Oct 9, 2013

ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை
*****************


இருட்டும் வெளிச்சமும்
உள்வாங்கி ஆற்பரிக்கும்
அலைகளினின்றும்
தெறித்துவீழும் துளிகளில்
தெரியவேயில்லை உன் கோபம்....

ஏதோ ஒர் அதிகாலை
நிசப்தத்தின் வாதில் உடைத்து
கரைகளேறிப்புறப்பட்டு
இழுத்துச்சென்ற முகங்களில்
தெரிந்தது அவர்களின் உள்ளிருந்து
கடைசியாய் வெளியேறிய
மூச்சுக்காற்றின் வெளிறிய நிறம்.....

எட்ட நின்று பார்த்து
தொட்டு நின்று ரசித்து
கொஞ்சி விளையாடிய
கால்களில் யாரும் எப்போதும்
உணர்ந்திருக்க வாய்ப்பேயில்லை
சமுத்திரத்தின் கோர தாண்டவம்......

சூரிய வெப்பத்தை
சகித்துக்கொள்கிறாய் - ஏனோ
எமது வலிகளை பொறுத்துக்கொள்ள
உன்னால் இயலவில்லை
சகித்தது போதும் செத்துவிடு
என்பதுபோல் கொன்று முடித்தாய் நீ.....



அலைகளுக்குமுண்டோ சாந்தம்
கடலுக்குமுண்டோ கண்ணீர்
எண்ணங்களையும் சின்னங்களையும்
சுமந்த இதயங்களை பிரட்டி
எடுத்துத்தான் விழுங்கியது கடல்....


இரத்தம் இல்லாமல்
சத்தம் இல்லாமல்
ஏதுமறியாததுபோல்
நிதானம் கொள்கிறாயே நீ....


பயம் இன்னும் போகவில்லை
இதயத்தில் வலி இன்னும்
குறையவேயில்லை - எனினும்
இப்போதும் அருகிலேயே
நிற்கிறேன் நான் 
கண்ணீரால் நிறைந்த கடலே...



இழப்பதற்கில்லை ஏதும்
இனி என்னிடம் - நான்
மட்டுமே உள்ளேன்
ஆட்படுவதும் ஆட்கொள்வதும்
உன் தீர்மானத்திலேயே உள்ளது....



என் இரவுகளை
எனக்காய் மீண்டும்
தேடிக்கொள்ளவே வந்தேன்
ஏசித்தீர்பதற்கானதல்ல
இத்தருணம் என்பதால்
மீண்டும் விடை சொல்லாமல்
வீடு திரும்புகிறேன்.....











No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...