அனைவரும் மன்னிக்கவும்..
இந்த கவிதையை எவ்வளவோ சுருக்கியும் நீண்டுகொண்டேதான் போகிறது...
பெண்களின் தனிமையின் வலிகளும் அப்படித்தானோ...
இந்த கவிதையை முழுக்க முழுக்க இணையதள சிந்துபாத்களுக்கே அற்பணிக்கிறேன்...
**********************************************************
என் ஆசை மச்சானுக்கு,
அன்புக்கணவா
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்.....
கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....
மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்.....
குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....
கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதித்த "முத்தங்கள்"
எனும் வார்த்தையில்
வெட்கத்தை மறந்து முகம் பதிப்பேன்......
நான் இணையம் அறியாதவள்
எனத்தெரிந்தோ என்னவோ நீ
எனக்கெழுதவேண்டிய உன் வலிகளை
ஊருக்கு எழுதுகிறாய் - உனது
வலிகளைக்கூட என்னோடு பகிர மறுக்கிறாய்....
நான் படிப்பதற்காய் உன் கடிதம்
காத்திருந்த காலங்களில் நீ
பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று
பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம்
இணையப்பக்கங்களில்......
இரண்டு வருடமாய் கேட்கிறேன்
உன் கைப்பட ஒரு கவிதம் - எனக்கு
நேரமில்லை என்கிறாய் எப்போதும்
இணையதளத்தில் இருக்கும் நீ.....
யாம் பெண்கள் - எமது
தனிமை வெறும்
வார்த்தைகளால் முடிவதில்லை.....
ஒவ்வொரு முறை நீ
ஊர் வரும்போதும் நம் குழந்தை
உனை யாரோ என புதிதாய் பார்க்கிறது - தாய் நான்
பெற்றேன் ஆனால் தந்தை நீ
வளற்கவில்லையே.....
ஊர் வந்து நிற்கும் நாட்களிலாவது
எங்களுடன் வீட்டோடு
இருப்பாயோ நீ - உன்னோடு
வந்தவர்களுடன்
ஒன்றாய் ஊர் சுற்றுவாய்....
யாருமற்றவர்களுக்கு
எப்போதாவது கிடைக்கும் அன்னம்போல்
நீ தரும் தவணை முறையிலான
அன்பை வெறுத்துத்தான் போகிறன்
பல நேரங்களில்.....
தினம் தினம் தலையணைக்குள்
புதைந்துபோகும் எமது
தனிமையின் தாகம் - யாரையும்
அறிவிப்பதற்கு தெரியாமல்
இரவுக்கண்ணீராய்....
எழுதித்தீர்க்கும் நேரங்களையாவது
எம்மோடு களிக்கலாம் - வா
உனதும் எனதுமான தனிமையை
களைவோம்
நமக்காய் ஒரு விரகமற்ற
வாழ்க்கை காண்போம்.......
வருத்தங்களோடு
அன்பின் மனைவி....
--------அபூ ஃபஹத்______
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...