Jan 14, 2014

ஒரு மாடப்புறாவின் மரணம்...


ஒரு மாடப்புறாவின் மரணம்......
****************************


சற்றுமுன் இறக்க
துவங்கியிருக்கக்கூடும் - ஏதோ 
வாகனம் அடித்திருக்கவேண்டும்
நான் நாங்கள் அவர்கள்
நீங்கள் என எல்லோரும் பார்த்திருக்க
தலை குனிந்து வீழத்துவங்கியது....


சாலையில் கடந்து சென்ற
வாகனத்தின் இரைச்சல்
மரணத்தின் நேரத்தில்கூட
பயத்தை தந்திருக்கக்கூடும்
இன்னும் சில நாளிகையில்
மரணிப்பதறியாத அந்த நிமிடங்களில்....

மனிதர்களின் பாதச்சுடவடுகள்
பயத்தின் உச்சம் – கால்கள்
நடக்காதபோது தன் அலகால்
ஊர்ந்து இடம் மாறும்போதும்
எட்டநின்று பார்த்த கண்களில்
அதிசயித்தலின் அவா....

மரணத்தின் கடைசி ரேகைகளை
சாலையின் குறுக்கே தானே
வரைந்து தீர்த்தது அந்த மாடப்புறா
பின்னோக்கிச்சென்ற கால்களை
தாங்கிநிற்கத்துடிக்கும் பலமிழந்த சிறகுகள்
கர்வமில்லை நெஞ்சுரமில்லை
தன்னைத்தானே மீட்க முனையும்
மாபெரும் முயற்சி.....

மரணத்தின் நேரத்தை காத்திருக்கும்
கரும்பூனை ஒரு பக்கம் – மரணிக்கும்
மாடப்புறாவை கண்டு
ரசிக்கும் வக்கிர மனிதரின்
கொலைக்கண்கள் மறுபக்கம்....

கண்கள் இருண்டிருக்கவேண்டும்
இமைகள் மூடி அரைத்தூக்கத்தில்
இருக்கும் சிறுவனின் கண்கள்போல்
அழகாயின மாடப்புறாவின் மரணம்....



சிறகுகள் சிலிர்த்தது
மயில் தோகையாய் விரிந்தது
இமைகள் திறந்து சுற்றும் பார்த்து
தரையில் தன் அலகால் கொத்தி
மரணத்தில் வீழ்ந்தது மாடப்புறா...

கண்கள் பனித்து கண்ணீர்
துளிற்கும் தருணம் – இதோ
மரணம் மறந்த மடையர் கூட்டம்
வளைந்து நெழிந்து தாழ்த்தி உயர்த்தி
தன் கேமிராக்கண்களோடு
சிரித்து கை கொட்டி மகிழ்ந்து தீர்த்தது....
மானிடம் அங்கே
கழுகுக்கண்களாய் எட்ட நின்ற
பூனையை தோற்கடித்தது...


மரணம் மகத்தானது...
உண்ர்ந்து கொள்ளாத
மனிதம் இருட்டானது.....

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...