Feb 18, 2013

நான் யாசிப்பவள்....




கறுப்போ வெறுப்போ
ஒன்றுமே இல்லாத
 வெள்ளை இதயமவளுக்கு....!!

அவளின் எல்லைகளில்லா உலகில்
இல்லைகள்தான் ஏராளம் – எனினும்
ஒரு நாள்கூட யாரிடமும்
செல்லாமலோ சொல்லாமலோ
 இருந்ததில்லை பசிக்கிறதென்று....!!

வெண்மேகத்தில்
கலந்துநிற்கும் கார்மேகத்தின்
நிறமவளுக்கு – வெளிறிய
முகத்தில் நகக்கீறல்கள்
ஏன்.? எப்படி.? யாரால்.? என
 அவளை பார்க்கும் கண்கள்
 வினவுவதை அறிகிறாள்....!!

எழுதவும் ஏடில்லை
ஏற்றவும் விளக்கில்லை – இதில்
எனக்கு அறிவென்ன
வேண்டிக்கிடக்கிறது.? பரந்த பூமியில்
அவளின் ஆதங்கம் அறிவோடானது.....

நடந்து செல்லும் பாதைகளில்
தீயையும் அறிவதில்லை
தீட்டையும் அறிவதில்லை –தன்னை
ஒதுங்கிச்செல்பவர்களை தயவோடு
பார்த்து சிரிப்பாள் தன் புனிதம்
கெடுமே என ஒருபோதும் அவள்
நினைத்ததே இல்லை...

கையில் கிடைத்ததை வைத்து
கொண்டைபோட்டுக்கொள்வாள் – ஒழுக்கமோ
நியதியோ படித்தறிந்ததில்லையவள்
 எனினும் தலைவிரிகோலமாய்
 இருக்க விரும்பவில்லை....

உடுத்திய கந்தலில்
ஆங்காங்கே கிழிசல்கள்
மானம் மறைக்க மறந்ததே இல்லை – மேலும்
கீழுமற்று மார்பு திறந்து
வழிந்தோடும் முலைக்கச்சை மறந்த
நவீன பெண்ணுலகில் அவள்
மானம் மறைக்க மறந்ததே இல்லை...

எச்சில் இலைகளை
நான் தொடுவதில்லை – சதா
எனை சுற்றித்திரியும் நாய்களுக்காய்
அதனை விட்டுவிடுகிறேன்
நன்றியோடு பாதுகாக்கின்றன அவளை
மனித மிருகங்களிடமிருந்து....

நான் வயிற்றிலிசைக்க
என் குரலுக்காய் ஏங்கும்
பிஞ்சுக்குழந்தையில்தான்
எப்போதாவது நான் சிரிக்கிறேன்....

நான் அழைக்கப்படும் பெயரில்
மட்டுமே வேறுபடுகிறேன் – கொஞ்சம்
நிதானமாய் யோசித்துப்பாருங்கள்
எல்லோரும் என்னைப்போலவே
ஏதோ ஒன்றுக்காய் யாசிக்கிறார்கள்....

நான் தெய்வத்தின் குழந்தையல்ல
தெய்வத்தால் குழந்தை – என்னில்
கறுப்போ வெறுப்போ
யார்மீதும் இல்லை
தெய்வத்தோடல்லாமல்.....

அன்புடன்


அபூ ஃபஹத்