வரன் தட்சனை
***********************************
வந்த விபரம் சொல்லுங்கோ
என சத்தமாய் கேட்டது – பையனின்
உப்பாவாம் குடும்பத்தில் காரணப்பாடாம்...
எம்மகளுக்கு உங்க பையனை
நிச்சயம் பண்ண வந்தோம் – ஒரு
பணயக்கைதியைப்போல்
பெண்ணைப்பெற்றவனின்
ஒசை குறைந்த பதில்.....
குடுக்கல் வாங்கல்கள் எல்லாம்
பேசி முடிச்சாச்சா – மாப்பிள்ளையின்
தாய் மாமானாம் ஏலமிடப்படும்முன்
மணியடிப்பவன் போல்.....
எங்கட்ட உள்ளதை
புள்ளைக்கு குடுப்போம் – பெரிதாய்
பேச்சுக்கு குறைவில்லாத
பெண்ணின் குட்டியாப்பாக்கள் கூட்டத்தில்
மானம் காக்க வெறும் வாய் வார்த்தைகளாய்....
றேடோ வாட்சும் தங்க செயினும்
பெண்ணின் தம்பியிடம் – வாங்கிய
அடி மாட்டின் கழுத்தில் கட்டி
இழுத்துச்செல்ல காத்திருக்கும்
மாட்டிடையன்போல்....
கல்யாணத்தண்ணக்கி காலைல
மாப்பிள்ளைக்கு கார் வந்திருமில்ல – சைக்கிளுக்கே
போக்கத்தப்பயலுக்கு
சான்ட்ரோ கேக்குதோ என
யாரோ முனகியது கேட்டது....
50 பவுனும் 8 சென்ட் மனையும்
அதில் ஒரு வீடும் - ஏற்கெனவே
பேசினதில் மாற்றமில்லை,
பரோக்கர் பயலின் ஓசை
பல முறை கேட்டது.......
பெண்ணைப்பெற்றவன்
திண்ணையும் தெருவும்தான் – இதோ
நமது தெருக்களில்
அநாதை தந்தைகள்......
ஏய் ரோஷமில்லா இளைஞனே
நீ விலைபேசப்படுகிறாய் – சில
விலைபோகாத அடிமாடுகளைப்போல்....
ஏய் மானம் கெட்டவனே
மரித்துப்போனதோ உன் மனிதம் – சிரைத்த
மீசைக்குள் அடங்கிப்போனதோ
உனது ஆண்மை.....
கந்தக பூமிகளில் கால் பதித்து
கரைத்த எமது இரத்த நாளங்கள்
மின்னித்தீற்கிறது உன்
கைகளிலும் கழுத்திலும்.....
ஆண் மகனோ நீ
வரதட்சனை வேண்டாம் எனச்சொல்
ஆண்மை கொண்டவனாய் நெஞ்சை
நிமிர்த்தி நில்..................
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...