Oct 14, 2013

ஆம்..நான் பொறுக்குகிறேன்.....


ஆமாம், நான் 

பொறுக்கிக்கொண்டேயிருக்கிறேன்
உங்கள் சல்லடைகளில் அகப்படாத
விலை மதிக்கமுடியாத
பலதும் என் கை விரல்களில்
சிக்கிக்கொள்கின்றன....

நீங்கள் உபயோகமற்றதாய்

வீசி எறியும் ஒவ்வொன்றும்
எனக்கு உபயோகமாகிறது
அதனாலேயே என்
குடல்கள் ஒட்டாமல்
பார்த்துக்கொள்கிறேன்.....

இன்னும் நான்

பொறுக்கிக்கொண்டேதான்
இருக்கிறேன் - என்
பைகளுக்கும் அகப்பட்டவை
அழுக்குகள் அல்ல
அடுக்கிவைக்கப்படாத என்
அறிவின் அகத்தட்டுகள்.....

எனது உடைகளை

குப்பைகளிலிருந்தே
தேர்வு செய்கிறேன் - எனினும் 
கிடைப்பதில்  கிழிசல்களோடே
அணிந்துகொள்கிறேன் 
ஆயினும் கிழிசல்கள் மனதை
புண்படுத்தவேயில்லை இதுவரை...

சகதிகளுக்குள் விழுந்து விழுந்து 

எழுகிறேன் நான் - சறுக்கல்களால் 
செதுக்கப்படுகிறது என் வாழ்க்கை 
சில சர்ச்சைகளால் வளர்ந்துவிடும் 
அரசியல்வாதிகள் போல்....

என் பாதங்களை குத்திக்கிழிக்கிறது 

சில உடைந்த குப்பித்துண்டுகள் - எப்போதோ
உடைத்தெறியப்பட்ட மது பாட்டில்களில்
உலர்ந்து தெரிகிறது இரத்தம் 
தோய்ந்த விரலடையாளங்கள்...


கொடிகளோடு சுற்றி 

சுருட்டப்பட்டநிலையில்
 சில சேலைகள்  - இழுத்து என்
முகம் துடைத்துக்கொள்ள 
என் விரல்கள் தேடுகிறது
அச்சேலையின் தலைப்பை
அழுக்கில்தானே கிடக்கிறோம்
சேலையும் நானும்......


என் கால் பாதங்களின் கீழ்

சிவப்புக்கம்பளம் - இதிகாசம்
பறைந்த ஏகோபகர் நடந்து தீர்த்ததால்
நிறம் மாறிப்போன கெளரவ
முகங்களின்  எந்த கால்பாடுகளும் இல்லை
அழிந்துபோன ரேகைகள் போல்......

இன்னும் நான்  

பொறுக்கிக்கொண்டே இருக்கிறேன் - நான்
மூற்சையாகி விழும் வரை
என்  கைகளின் வேகம் 
குறையாதிருக்கும்வரை
தேடிக்கொண்டே இருக்கிறேன்

சகதிகளில் அகதிகளாய்

பிறசவித்து வீசப்படும்
எம்மில் வெறுப்பின் வீச்சு
உணர்வதில்லையெனினும் 
நாதியற்றுப்போன வாழ்க்கையில்
நாற்றமடிக்கிறது நீதியற்ற
அழுகிய அரியணைகள்......

ஆமாம்...

நான் செத்து விழும்போதும்
என் பிணம் சுமக்கிறது 
பொறுக்கிப்பயல் எனும் 
பிறப்பில் வைக்கப்படாத
சமூகம் பிறப்பித்த பெயர்...

இன்னும் தேடித்தேடி

பொறுக்கிக்கொண்டே 
இருக்கிறேன் - என் 
கைகளுக்குள் எப்போதாவது
அகப்படும் அந்த மா மனிதம்......



No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...