Jun 1, 2012


மனைவி......
***********************

அன்பே என அழைத்தால்
ஆசையாய் புன்சிரிப்பாள் – சில
நேரங்களில் ஆத்திரமும் கொள்வாள்....

கண்ணே என்றால் காரிகை
அவள் கண் சிமிட்டி
முறைத்துக்கொள்வாள் – ஏதோ
சொல்லி முணுமுணுப்பாள்...

மனதில் அன்பு ஆற்பரித்தால் எனை
பெயர் சொல்லி அழைப்பாள் – ஏதும்
சினத்தில் சிக்கிக்கொண்டால்
ஊரார் பெயரெல்லாம்
சின்னாபின்னமாகும் எனினும்
என் பெயர் சொல்ல மறுப்பாள்.....


பாத்திரங்கள் அடுப்படியில் அவள்
ஆத்திரத்தால் அலறித்தெறிக்கும் – சிலதை
அனுபவித்தறியவேண்டும் அருகில்
மிக அருகில் அவள்
கோபத்தின் உச்சத்தையும்.....

துக்கை என கொஞ்சமும் திக்காமல்
திட்டித்தீர்ப்பாள் தொட்டிலில்
கீச்சிடும் குழந்தையை - நிமிடங்களில்
கண் கலங்கி வாரி அணைத்து
உச்சி முகர்வாள்.....

கூட்டிவைத்த குப்பையை
மீண்டும் மீண்டும் பெருக்குவாள் – தாறுமாறான
விளக்குமாறால் சில பல கோலம்
கெட்ட வசனங்களோடு......

எல்லோர் வீட்டு அடிப்படியிலும்
பால் கொதிக்கும் பாத்திரம் மட்டும்
ஓராயிரம் காயங்களுடன் – யாரும்
கேட்பாரற்ற அவளின்
வலிகளை ஏற்றுக்கொள்வதால்..........

நிம்மதியில்லா நித்திரையும்
நீதமில்லா கனவுகளும் – ஏன் என
தெரிந்துகொள்ளாமலே வெண்மதியாய்
துயில் எழுவாள்.....

நான் வலித்தால் அவள் துடிப்பாள்
நான் துவண்டால் அவள் தேம்புவாள்
நான் தோற்றபோதெல்லாம்
உடனிருந்து என் உணர்வுகளுக்கு
உருக்கொடுப்பாள்.....

சிந்தை மகிழ வைப்பாள்
மனைவி - வாழ்க்கையின்
அர்த்தம் புரிய வைப்பாள்.......

அன்புடன்

அபூ ஃபஹத்......

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...