பொக்கிஷங்கள்....புகைப்படங்கள்....
------------------------------------------------
ஒலைகள் கோர்த்த
என் ஒட்டடைக்குச்சியில்
மாட்டிக்கொண்டது கனமானதொரு
கண்ணாடித்துண்டு......
பரண்மேலேறி வெளியே
எடுத்துவைத்தேன் - வெறும்
கண்ணாடித்துண்டுகளல்லவை
ஏதோ ஒரு கதை சொன்னது
மரச்சட்டங்களாய் கூட்டப்பட்ட
அந்த மரியாதைமிகு கண்ணாடி.....
"ஏண்டா அதை எடுத்தே இப்போ"
எனும் என் பாட்டியின்
வார்த்தைகளில் சில்லென
உடைந்தது கண்ணாடியல்ல - என்
ஹிருதயம்தான்....
சிலந்திகளின் வாய்பிசின்கள்
தூசுகளில் கலந்து கண்ணாடியை
சாம்பல் நிறத்திலாக்கியிருந்ததில்
மழைச்சாரலைப்போல் ஆங்காங்கே
சில வெறும்புள்ளிகளும்.....
என் பிம்பம் அதில்
தெரியவே இல்லை - எனினும்
சில முந்தைய முகங்களை என்
முகத்தில் நிழலாடவைத்தது....
என் நகக்கீரல்களை அதில்
சிறிதாய் பதித்தேன் - கண்ணாடி
லேசாய் அழகறிந்தது
என் நகக்கண்ணும் அழுக்கானது....
ஏதோ ஒரு பழந்துணியில்
தண்ணீர் தோய்த்து துடைத்தபோது
கண்ணாடியினுள் சிலரின்
கண்களில் வெள்ளைப்பட்டிருந்தனர்....
கிப்பித்தலையும் முண்டா மீசையும்
முளிக்கண்களுமாய் முகங்கள் - நேற்றைய
கோலங்கள் பார்த்து
சிரித்து முடித்தபோது
யாரிவர்களென்றறியத்தோன்றயது...
என் முக பாவங்களை
எட்ட நின்று கவனித்திருப்பாள் போலும்
என் மூதாட்டி வாப்பும்மா - இதுதான்
உங்கப்பன், அப்போ சொன்னா
கேக்கமாட்டான்,
திண்டுக்கு முண்டுதான்.....
வலது பக்கத்தில மாமா
கிப்பி ஸ்டைலு - இடது பக்கம்
சித்தப்பா திமிரு புடிச்சவன்...
குறுக்கே கீறல் விழுந்திருப்பதறியாமல்
விரல் பதித்து தடவியபடியே சொன்னாள்
பின்னால கம்பீரமா நிக்கிறதுதான் உங்க தாத்தா- கண நேரம்
அந்த கிழட்டு வெட்கத்தில் நான்
கிறங்கித்தான் போனேன்.....
கை விரல் சிராய்ந்த இரத்தம்
கண்ணாடியின் முகத்தில் - நான்
ஆ' வென்பதற்குள் விழுந்தது
இன்னும் இழமை மாறாத கண்ணீர்
வயதான விழியிலிருந்து
பல தலைமுறை தாண்டிய
எண்ணச்சிதறல்களாய்...
ஏய் என் தலைமுறையே நீ
எங்கே தேடுகிறாய் உன் அதீத
வீரத்தின் வேர்களை - உன் அபார
புத்தியின் வழித்தடத்தை...??
நீ உப்பாவைப்போல என யாரோ
சொல்லித்தெரிவதற்குள் உன்
உப்பாவைத்தெரிந்துகொள்
உன் வீட்டுப்பரண்களில்
சாம்பல்நிறக்கண்ணாடிச் சில்களி்ல்
தூங்கலாம் உனைதுளிர்த்தெழவைக்கும்
சில கேட்பாரற்றுப்போன புகைப்படங்கள்...
சில்லறைச்சாரல்களோடு
சிலந்தி வலைகளுக்குள்
அடைபட்ட புகைப்படங்கள்
பல தலைமுறை பொக்கிஷங்கள்.......
அன்புடன்
அபூ ஃபஹத்
Jul 31, 2012
புகைப்படங்கள்....பொக்கிஷங்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...