Feb 4, 2014





பாராமுகங்கள்....
****************
பார்த்தும் பழகியும் 
உண்டும் களித்தும் 
கொண்டும் கொடுத்தும் 
நேற்றுவரை ஒன்றாய் நடந்த 
பல முகங்கள் இன்று
பாரா முகங்களாய் 
காரணங்கள் சொல்லாமல்
ஒதுங்கிச்சென்றுவிடுகிறது...

நான் நிற்குமிடம் அவன்
வருவதில்லை - அவன்
இருப்பிடம் சென்றால்
அவன் இல்லையென்று
சொல்லிச்செல்லும் யாரோவின்
முகங்களினின்றும் தெறித்து
வீழ்கிறது அவன் உள்ளேயே 
இருப்பதற்கான 
வெட்கத்தின் சமிக்ஞைகள்....


எனினும் அவர்களில்
நம் இதயங்கள் பரிதவித்து
எதிர்நோக்குவது பாரா
முகங்களையல்ல காரணங்களற்ற
பழைய முகங்களை மட்டுமே....


டீக்கடை வாசலில்
பேருந்து நிறுத்தத்தில்
இரயில் நிலையத்தில்
என எதேச்சையாய்
எதிர்நோக்கும் பல முகங்கள்
பாராத முகங்கள்தான்....

நான் மட்டுமே சுவாசித்து
முடிப்பதற்கல்ல இந்த காற்று
நான் மட்டுமே வாழ்வதற்கானதும்
இல்லை இந்த பிரபஞ்சம்....


எனினும் ஏதோ பரிச்சயமானதாய்
தோன்றுகையில் இதயம்
பார்த்த முகங்களை
உதடுகளால் லேசாய்
புன்சிரித்து வைக்கிறது.....

பரிவின் பாஷை கண்ணீர்
என்றால் பிரிவின் பாஷையும்
கண்ணீரே.....
விழிகள் நீந்தும் கண்ணீரே.....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...