Nov 6, 2010

நினைவுகள்.....





  
மூழ்கிக்கொண்டிருந்தது சூரியன் 

சின்னச் சின்ன முனகல்களோடு

அந்தி மாலையை தாலாட்டியது

அலைகள்....



சமுத்திரத்தின் காதோரம் என்

ரகசியங்களை சொல்லியுள்ளேன் - ஏனெனில் 

என்றாவது நீ ஏதாவது கடல்தீரம்

காணும்போது என் கால்கள் தழுவிய அலைகள்

உன் பாதங்களில் சமர்ப்பிக்கும்

என்கிற சமுத்திர நம்பிக்கை.....



எழுதி வைத்து படித்துப்பார்க்க

மனமில்லாததால் இதயத்தில்

மடித்துவைத்த காதல் எனும்

நினைவுகளை கொஞ்சம் கடலிலும்

கலந்து செல்கிறேன்.....



உன் பெயர் கடற்கரையில்

தெழிவாக எழுத முடிகிறது ஆனால்

பாதுகாக்க முடிவதில்லை.

அலைகளின் கண்கள் உன் பெயரைக்கூட

ஸ்பரிசித்துச் செல்கின்றன....



நீ வருவதில்லை என்றாலும்

தினமும் நாம் சந்திக்கும் இடத்திற்கு

நான் வராமல் இருப்பதில்லை,

நான் வரும்போதெல்லாம் உன்

நினைவுகளின் பிரதிபலிப்பு

அங்கே இருப்பதாய் உணர்கிறேன்.....



நீ பிரிந்து செல்வதற்காய்

தேர்ந்தெடுத்த இடம் என்பதாலோ

என்னவோ உனதும் எனதுமான

காலடித்தடங்களைத்தவிர

மூன்றாவதொன்றை 

அங்கே காண முடியவில்லை...



வருத்தங்களும் வேதனைகளும்

மையல் கொண்டுவிடும்போது

நீ பிரார்த்திப்பதைப்போல் என்னால்

முடியவில்லை -

காரணம் நீ பிரிந்து சென்றபோது

அவை என்னோடே தங்கிவிட்டன

ஒரு சப்தமில்லாத மயானம்போல்...





நாம் கடல்தீரம் கண்டபோதெல்லாம்

பல நேரங்களில் நீ என்னையே

மறந்ததுண்டு என்னப்போல்

அலைகளையும் காதலித்தவள் நீ.....



ஏதோ சில அலைகளின் சப்தம்

என் காதுகளிலும் இதயத்திலும்

ஓயாது ஒலிக்கிறது உன்னில்

நிசப்தமான என் காதலை

நினைத்துப்பாற்கையில்......



கால நேரங்களையோ

நாள் கிழமைகளையோ

கணக்கிட்டுப்பார்த்ததே இல்லை

நான் உன்னில் காதலாய்

வாழ்ந்தபோது......



காதலியின் நிறம் கேட்டால்

சிலர் கறுப்பென்பர், சிலர் சிவப்பென்பர்

உன் நிறம் சொல்ல நான் 

குழம்பிப்போனதே இல்லை சந்தனத்தை

நிறம் செல்லிக் கூப்பிடுவதில்லை....



என் மிகப்பெரும் தடாகத்தில்

ஒற்றை அன்னமாய் நீ

நீந்தி வரும் அழகில்

அடங்கிப்போனவன் நான்....



உன் நெற்றி வியர்த்தால்

என் இதயம் அவசரமாய் துடிக்கும்

பனித்துளிகளால் ஒற்றியெடுக்கச்சொல்லும்...



ஆடித்தள்ளுபடிகளில் கூட

விற்பனையாகாத அனாதையாகிப்போனதோ

என் காதல் என சில நேரங்களில்

நினைத்துப்போகிறேன்....



அது உண்மையில்லை ஏனெனில்

நினைவுச்சின்னங்களை யாரும்

விலைக்கு வாங்குவதில்லையாம்

என் காதலும் விலை மதிக்க

முடியாததுதான்.....





தொலை தூரத்தில் கூட்டமாய் 

பெண்களை பார்த்தால்

ஒரு கணம் நின்றுபோகிறேன்

உனது அசைவுகளை

எதிர் நோக்கியவனாய்....



கூட்ட நெரிசலில் கூட

உனை துல்லியமாய் அடையாளம்

காண்பேன் நான் கட்டி முடியப்பட்ட

உன் கொண்டையழகு என் இதயத்தில் 

கெட்டியாக பதிந்துபோனது....



சில யுகங்களை

கடக்கவேண்டியிருக்கிறது நமது

நினைவுகளை கனவு காண்கையில்...



பதியமிட்டுச்செல்கிறேன் சில

பாதச்சுவடுகளைப்போல் என்

காதலையும் அலைக்களிக்கப்படாமல்

கடல் அலைகளிடம்......



அன்புடன்



அபூ பஹத்..


No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...