கைகளில் அடைபட்ட
ஸ்டீயரிங் சுத்துகிறதோ இல்லையோ
அரை தூக்கத்தில் கண்கள்
கிறங்கடிக்கும்...
ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும்
குறைவே இல்லை
வண்டியை ஓட்டத்தெரியாத பின்னிருக்கை
எஜமானியம்மாக்களுக்கு...
கழைப்பாற நேரமே
கிடைப்பதில்லை வெறும் றுகி
கழைப்பே தொழிலாகிப்போனதால்..
செவிக்குணவில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் - இங்கே
விஷ வார்த்தைகள் செவிக்குணவாய்
சிறுகிப்போனது வயிறு
சிறிது வயிற்றுக்கு ஈயாததால்....
அழகானதொரு அறையும்
படுக்கையும் - அது என்றும்
அழுக்காக மட்டுமே இருக்கிறது
துவைக்கவும் அடித்துவாரவும்
நேரமில்லாததால்....
தூங்குவதும் எழுவதும்
ஒரே நேரம் - எப்போதாவது
நகம் வெட்டும்போது மட்டும்
ஞாபகம் வரும் காலெண்டர்
துண்டுகள்....
அசதியால் உறங்கிப்போகும்
சில நேரங்கள் - அது
ஏதோ ஹைப்பர் மார்கெட்டுகளின்
வெளியோர இருக்கைகள் அறியும்...
எந்நேரமும் அழைப்பொலி வரலாம்
காதுகளும் கண்களும்
திறந்தே இருக்கவேண்டும்...
சான்ட்விட்சுகளில்
ஒதுங்கிப்போகும் காலை உணவு
இரவைக்கடந்தும்
கானலாகிப்போகும் மதிய இரவு உணவுகள்....
சில பல நாட்களில் தூக்கம் என்பது
கனவுகளாகிப்போவதுண்டு
இடையில் யாரை நினைப்பதோயாரை மறப்பதோ....
நிமிடங்களில் ஒதுங்கிப்போகும்
தொலைபேசி அழைப்புகள்
மனைவி மக்களின்
பொருட்தேவைகளுக்கு முன்னால்
கண்ணீர் துளிகளாய் கரைந்து போகும்
பாசமும் நேசமும்...
வெப்பமும் குளிரும்
தாக்குவதே இல்லை - மரத்துப்போன
சருமங்கள், மறந்துபோன
கால நிலைகள்....
ஒரு நீண்ட விடுப்புக்கான
காத்திருப்பு - அது
நெரிசலான வாகனங்களை
சீறிப்பாய்ந்து கடக்கும்போதும்
நிழலாய் ஓடுகிறது சில பழைய
கண்ணாடி வைப்பர்கள்போல்...
சில சில்லரை கனவுகளும்
ஒரு பெட்டகமுமாய் தன்
தாயகம் நோக்கிய பயணம்
சில பல எதிரபார்ப்புகளும்...
கருணையாய் ஒரு கடைசி
பார்வை தன் வயதான
ஏதுமறியா எஜமானை நோக்கி...
கொடுமைகளும் வலிகளும்
வலிமையாய் ஆட்கொண்டுவிட்டபோதும்
சிரமமாகவே விடைபெறுகிறான்
ஏதோ சில உறவுகளை
அநாதையாக்கிச்செல்வதைப்போல்
ஒட்டி முடிக்கப்பட்டது ஒரு
வீண் வாழ்க்கை......
அன்புடன்
அபூ ஃபஹத்...
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...