Nov 28, 2010

ஹவுஸ் டிரைவர்...

கைகளில் அடைபட்ட

ஸ்டீயரிங் சுத்துகிறதோ இல்லையோ

அரை தூக்கத்தில் கண்கள்

கிறங்கடிக்கும்...


ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும்

குறைவே இல்லை

வண்டியை ஓட்டத்தெரியாத பின்னிருக்கை

எஜமானியம்மாக்களுக்கு...


கழைப்பாற நேரமே 

கிடைப்பதில்லை வெறும் றுகி

கழைப்பே தொழிலாகிப்போனதால்..


செவிக்குணவில்லாத போது சிறிது 

வயிற்றுக்கும் ஈயப்படும் - இங்கே

விஷ வார்த்தைகள் செவிக்குணவாய்

சிறுகிப்போனது வயிறு

சிறிது வயிற்றுக்கு ஈயாததால்....


அழகானதொரு அறையும் 

படுக்கையும்  - அது என்றும்

அழுக்காக மட்டுமே இருக்கிறது

துவைக்கவும் அடித்துவாரவும்

நேரமில்லாததால்....


தூங்குவதும் எழுவதும் 

ஒரே  நேரம் - எப்போதாவது

நகம் வெட்டும்போது மட்டும்

ஞாபகம் வரும் காலெண்டர்

துண்டுகள்....


அசதியால் உறங்கிப்போகும் 

சில நேரங்கள்  - அது 

ஏதோ ஹைப்பர் மார்கெட்டுகளின்

வெளியோர இருக்கைகள் அறியும்...


எந்நேரமும் அழைப்பொலி வரலாம்

காதுகளும் கண்களும் 

திறந்தே இருக்கவேண்டும்...


சான்ட்விட்சுகளில் 

ஒதுங்கிப்போகும் காலை உணவு

இரவைக்கடந்தும் 

கானலாகிப்போகும் மதிய இரவு உணவுகள்....


சில பல நாட்களில் தூக்கம் என்பது

கனவுகளாகிப்போவதுண்டு

இடையில் யாரை நினைப்பதோ

யாரை மறப்பதோ....


நிமிடங்களில் ஒதுங்கிப்போகும் 

தொலைபேசி அழைப்புகள்

மனைவி மக்களின்

பொருட்தேவைகளுக்கு முன்னால் 

கண்ணீர் துளிகளாய் கரைந்து போகும்

பாசமும் நேசமும்...


வெப்பமும் குளிரும் 

தாக்குவதே இல்லை - மரத்துப்போன

சருமங்கள், மறந்துபோன

கால நிலைகள்....


ஒரு நீண்ட விடுப்புக்கான 

காத்திருப்பு - அது 

நெரிசலான வாகனங்களை 

சீறிப்பாய்ந்து கடக்கும்போதும்

நிழலாய் ஓடுகிறது சில பழைய 

கண்ணாடி வைப்பர்கள்போல்...


சில சில்லரை கனவுகளும்

ஒரு பெட்டகமுமாய் தன் 

தாயகம் நோக்கிய பயணம்

சில பல எதிரபார்ப்புகளும்...


கருணையாய் ஒரு கடைசி 

பார்வை தன் வயதான

ஏதுமறியா எஜமானை நோக்கி...


கொடுமைகளும் வலிகளும்

வலிமையாய் ஆட்கொண்டுவிட்டபோதும்

சிரமமாகவே விடைபெறுகிறான்

ஏதோ சில உறவுகளை

அநாதையாக்கிச்செல்வதைப்போல்


ஒட்டி முடிக்கப்பட்டது ஒரு 

வீண் வாழ்க்கை......


அன்புடன்

அபூ ஃபஹத்...

எனது தெருக்கள்...


வழைந்து நெழிந்து

சென்றபோதும் எனது தெருக்கள்

வெறிச்சோடி கிடப்பதே இல்லை..

 

ஜீன்ஸுகளும் டி-ஷர்டுகளும்

ஆட்கொள்ளும்போதும் 

லுங்கியும் மேற்துண்டுகளும்தான்

இன்றும் தெருக்களின் அலங்காரம்....

 

தெரு முனைகளில்

அனாதையாய் காணும் சில

குட்டிச்சுவர்களுக்கும் உண்டு

சில அழகான உறவுகள்

தெருப்பொறுக்கிகளாய்...

 

நவீனமாகிப்போன

மதிர்ச்சுவர்களுக்கிடையில்

ஆங்காங்கே இல்லாமலில்லை

சில குத்து வேலிகள்...

 

கள்ளிச்செடிகளும் பூவரச மரங்களுமாய்

இன்றும் பச்சை நிறம் காட்டி

பளிச்சிடாமல் இல்லை...

 

தெருக்களின்  காதோரம்

சில தென்னை மரங்கள்

தலை குனிந்து பல

இரகசியங்கள் பரிமாறிக்கொள்கின்றன... 

 

தான் அழுக்காகிப்போகும்போதெல்லாம்

சாரல் மழைகளால் குளித்து

அழகு பார்ப்பதும் தெருக்களின் ஆனந்தம்...

 

சில பேய் மழை நீரில்

ஜனங்களும் ஜடங்களும்

அடித்துச்செல்லப்படும்போது

தெருக்கள் கண்ணீர் சிந்தாமலில்லை....

 

ஆர்ப்பாட்டங்களையோ

போராட்டங்களையோ

பார்த்ததில்லை எனினும்

அரிவாட்களோடும் ஈட்டிகளோடும்

போராடாமலில்லை....

 

என் வீட்டு கதவோரம்

நின்று பார்க்கிறேன் – நான்

நடந்து செல்லும் தெருப்பாதையை

கண் விரித்து பார்த்திருக்கிறது

ஒரு தாயைப்போல் சில எதிர்பார்ப்புகளோடு....

 

அன்புடன்

 

அபூ ஃபஹத்

 

Nov 27, 2010

வெடித்துச்சிதறல்கள்...

வெடித்துச்சிதறிய

வெடிகுண்டு சிதறல்களுக்கிடையில்

துடித்துக்கொண்டிருந்தது  

ஓர் இதயம் 
அள்ளி எடுத்துச்சென்ற

உடற்சிதறல்களிலும் தெரியவில்லை

துடித்துக்கொண்டிருந்த இதயத்தின்

ஜாதியோ மதமோ..



ஒரு முறை 
வெடித்துச்சிதற வேண்டும்

என்னையும் அறியாமல் நான் 

மதங்களையோ மனங்களையோ

மறந்து விலாசமற்று ஒதுக்கி வைக்கப்படும்

என் உடல் சிதறல்களை

உயிரின்றி காணவேண்டும்....



என் உடல்தேடும் உறவுகளும்
 என் ஜடம் தேடும் அரசுகளும் 
அறிவரோ நான் சிதறிப்போனது 

எதற்கென்று – எனை அறிவிப்பரோ 

நான் வெடித்துப்போனது எதற்கென்று...



சில துடிக்காத இதயங்களில்

தேங்கிப்போன ஆதங்கங்கள்

வெடிக்காத பல வெடுண்டுகளாய்

அனாதைகள் ஆக்கப்பட்டுப்போனதும்

காரணங்கள் புதைக்கப்பட்டு போனதும்தான்...



என் முகம் பார்த்து சிரித்த

முன்னிருக்கை குழந்தையின்

இதயம் தேடிக்கிடைக்குமோ

அதில் மூடியிருக்கும் கொஞ்சம்

புன்னகையைக்காண....



வெடித்தவனும் சொல்லவில்லை

செத்தவரும் அறியவில்லை – இலட்சியமில்லாத

ஒருவனால் அழிக்கப்பட்டது

பல லட்சம் ஆசைகள் கூடவே

இலட்சியங்களும்....



கொடுமையென்பர், கண்ணீர் அஞ்சலியென்பர்

எங்கள் உயிர் போனபின்

காணிக்கையென்பர் எங்கள்

கைகளில் தராமலே – கடைசியாய்

சில துளிகள் மட்டும் கண்ணீராய்...



வருடம்தோறும் நினைவு நாட்களில்

ஒதுங்கிப்போகும் ஒர்மையாகிப்போன

அந்த வெடித்துச்சிதறல்கள் – அனாதையாய்

கேட்பாரற்றுக்கிடக்கும்

தேங்காய் ஓடுகளைப்போல்...



 சிலரின் தேவைகளுக்காய்

பந்தாடப்படும்போதும் அறிந்திருப்பதில்லை

ஒரு தேவையற்றுப்போன பெயர்கொண்டவன்

நான் என்று....



சில பல பொறுப்புகள் 

வெறுப்புகளாய் பார்க்கப்பட்டு

பல கோடி லட்சியங்கள்

அறுத்தெறியப்படுகிறது ஒரு

குண்டு வெடிப்பில்

லட்சியமில்லாத பாவிகளால்...



என்றும் பிரியமுடன்



அபூ ஃபஹத்..


Nov 20, 2010

மெளனங்கள்..

தொலைபேசியில் நானும் நீயும் 
சில மவுனங்களோடு

பல கேள்விகளையும்

சில விடைகளையும்

பரிமாறிக்கொள்கிறோம்..



நிஷப்தம் நமது உறவின்

மிகப்பெரிய பலம்

நமது தொலைபேசிகள் 

அதிகம் சுவாசித்தது

நமது மூச்சுக்காற்றைத்தான்...



உன்னைச்சுற்றியும்

என்னைச்சுற்றியும் கேட்கும்

சப்தங்கள் நம் சுற்றுப்புற

வெளிப்பாடுகளை நம்மில்

திணிக்கும்போது நமது மெளனம் 

விடுகதையாகிறது...



பொருட்படாத சில சப்தங்கள்

உன்னிலிருந்து

வெளிப்படும்போதெல்லாம்

நான் என்னில் இல்லாமல் போகிறேன்...



நான் பேசும் கேட்கும்

வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் 
 தண்ணீரில் விழும் ஒற்றை

மழைத்துளியாய் ஒரே வார்த்தையில்

பதில் சொல்வாய் அது

அழகை விட அழகானது...



பக்கத்து அறை ரகசியங்களை

ஒட்டுக்கேட்பது போல் உன்

உள் உணர்வுகளை அறிவதர்க்காய்

மிகத்துல்லியமாய் என் காதுகளை

தொலைபேசியில் வைப்பேன்

சில தொலைந்து போன மகிழ்ச்சிகள் கூட

திடீரென என்னை வந்து

ஒட்டிக்கொண்டதாய் உணர்வேன்..



 மிகப்பெரிய மெளனத்தைக்கூட

சின்ன சிணுங்கல்களால் கலைக்கும் 

குழந்தையைப்போல் அடிக்கடி

மெல்லமாய் நீ சிரிப்பதும் நமது

நிஷப்தத்தின் அலங்காரம்....



உன்னைப்பற்றி நானும்

என்னைப்பற்றி நீயும்

மெளனமான தேடல் தெடர்கிறது..



உன்னில் எனது தேடல்களின்

ஆதங்கங்கள் உன் காது மடல்களை

தொடும்போது நீ சிணுங்குகிறாய் எனது

தொலைபசி சிரிக்கிறது....



அறியத்தருவது மெளனத்தினூடே 

என்பது அனேகர் அறிந்ததில்லை

எனினும் எனதும் உனதுமாகிய

இரகசியங்களை அதிகம்

அறிந்திருப்பது நமது தொலைபேசிகள்தான்....



ஒவ்வொரு முறை மரணித்து

உயிர்பெறும்போதும் எதையோ

எதிர்பார்த்து காத்திருப்பதுபோல்

நம் மெளனங்களை எதிர்நோக்குகிறது

நமது தொலைபேசிகள்..

கூடவே நமது மூச்சுக்காற்றையும்...



அபூ ஃபகத்

Nov 6, 2010

நினைவுகள்.....





  
மூழ்கிக்கொண்டிருந்தது சூரியன் 

சின்னச் சின்ன முனகல்களோடு

அந்தி மாலையை தாலாட்டியது

அலைகள்....



சமுத்திரத்தின் காதோரம் என்

ரகசியங்களை சொல்லியுள்ளேன் - ஏனெனில் 

என்றாவது நீ ஏதாவது கடல்தீரம்

காணும்போது என் கால்கள் தழுவிய அலைகள்

உன் பாதங்களில் சமர்ப்பிக்கும்

என்கிற சமுத்திர நம்பிக்கை.....



எழுதி வைத்து படித்துப்பார்க்க

மனமில்லாததால் இதயத்தில்

மடித்துவைத்த காதல் எனும்

நினைவுகளை கொஞ்சம் கடலிலும்

கலந்து செல்கிறேன்.....



உன் பெயர் கடற்கரையில்

தெழிவாக எழுத முடிகிறது ஆனால்

பாதுகாக்க முடிவதில்லை.

அலைகளின் கண்கள் உன் பெயரைக்கூட

ஸ்பரிசித்துச் செல்கின்றன....



நீ வருவதில்லை என்றாலும்

தினமும் நாம் சந்திக்கும் இடத்திற்கு

நான் வராமல் இருப்பதில்லை,

நான் வரும்போதெல்லாம் உன்

நினைவுகளின் பிரதிபலிப்பு

அங்கே இருப்பதாய் உணர்கிறேன்.....



நீ பிரிந்து செல்வதற்காய்

தேர்ந்தெடுத்த இடம் என்பதாலோ

என்னவோ உனதும் எனதுமான

காலடித்தடங்களைத்தவிர

மூன்றாவதொன்றை 

அங்கே காண முடியவில்லை...



வருத்தங்களும் வேதனைகளும்

மையல் கொண்டுவிடும்போது

நீ பிரார்த்திப்பதைப்போல் என்னால்

முடியவில்லை -

காரணம் நீ பிரிந்து சென்றபோது

அவை என்னோடே தங்கிவிட்டன

ஒரு சப்தமில்லாத மயானம்போல்...





நாம் கடல்தீரம் கண்டபோதெல்லாம்

பல நேரங்களில் நீ என்னையே

மறந்ததுண்டு என்னப்போல்

அலைகளையும் காதலித்தவள் நீ.....



ஏதோ சில அலைகளின் சப்தம்

என் காதுகளிலும் இதயத்திலும்

ஓயாது ஒலிக்கிறது உன்னில்

நிசப்தமான என் காதலை

நினைத்துப்பாற்கையில்......



கால நேரங்களையோ

நாள் கிழமைகளையோ

கணக்கிட்டுப்பார்த்ததே இல்லை

நான் உன்னில் காதலாய்

வாழ்ந்தபோது......



காதலியின் நிறம் கேட்டால்

சிலர் கறுப்பென்பர், சிலர் சிவப்பென்பர்

உன் நிறம் சொல்ல நான் 

குழம்பிப்போனதே இல்லை சந்தனத்தை

நிறம் செல்லிக் கூப்பிடுவதில்லை....



என் மிகப்பெரும் தடாகத்தில்

ஒற்றை அன்னமாய் நீ

நீந்தி வரும் அழகில்

அடங்கிப்போனவன் நான்....



உன் நெற்றி வியர்த்தால்

என் இதயம் அவசரமாய் துடிக்கும்

பனித்துளிகளால் ஒற்றியெடுக்கச்சொல்லும்...



ஆடித்தள்ளுபடிகளில் கூட

விற்பனையாகாத அனாதையாகிப்போனதோ

என் காதல் என சில நேரங்களில்

நினைத்துப்போகிறேன்....



அது உண்மையில்லை ஏனெனில்

நினைவுச்சின்னங்களை யாரும்

விலைக்கு வாங்குவதில்லையாம்

என் காதலும் விலை மதிக்க

முடியாததுதான்.....





தொலை தூரத்தில் கூட்டமாய் 

பெண்களை பார்த்தால்

ஒரு கணம் நின்றுபோகிறேன்

உனது அசைவுகளை

எதிர் நோக்கியவனாய்....



கூட்ட நெரிசலில் கூட

உனை துல்லியமாய் அடையாளம்

காண்பேன் நான் கட்டி முடியப்பட்ட

உன் கொண்டையழகு என் இதயத்தில் 

கெட்டியாக பதிந்துபோனது....



சில யுகங்களை

கடக்கவேண்டியிருக்கிறது நமது

நினைவுகளை கனவு காண்கையில்...



பதியமிட்டுச்செல்கிறேன் சில

பாதச்சுவடுகளைப்போல் என்

காதலையும் அலைக்களிக்கப்படாமல்

கடல் அலைகளிடம்......



அன்புடன்



அபூ பஹத்..