சாயா கொண்டாம்மா
எனத்துவங்கும் நம் வீட்டு
விடிகாலைகள் - சில
மறுக்கமுடியாத இருமல்
சத்தங்களோடு....!!
கிழவிக்கு ராத்திரி
ஒறக்கமே கிடையாதோ - புதிதாய்
நேற்று மணமாகி வந்த
பேத்தியின் பொருமல்...!!
நேரம் வெளுக்கறதுக்குள்ளே
வெத்தலை தட்டணுமா - இடி சத்தம்
காதுகளை துளைத்த கோபத்தில்
தூக்கம் கலைந்த மகன்...!!
எங்கயோ தண்ணி பாயிற சத்தம்
கேக்குது பைப்பை பூட்டும்மா - இந்த
வயசிலயும் காதுக்கு
ஒரு குழப்பமும் இல்லை,
வேலைக்காறியின் முணுமுணுப்பு...!!.
தேங்காயை வெட்டி
லைன்ல போட்டுராம பாருப்பா,
கறண்டு போனா பெரும்பாடு – வீட்டின்
உள்ளே இருந்தாலும் நம்மள
வாழ விடாது வயசம்மா,
தென்னை ஏறுபவனின் கரகரப்பு...!!.
அம்மா பசிக்குது
ஏதாச்சும் குடுங்கம்மா - நேத்துதானே
இவ வந்தாள் வேற மாறி கேக்கச்சொல்லு,
கெழம் மண்டையைப்போடாதோ
பிச்சைக்காரியும் பிறுபிறுத்தாள்....!!
சில பட்டியலிட முடியாத
நமது விடுதல்கள் – வயதானபோதும்
வாப்பும்மாக்களின் நினைவு படுத்தலில்
நாம் ஒத்துக்கொள்ள மறுக்கும்
அன்றாட தவறுகள்.....!!
கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல் இன்றைய
இளைய தலைமுறைகள் – இன்றும்
கிளடுகள் இல்லாத வீடுகள்
சில தறிகெட்டோடும் காளைகளைப்போல்....!!.
ஒவ்வொரு முறை கோபப்படும்போதும்
நாம் மறுத்துப்போவது அவர்களின்
அனுபவங்களை மட்டுமல்ல
எழிதில் தேடிக்கிடைக்காத வாழ்க்கை
தத்துவங்களையும்தான்....!!
வயதான வாப்பும்மாக்களை வீட்டுக்குள்ளேயே
நாம் தொலைத்திருக்கிறோம் – யாரும்
கேட்பாரற்று இருட்டறைகளில்
அனாதையாய் அடைபட்டுப்போன
பழைய பொக்கிஷங்களைப்போல்....!!
நிபந்தனைகளற்ற நிதர்சனங்களாய்
இன்றும் தலைமுறைகள் தாண்டி
வாப்பும்மாவின் வார்த்தைகள் சில
வாழ்க்கைக்குறிப்புகளாய்...!!.
சந்தன நிற குப்பாயமும்
வெள்ளைக்கவுணியும் நீலச்சாரமும்
இடுப்பில் வெள்ளி அறிஞாணமுமாய்
மீண்டும் வாப்பும்மாக்கள் புதிய தலைமுறைக்கு
வாழ்க்கை சொல்லட்டும்..............!!!!!
அன்புடன்
அபூ ஃபஹத்
Jun 26, 2012
வாப்பும்மா.. பாட்டிம்மா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...