எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்....
பெண்கள் பற்றிய உலகளாவிய பார்வை என்பது மிகவும் விசாலமானது, அதனை நெருங்கவோ அது பற்றி சுருக்கமாக விபரிக்கவே முடியாத நிலையில் பரந்துகொண்டே செல்கிறது. அடிப்படையில் பெண்கள் சுதந்திரம் என்பது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருமாதிரியான நிலையில் உள்ளது, ஆனால் அந்தந்த பகுதியை சார்ந்த பெண்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும் பாரம்பரியத்தையும் கழைந்துவிட்டபடியான சுதந்திரங்களுக்காக போராடி அதில் வெற்றியும் பெறுகின்றனர். அதே போன்றுதான் நமது நாட்டிலும் நமது பெண்கள் நமது பாரம்பரியத்தையும் வாவ்வாதாரங்களையும் இழக்கத்தயாராகவும் ஏறக்குறைய இழந்துவிட்மாதிரியான மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நிலையிலான சுதந்திரங்களை நோக்கி சென்றுகொண்டுள்ளனர்.
இன்றும் பல புதிய நவீன முறையிலான காரணங்களை முன் வைத்து பெண் விடுதலை பேசிக்கொண்டே செல்கிறது நமது பெண்ணீயம். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியதுபோல் உரிமைகளும், மதிப்பும், மரியாதையும் உலகில் எந்த மதமோ இயக்கமோ, எந்த சமுதாயமோ இன்றளவும் வழங்கவும் இல்லை, பெண்களின் பாதுகாப்பிற்கு கூட உத்தரவாதமோ அங்கீகாரமோ கூட வழங்க முடியவில்லை, அவ்வளவு பெரிய விஷயத்தை இயற்கையாகவே இறைவன் வழங்கிவிட்டான். சமூக பொறுப்பில் முக்கிய பங்கு பெண்ணிற்கு இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகவும் அதனால் பெண்ணிற்கு என கடமைகளை விபரித்தும் கொடுத்தான் இறைவன்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இஸ்லாம் அதனை ஒரு படி மேலே போய் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் முன்னோடியாய் பெண்ணின் செயல்பாடுகள் இருக்கும் வகையில் ஆணுக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணையாக இருக்க பணித்தது என்று கூறலாம்.
இஸ்லாம் கூறும் போர்களிலும் பெண்களின் பங்கு வரலாற்றின் பக்கங்களில் மின்னுகிறது. இஸ்லாம் பெண்ணிற்கு கொடுத்த உரிமைகளும் பெருமைகளும் திருக்குர்ஆனின் வசனங்களிலும், பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளிலும் தெள்ளத்தெழிவானவை.
ஆனால் நமது சமுதாய பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளும், மரியாதைகளும் உத்திரவாதங்களும் தற்போது நவீனப்படுத்தப்பட்டுவிட்டதோ என்கின்ற என் மனதில் பட்ட சில கேள்விகளும், சில நவீன பெண்ணீயம் பேசும் சல்மாக்களின், தஸ்லீமாக்களின், தமிழச்சிகளின் கருத்தோடு ஏதோ ஒரு வழியில் ஒத்துப்போய்க்கொண்டிருக்கிறதோ என்ற வருத்தமும் தோன்றுகிறது....
இஸ்லாம் சந்தித்த போர்களில் பெண்களின் பங்கு மறுக்கவே முடியாத ஒன்று. மட்டுமல்ல அவர்கள் ஆற்றிய பணியும் இதுவரை வேறு எந்த போர்களிலும் நடந்திராத நீதமானவை.
ஒரு காலத்தில் நமது பெண்கள் அடுப்படிகளோடும், பாத்திரங்களோடும் போராடி வீட்டுக்குள் அடைபட்டுக்கிடந்தனர், உலகம் சார்ந்த சமுதாயம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் எந்த அறிவும் இல்லாமல் அவை அனைத்தும் தமக்கு சம்மந்தமே இல்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது, பெண்கள் ஒரு நிலைக்கு மேல் கல்வியிலோ வேலை வாய்ப்பிலோ இல்லாமல் இருந்தனர். நமது நாட்டின் நாம் பல மத, இன, மொழி கலாச்சாரங்களோடு பெரிய அளவில் கலந்திருந்ததன் காரணத்தால் மிகப்பெரிய அளவில் மூட நம்பிக்கைகளி்ல் இருந்தபோதிலும் அவர்கள் மார்க்கம் சார்ந்த ஒழுக்கம், அமைதி மற்றும் கணவன் பெற்றோர், பிள்ளைகளின் முன்னால் நடக்கவேண்டிய நல்ல மரியாதைகள் சார்ந்த விஷயங்களில் மிகவும் பவ்யமாகவும் சிறப்பாகவும் நடந்துவந்தனர்.
இந்தியாவில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் சில மேற்கத்திய கலாச்சாரத்தின் சாயல்களோடு சேர்ந்து இந்திய பெண்கள் கொக்கரித்தபோதும் உலகளாவிய இஸ்லாமிய பெண்கள் பற்றிய கருத்தாடல்களோ, இந்திய முஸ்லிம் பெண்கள் பற்றி பெரிய குற்றச்சாட்டுகளோ யாராலும் அன்று முன் வைக்கப்படவில்லை, காரணம் முஸ்லிம் பெண்கள் பற்றி அறிவதற்கு முன்னரே இஸ்லாமிய பெண்ணீயம் பற்றி அந்த பெண்கள் அறிந்திருந்தனர். மட்டுமல்லஅன்னிய மதத்தினரால் முஸ்லிம் பெண்கள் இந்திய துணைக்கண்டத்தில் மதிக்கப்பட்டதுபோல், கண்ணியமாக நடத்தப்பட்டதுபோல் வேறு எங்கும் நடத்தப்படவில்லை, சிறிதும் பெரிதுமாக ஒரு சில பிரச்சினைகள் அல்லாது பெரிதாக ஒன்றும் அந்த விஷயத்தில் இல்லை...
ஒவ்வொரு துறை சார்ந்தும் இஸ்லாம் பெண்களோடு திட்டவட்டமாக பேசிவிட்டது, அதனோடு ஒத்துப்போகவோ அல்லது அதனை அனுசரித்துப்போகவோ முடியாத பட்ஷத்தில் தனக்கென ஒரு நியாயத்தை வகுத்துக்கொண்டு பெண்ணீயம் பேசும் பெண்களும் அதனை நியாயப்படுத்தும் ஆண்களும் உலகளாவிய அளவிலும், நம்மிலும் இல்லாமல் இல்லை. ஒரு வேளை அது அவர்களின் கருத்துச்சுதந்திரம் அல்லது நமது நாட்டின் அல்லது அவரவர்கள் வாழும் நாட்டின் வாழ்வுரிமையாக வேண்டுமென்றால் சொல்லலாம், இதனை எதிர்ப்பவர்கள் அடிப்படைவாதிகளாகவும் ஆதரிப்பவர்கள் கெளரத்திற்குரிய நவீன சராசரி மனிதனாகவும் பாற்கப்படுகிறது. அது வேறு விஷயம்...
ஆனால் எனது சந்தேகங்கள் அவர்கள் பற்றியதல்ல, நமது சமுதாய பெண்கள் கழிந்த 20 ஆண்டுகளாக பலவாறாய் பல வழிகளில், போராட்டங்கள், ஆற்பாட்டங்கள், பேரணிகள், கண்டனப்போர்கள், உள்ளிருப்பு போராட்டங்கள், மறியல் போராட்டங்கள் இன்னபிற நவீன இத்யாதி போராட்டங்களில் ஈடு படுத்தப்பட்டு தமது வீட்டு ஆண்களின் நிர்பந்தகளுக்கும் நவீன முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளின் நிர்பந்த்த்தாலும் எந்த வித ஈடுபாடும் இல்லாமலும், வீடு, சொந்தங்கள், குழந்தைகள் என பாராமல் எந்த பல மணி நேரங்கள் பொது இடங்களில் கூடி நிற்பதும் நிற்க வைப்பதும், அவர்களின் அன்றான சிரமங்களை மனதில் கொள்ளாமல் அவர்களை இதுபோன்ற நிகழ்சிகளில் களம் இறக்குவதும் அதனால் சமுதாய பெண்களை புனிதப்போர்களில் அன்றைய காலத்தில் பெண்கள் கலந்துகொண்டதற்கு ஒப்பாக பேசுவதும், எனக்கு சரியாக படவில்லை.
மட்டுமல்ல,
சமுதாய பெண்கள் ஒன்றுகூட்டப்பட்டு அவர்கள் தங்கள் பிஞ்சுக்குழந்தைகளோடும், பாலகர்களோடும் பொது இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்ளும்போது எந்த அதிகார வற்கமும் எந்த அமைதியான அரசு இயந்திரங்களும் கண்ணியத்துடன் நடத்தினரோ நமது பெண்களை அதே அதிகார வற்கமும், அரசு இயந்திரங்களும் நமது பெண்களையும் கூட பயங்கரவாதிகளாக பார்த்து அவர்களை கேவலமான முறையில் நடத்துவதும், ஆண் போராட்டவாதிகளை அடித்து நொறுக்குவது போல், நமது சமுதாய பெண்களை என் தாய்க்கொப்பானவர்களை, என் சகோதரிகளை அதைவிட அதிகமாய் கேவலப்படுத்தி உதாசீனப்படுத்தி ஆடைகள் சார்ந்த அலங்கோலங்களையும், உணர்ச்சி சார்ந்த தொந்தரவுகளையும் அந்த நேரத்தில் தொடுக்கவும், வதைக்கவும் செய்கின்றனர்....
நாம் ஒன்றும் யூதர்களை எதிர்த்து போராடவில்லை, நாம் ஒன்றும் மனிதாபிமானம் அற்றுப்போன நீதி மறுக்கப்பட்ட பூமியில் அல்லது நாட்டில் வாழவில்லை, இந்த நாட்டின் பெரும்பகுதி தவறுகளில் மதம் ஒரு பொருட்டாக நினைக்காமல் குற்றங்களை ஒன்று சேர்ந்தே செய்கின்றனர், அதில் ஒரு பெரும்பகுதி அதிகார வர்க்கத்தோடு தோளோடு தோள் நின்று கண்களை மூடிக்கொண்டு எக்காளமிடும் முஸ்லிம்களும் இல்லாமலில்லை. உளபூர்வமாக சிந்தித்து செயல்படவேண்டிய பல விஷயங்களை உணர்ச்சி பூர்வமாக பார்க்கிறோம், நம் உணர்ச்சிகளை தூண்டி விட்டு பதம் பார்க்க நமது நாட்டிலேயே பிற மதத்தை சார்ந்தவர்களும் அவர்களுக்கு துணையாய் அல்லது நமது சமுதாயத்தை சாரந்தவர்கள் அவர்களின் துணையோடும் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொதுவாகவே நமது சமுதாய மக்களின் நெற்றியில் தொழுது காய்த்த தழும்புகள் இருக்கிறதோ இல்லையோ நம்மை தீவிரவாதியாக பாற்கும் அளவுக்கு நம் மீது உலகளாவிய சமூகம் முத்திரை வைத்துவிட்டது. எனது நண்பன் ராம கிருஷ்ணனின் கையில் வேல் முதல் அரிவாள்வரை வைத்துக்கொள்ள அணுமதி இருக்கிறது, ஜெய் சிங் இடுப்பில் உடை வாள் வைத்துக்கொள்ள அணுமதி இருக்கிறது, என் நண்பன் ஐசக் கையில் கத்தியோ தற்காப்புக்காக துப்பாக்கியோ வைத்துக்கொள்ள அணுமதி இருக்கிறது, இவர்கள் அனைவர்கள் கையிலும் எது இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கவனிப்பதே இல்லை யாரும், ஆனால் எனது வீட்டின் முன்னால் வேப்பஞ்செடியை நட்டுவைக்க ஒரு குழி தோண்டுவதற்காக சின்ன கடப்பாரையோ அல்லது கூர் முனையுள்ள மரக்கம்போ வெட்டுக் கத்தியோ ஐயப்பன் அண்ணாச்சி கடையில் இருந்து ரெசீதோடு வாங்கிச்செல்ல முடியவில்லை, காவல் துறையோ அல்லது புலனாய்வுத்துறையோ, ஐ.பி, என்.ஐ.ஏ, சி.பி,ஐ என பல இலாகாக்கள் என்னை சூழ்ந்துகொள்கிறார்கள், என் வீடும், என் பகுதியும் என் பெண்களும் கண்காணிக்கப்பட்டு கேள்விகளால் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்,
தினசரி பத்திரிகைகள் முதல், இணையதள உரையாடல்கள் வரை எனது பெயர் பின் லாதின் முதல் நைஜீரிய மற்றும் ஐரோப்ப ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பேசப்பட்டுவிடுகிறது,
மாலை இதழ்கள் முஸ்லிம் தீவிரவாதி பிடிபட்டான் என்கிறது, காலை தினசரி இஸ்லாமிய பயங்கரவாதி பிடிபட்டான் என்கிறது...மறுநாள் முகம் மறைக்கப்பட்டு, துணியால் தலை கட்டப்பட்டு உலகம் பார்த்திராத பாதுகாப்புடன் நீதி மன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படுவேன்,
என் மனைவி கதறுவாள்,
என் சமுதாயத்தன் இளைஞர்கள் தவிர மற்றவர்கள் என்னை கற்பழிப்புக்குற்றம் செய்ததுபோல் இவனுக்கெல்லாம் இது தேவையா என உண்மை அறியாமல் பேசுவர்,
என் குழந்தைகள் அனாதைகளாய் சிரித்துக்கொண்டு ஒன்றுமறியாமல் எல்லாவற்றையும் அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கும்,
என் சக சகோதரன் ராம கிருஷ்ணன் என்னை சந்தேகப்படுவான்,
என் மற்றொரு சகோதரன் ஐசக் வருத்தத்தோடும் கோபத்தோடும் இவனோடா இவ்வளவு நாள் பழகினோம் என்று வெட்கத்தோடு ஒதுங்கிக்கொள்வான்.
நான் வளர்ந்த நான் சந்தோசித்து நடந்த எனது ஹிந்து கிறிஸ்தவ சமுதாய மக்களின் தெருக்களில் எனக்கு தடை விதிக்கப்படும், அல்லது நான் குற்றவாளியாகவும், பயங்கரவாதியாகவும் பார்க்கப்படுவேன். அந்த தாய்மார்கள் என்னை காறி உமிழ்வார்கள்.. நான் எல்லோராலும் தனிமை படுத்தப்படுவேன். கடைசியில் தன்னந்தனியாய் அதே தீயில் விழும் கேவலமும் நடைபெற்றுப்போகிறது...
காரணமே இல்லாமல் கைது செய்யப்பட்ட நான் உலகம் என் மீது சுமத்திய காரணங்களை தாங்கிக்கொண்டு அதனை உலகமும் எனது சமுதாயம் உட்பட அனைத்து மக்களும் காரணம் தெரிந்துகொள்ளாமலே என்னை வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர், இவைகள்தான் கழிந்த காலங்களில் 90 சதவிகித நம் நிலைமை.
இப்படி நமது ஆண்களின் நிலையே இருக்க நாம் நமது பெண்களை ஈனமற்ற முறையில் பொது போராட்டங்களில், உரிமை மீட்பு, சிறை நிரப்பல், ஆற்பாட்டங்கள், என அரசியல் உள் நோக்கத்திற்காக நமது பெண்களை சீரழிக்கவேண்டிய அவசியம்தான் என்ன, அப்படிப்பட்ட நிலைமை நமது நாட்டில் இல்லை என்றே கருதுகிறேன்..
எனது இந்த குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் பெண்களை உட்படுத்தி போராட்டங்களும், ஆரப்பாட்டங்களும் நடத்தும் நமது சமுதாய இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம், பல தியாகங்களும் இருக்கலாம், ஆனால் அவைகள் எல்லாம் நமது ஆண்கள் மட்டும் போராடுவதற்கு போதுமானதாக இருக்கிறதே தவிர நமது வீட்டுப்பெண்கள் களமிறங்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளவேண்டியதில்லை என்றே நான் கூறுகிறேன்...
இப்போதெல்லாம் நமது பெண்களையும் போராட்டக்காரர்களாகவும்,குழப்பவாதிகளாகவும் பார்க்கிறார்கள் சகோதர மதத்தினர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபர்தா அணிந்த பெண்களை கண்ணியமாக பார்த்த மக்கள் இன்று தெருவில் இறங்கி ஃபர்தாவுடன் போராடும் நமது நாட்டு பெண்களை பார்த்து மாற்று மத சகோதரர்களும் மக்களும் ஃபர்தாவை பார்த்தாலே பயங்கரவாதியை பார்ப்பது போன்றும், போராட்டக்காரர்களை பார்ப்பது போன்றும் பார்க்கின்றனர்.. பல இடங்களில் ஃபர்தா போட்டு நிற்கும் நமது தாய்மார்கள் சகோதரிகளின் பக்கத்தில் பொது இடங்களிலும் வெளியிலும் நிற்பதற்கும் பேசுவதற்கும் கூட மக்கள் பயப்படுகிறார்கள்....
இந்த நாட்டில் எந்த குண்டுவெடிப்பும் ஃபர்தா அணிந்த பெண்களோ, அல்லது எந்த கலவரமும் ஃபர்தா அணிந்த பெண்களாலோ வரவில்லை.
இந்த நாட்டில் ஃபர்தாவை பார்த்தால் ஒரு பயம் ஏற்படும் நிலைக்கு மாற்று மதச்சகோதரிகளையும், சகோதரர்களையும் கொண்டுபோன நிலை என்ன....??? நமது சோகாதரிகள் எங்காவது தீவிரவாதம் செய்தார்களா...??? நமது சகோதரிகள் எங்காவது இந்த உலகின் சிறந்த உடையை தவராக பயன் படுத்தினார்களா...??? நமது தாய்மார்கள் மாற்றுமத மக்களை இந்த உடையால் கொடுமை படுத்தினார்களா...??? நமது மார்க்கமும் நமது பெண்களும் மாற்றுமத பெண்களை இந்த உடை அணிய கட்டாயப்படுத்தினார்களா...??? எதுவுமே இல்லையே...
பின் ஏன் இந்த உடைக்கும் நமது சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் அச்சுறுத்தல்கள் அதிகம் ஏற்படுகிறது...??? மேற்கத்திய நாடுகள் ஃப்ராதவுக்கு கூறும் காரணங்களையும் அவர்கள் தடை விதிப்பதையும் உலகம் ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளப்போகிறதா என்ன... அவர்கள் நமது கண்ணியமாந உடையை தவறாக காரணம் காட்டுவது இது புதிதல்ல. அது அவர்களின் சாதாரண வேலை..அதனை நமது நாட்டு பிரச்சினைகளோடு சேர்க்கவா முடியும்..
கண்ணியமான உடைகள் இன்று இருவேறாக பார்க்கப்பட காரணங்கள் என்ன...???. மரியாதைக்குரிய நமது தாய்மார்களான கன்னியாஸ்திரீகள் உடை அணிந்து செல்லும்போது அனைவரும் அவர்களை முன்புபோலவே இணக்கமாகவும் மரியாதையுடனும் கண்ணியத்தோடும் அணுகுகிறார்களே... சமூக விரோதிகளால் ஏற்பட்டுப்போன ஒரிரு சம்பவங்களைத்தவிர அவர்கள் இன்றளவும் கண்ணியத்தோடு பார்க்கப்படுகிறார்களே...
..
என் சக சகோதரர்கள் தயவு கூர்ந்து என் மீது கோபப்படாமல் சிந்தித்துப்பாருங்கள். நான் ஒன்றும் இதனை ஒரு விவாதத்திற்காகவோ, குற்றம் சொல்வதற்காகவோ கூறவில்லை, மாறாக நமது உணர்ச்சிகளுக்கும் கோபத்திற்கும் நமது பெண்களையும் தெருவில் இறக்கி போராடுவது எந்த வகையில் கண்ணியமானது.. எந்த வகையில் நியாயமானது... போராட்டங்களில் கலந்துகொள்ளும்போது எவ்வளவு பெரிய ஜனநாயக நாடாக இருந்தாலும், ஜனநாயக அறப்போராக இருந்தாலும் எதிரில் இருப்பவர்கள் அசம்பாவிதமோ கலவரமோ ஏற்படுத்தவே செய்வார்கள், போர் நியாயங்களை சரியாக கடை பிடிக்க அவர்களுக்கு தெரியாது அறப்போர் நடத்தினாலும் ஆயுதப்போர் நடத்திநாலும் அழிவு என்பது இரு பகுதியிலும் ஏற்படும், நாம் நமது பெண்களை தேவையில்லாமல் களமிறக்கிவிட்டு போர் நியாயம் பேச முடியாது...அரக்கர்களும், அதிகார வற்கமும் செய்வதை செய்துவிட்டு பின் மன்னிப்பு கோருவர்...இதனால் நமது பெண்களின் காயங்கள் ஆறிப்போய்விடுமா...
கழிந்த 20 வருடங்களில் உருவாகிப்போன முஸ்லிம் இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும் மாறி மாறி தத்தமது தொண்டர்களின் குடும்பங்களை போராட்டத்திற்காகவும் மேற்கூறப்பட்ட அனைத்து நிகழ்சிகளுக்காகவும் தெருவிலும் பொது சாலைகளிலும் ஆண்களுக்கு நிகராக நிருத்தி வைத்து கோஷம் எழுப்ப வைத்து, பல தடியடிகளில் கலர வைத்து தமது தியாகங்களை பல முறை பதிவு செய்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை இது ஒரு சாதனைக்கான அல்லது தத்தமது இயக்கங்களின் வரலாற்று ஏடுகளில் பொறித்துவைத்து மார் தட்டிக்கொள்ள ஏதுவாகும், ஆனால் அவை நமது பொறுமையை சோதனை செய்தவையாகவே காண முடியும், முஸ்லிம் ஆண்களின் நெஞ்சுரக்குறைவையே சொல்கிறதே அல்லாது அதனை வாழ்த்தவோ ஒத்துக்கொள்ளவோ முடியவில்லை...
நமது நாட்டில் வாழவே முடியாத அச்சுறுத்தல்களும், பேசவே முடியாத பேச்சுரிமை பறிப்பும், ஜீவாதார உரிமைகளும் ஒரு பெரும் சக்தியால் தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டால், நமது பெண்கள் குழந்தைகளின்உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படுமாயின் ஒரு புரட்சி தேவைப்படும் பட்ஷத்தில் இநி வாழவே முடியாது எனும்போது நமது பெண்களும் போராடவேண்டி வரலாம். ஆனால் அப்படிப்பட்ட எந்த விஷயங்களும் நமது நாட்டில் இல்லையே... இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு, இஸ்லாமிய பெண்களின் மதிப்பு, அவர்களின் நடத்தை பற்றியெல்லாம் மேடை மேடையாக பேசுகின்ற தலைவர்களும் ஆலிம்களும் இயக்கங்களும்தான் இப்படிப்பட்ட விஷயத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்பதும் வருத்த்த்திற்குரியது.
அதனால்தான் சொல்கிறேன், நமது பெண்கள் கண்ணியமானர்கள், அவர்களை கண்ணியமான நிகழ்சிகளில் பங்குகொள்ளச்செய்வோம். மார்க்கம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அதிகம் கவநம் செலுத்தச்செய்யலாம், நமது உள் கட்டமைப்பில் மட்டும் அவர்களை ஒதுக்கி வைக்க நினைப்பது எந்தவகையில் நியாயம். உள் கட்டமைப்பில் உள்ள பெண்களுக்கான மார்க்க விஷயங்களில் அவர்களை அதிகம் ஈடுபடுத்தி அவர்களின் மூலமாக மாற்று மதச்சகோதர சகோதரிகளும் நமது பெண்களை சக மனுஷியாக பழகும் நிலையை உருவாக்கவேண்டும்....
ஆரம்பத்தில் இஸ்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்தகொண்டனர் நமது சகோதரிகள், அதன் பலனாக நம்மால் எதிர் பார்த்திராத விளிப்புணர்வும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடிவும் ஏற்பட்டது. இறையியல் கல்வி விஷயத்தில் அந்த அளவுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவுக்கு அதிகமாக பெண்கள் வரவில்லை என்றாலும் மகளிர் இறையிய்ல் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் அதன் மூலம் இஸ்லாமிய கல்வியில் கற்கவும் பெண்கள் முன் வந்தனர். உலக கல்வியில் அளப்பெரிய மாற்றங்கள் வந்துவிட்டமையால் தற்போது இறையியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க நமது தாய்மார்கள் மறந்தும் மறுத்தும் வருகிறார்கள்... முஸ்லிம் பெண்களில் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை கற்றுக்கொள்ளவும் தமது பில்ளைகளை கல்விச்சாலைகளில் சேர்க்க நமது தாய்மார்களும் பெற்றோர்களும் மறுத்து வருகின்றனர். இறையியல் கல்வியை பயிற்றுவிக்க ஆசிரியைகளும் அதிகம் பற்றாக்குறை இருந்துவருகிறது... அதிகமாக நமது பெண்களை பொது மற்றும் உலக கல்வியை கற்றபின் வேலைக்கு போக முடியாத சூவ்நிலை ஏற்பட்டுவிடுகிறது, அப்போது இதபோன்ற இறையியல் கல்விச்சாலைகளில் பயிற்றுவிக்க நல்ல வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுக்க முடியும்....
அதிகமாக நமது சகோதரிகள் இப்போதெல்லாம் உலக கல்வியிலும் தொவில் முறை கல்வியிலும் பட்டம் பெற்று வருகின்றனர். அதற்கு சரியான அங்கீகாரமாக நல்ல வேலைகள் கிடைப்பதும் இல்லை, அப்படியே கிடைத்தாலும் ஆண்களுடம் கலந்து வேலைபார்க்கும் சூழல் மிகவும் மோசமாக இருப்பதலும் நமது பெண்களோ அல்லது பெண்களே நடத்தும் நல்ல நிருவனங்களை உருவாக்கி அதில் அவர்களை வேலை பார்க்கவும் நல்ல ஊதியம் பெறவும் வாய்ப்பிருக்கிறது....
இப்படி ஒரு நல்ல விளிப்புணர்வை கொடுப்பதாலும் வெற்றிப்பாதையிலும் நமது பெண்களை கொண்டுசென்றால் அதுதான் நமது பெண்களின் மகிழ்ச்சியும் நாம் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமுமாக இருக்கும்...மாறாக சமுதாய, சமூக, அரசியல் விஷயங்களில் அவர்களை கருத்து கூறவைக்கலாமே தவிர அவர்களின் ஆலோசநைகலை பெறலாமே தவிர அவர்களை அவர்களின் இயற்கையான உடலமைப்பிற்கும் அவர்களின் பலவீனங்களு்க்கும் மதிப்பளித்து அவர்களை இதபோன்ற தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின்மீதான மரியாதையையும் கண்ணியத்தையும் குறைப்பதும் கேவலமான அரசியல் செய்வதும் மிகவும் தவறான நடைமறையாகும் என்றே வருத்தத்துடன் கூறுகிறேன்...
எனது பார்வையில் எனது சமுதாய பெண்கள் சிரமப்படுத்தப்படுவதாகவும் அவர்களே சிரமப்படுவதாகவுமே தெரிந்ததால் எழுதினேன். இக்கட்டுரையில் தவறுகள் இருந்தால் மன்னி்த்துவிடுங்கள்... விஷயத்தை உங்களுக்கு பிடித்தாலும் இல்லையெனினும் விமர்சியுங்கள்...
அன்புடன்
அபூ ஃபஹத்..
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...