Nov 27, 2010

வெடித்துச்சிதறல்கள்...

வெடித்துச்சிதறிய

வெடிகுண்டு சிதறல்களுக்கிடையில்

துடித்துக்கொண்டிருந்தது  

ஓர் இதயம் 
அள்ளி எடுத்துச்சென்ற

உடற்சிதறல்களிலும் தெரியவில்லை

துடித்துக்கொண்டிருந்த இதயத்தின்

ஜாதியோ மதமோ..



ஒரு முறை 
வெடித்துச்சிதற வேண்டும்

என்னையும் அறியாமல் நான் 

மதங்களையோ மனங்களையோ

மறந்து விலாசமற்று ஒதுக்கி வைக்கப்படும்

என் உடல் சிதறல்களை

உயிரின்றி காணவேண்டும்....



என் உடல்தேடும் உறவுகளும்
 என் ஜடம் தேடும் அரசுகளும் 
அறிவரோ நான் சிதறிப்போனது 

எதற்கென்று – எனை அறிவிப்பரோ 

நான் வெடித்துப்போனது எதற்கென்று...



சில துடிக்காத இதயங்களில்

தேங்கிப்போன ஆதங்கங்கள்

வெடிக்காத பல வெடுண்டுகளாய்

அனாதைகள் ஆக்கப்பட்டுப்போனதும்

காரணங்கள் புதைக்கப்பட்டு போனதும்தான்...



என் முகம் பார்த்து சிரித்த

முன்னிருக்கை குழந்தையின்

இதயம் தேடிக்கிடைக்குமோ

அதில் மூடியிருக்கும் கொஞ்சம்

புன்னகையைக்காண....



வெடித்தவனும் சொல்லவில்லை

செத்தவரும் அறியவில்லை – இலட்சியமில்லாத

ஒருவனால் அழிக்கப்பட்டது

பல லட்சம் ஆசைகள் கூடவே

இலட்சியங்களும்....



கொடுமையென்பர், கண்ணீர் அஞ்சலியென்பர்

எங்கள் உயிர் போனபின்

காணிக்கையென்பர் எங்கள்

கைகளில் தராமலே – கடைசியாய்

சில துளிகள் மட்டும் கண்ணீராய்...



வருடம்தோறும் நினைவு நாட்களில்

ஒதுங்கிப்போகும் ஒர்மையாகிப்போன

அந்த வெடித்துச்சிதறல்கள் – அனாதையாய்

கேட்பாரற்றுக்கிடக்கும்

தேங்காய் ஓடுகளைப்போல்...



 சிலரின் தேவைகளுக்காய்

பந்தாடப்படும்போதும் அறிந்திருப்பதில்லை

ஒரு தேவையற்றுப்போன பெயர்கொண்டவன்

நான் என்று....



சில பல பொறுப்புகள் 

வெறுப்புகளாய் பார்க்கப்பட்டு

பல கோடி லட்சியங்கள்

அறுத்தெறியப்படுகிறது ஒரு

குண்டு வெடிப்பில்

லட்சியமில்லாத பாவிகளால்...



என்றும் பிரியமுடன்



அபூ ஃபஹத்..


No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...