ஒரு வேலி கடந்த மகிழ்ச்சிதான்....


தெருவோரங்கள் வழி பிழைத்தன

தொட்டுத் தாலாட்டவும், தவழ்ந்தோடவும்

மடிகளில்லாமல் போனதாலும்....


வீட்டுப்படிகளை தொடும்முன்னே

மதிற்சுவர்கள் விளம்பர அட்டைகளுடன்

நாய்கள் ஜாக்கிரதையாம்....


வேலிகளில் சுதந்திரமாய் பூத்த

ரோஜாக்கள் இன்று மதிற் சுவர்களுக்குள்

சிறைக்கைதிகளாய் – ஆயிரம் மனங்களையும்

கவராமல் பூச்சூடும் பெண்டிரின்

முகங்களும் மலராமல்.....


கூட்டுப்புழுக்களாய் மாறிப்போன

மனிதர்கள் பரிமாறிக்கொள்ள

கதைகள் இல்லை – இதயங்களும்

வேலிகளும் முகவரிகளை

தொலைத்துவிட்டதால்....


விரிசல்களில் வாழும்

விருப்பமில்லா மனிதர்களைப்போல்

மண் வேலிகள் மதிற்சுவர்களுக்குள்

வாழ்வாதாரம் தேடி..................



என்றும் அன்புடன்

அபூ ஃபஹத்.

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...