நிதர்சனங்கள்...
------------------------
வாழ்க்கையின் வழிதேடி
நான் வழைகுடாவில்
தொலைத்ததென்னவோ வருடங்களை
மட்டுமல்ல - கூடவே
வாழ்க்கையையும்தான்......
விளையாடித்தீர்த்ததால் வீணாகிப்போனது
வேலைதேடும் வயது – நான்
வேறு வழிகளின்றி
விழி பிதுங்கி நிற்கிறேன்....
விண் முட்டும் விலைவாசி
என்றாள் மனைவி – கண
நேரத்தில் என் விரல்
தொட்டு நின்றது வியர்வைத்துளிகள்.....
அவளின் அடுப்படியில்
அலறும் என் அலைபேசி
அழைப்புகள் – யாரும்
கேட்பாரற்றுப்போகும்
என் பரிதவிப்புகள்.....
ஒலிவந்த திசை நோக்கி
அவளின் கோபத்தின் உச்சம் - சில
சில்லறை வார்த்தைகளோடு
"" ம் சொல்லுங்க
நேரம் கெட்ட நேரத்துல"".....
ஊர் வருவதாய் சொன்னபோது
அவளுக்க மகிழ்ச்சிதான்
எனினும் வருவதெப்போதென்று
அறிவதற்குள் அவள் பால் மாவு
கேட்கிறாள் - கூடவே
டைடும், சோப்பும்,
பேஸ்ட்டும் பாலாடைச்சட்டியும்....
சலாம் சொல்ல மறந்த மகன்
வாங்கிக்கேட்டது சோனி
பிளே ஸ்டேஷன் – கூடவே புதிய
சாம்சங் ஐ.பேடும்....
எலக்ட்ராணிக் கைத்தடியாம்
சும்மா மடங்கி விரியணுமாம் – பளிச்சென
பிரைட் லைட்டும்
சிலோண் பெல்ட்டும்
எடுத்த எடுப்பில் உப்பா கேட்டார்.....
வாசலின் இல்லாமல்
வாசல் மிதிக்கவேண்டாம் – கொஞ்சம்
வாசனையுள்ள பிரில் கிரீமும்
மச்சான் அடம் பிடித்தார்....
மாமாவுக்கு குடையும் வேணும்
பாங்கோசை கேட்காத
காதுகளை குடைந்தெடுக்க
ஜாண்சன்ஸ் பட்ஸும் வேணுமாம்....
பாவம் மாமி வேறென்ன
கேட்டுவிடப்போகிறாள் – "சந்தோஷமாய்
வந்து சேருங்கள் போதும்"
மறந்துவிடவேண்டாம்
சான்யோ அடுப்பு மட்டும்.........
இந்தியன் மணி கொண்டுவா
ரெண்டு காறுக்கும் வாடகை
தரவேண்டும் – டிரைவரும்
தன் பங்கை சொன்னான்....
கடைசியாய் என்
இரண்டு வயது மகள் சொன்னாள்
""நீ வா வாப்பா சீக்கிரம்"" முழுமை
பெறாத வார்த்தைகள் செல்லமாய்
மூன்று முத்தங்களோடு...
வயதான என் வாப்பும்மாவும்தான்
ஆபத்தெடங்கேறில்லாமல்
“நீ வா வாப்பா சீக்கிரம்"" - முழுமை
பெறாத வார்த்தைகள் செல்லமாய்
மூன்று முத்தங்களோடு.......
வாழவே வெறுத்துப்போகும்
பல நேரங்களில் மனதை
நனைப்பது குழந்தைகள்மட்டுமல்ல -
குழந்தையாய் மாறிப்போன
வயோதிகரும்தான்...
பேசி முடித்தபோது என் காதுகளில்
ஒர் ஒற்றை மணிச்சத்தம் – கண்
இமைக்கும் நேரத்தில்
காத தூரத்தில் என் அலைபேசி
சைக்கிளில் பயணித்தது
களவாணிப்பயலின் கைகளில்....
கைகளில் குப்பூஸ் கட்டும்
2 ரியால் தயிர் புட்டியும் - அடுத்த
வேளை உணவை முடிக்க
விடுமுறை பற்றி
ஒரு முடிவுக்கு வராதவனாய்....
அன்புடன்
ஆபூ ஃபஹத்
Jun 26, 2012
நிதர்சனங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...