Oct 14, 2013

ஆம்..நான் பொறுக்குகிறேன்.....


ஆமாம், நான் 

பொறுக்கிக்கொண்டேயிருக்கிறேன்
உங்கள் சல்லடைகளில் அகப்படாத
விலை மதிக்கமுடியாத
பலதும் என் கை விரல்களில்
சிக்கிக்கொள்கின்றன....

நீங்கள் உபயோகமற்றதாய்

வீசி எறியும் ஒவ்வொன்றும்
எனக்கு உபயோகமாகிறது
அதனாலேயே என்
குடல்கள் ஒட்டாமல்
பார்த்துக்கொள்கிறேன்.....

இன்னும் நான்

பொறுக்கிக்கொண்டேதான்
இருக்கிறேன் - என்
பைகளுக்கும் அகப்பட்டவை
அழுக்குகள் அல்ல
அடுக்கிவைக்கப்படாத என்
அறிவின் அகத்தட்டுகள்.....

எனது உடைகளை

குப்பைகளிலிருந்தே
தேர்வு செய்கிறேன் - எனினும் 
கிடைப்பதில்  கிழிசல்களோடே
அணிந்துகொள்கிறேன் 
ஆயினும் கிழிசல்கள் மனதை
புண்படுத்தவேயில்லை இதுவரை...

சகதிகளுக்குள் விழுந்து விழுந்து 

எழுகிறேன் நான் - சறுக்கல்களால் 
செதுக்கப்படுகிறது என் வாழ்க்கை 
சில சர்ச்சைகளால் வளர்ந்துவிடும் 
அரசியல்வாதிகள் போல்....

என் பாதங்களை குத்திக்கிழிக்கிறது 

சில உடைந்த குப்பித்துண்டுகள் - எப்போதோ
உடைத்தெறியப்பட்ட மது பாட்டில்களில்
உலர்ந்து தெரிகிறது இரத்தம் 
தோய்ந்த விரலடையாளங்கள்...


கொடிகளோடு சுற்றி 

சுருட்டப்பட்டநிலையில்
 சில சேலைகள்  - இழுத்து என்
முகம் துடைத்துக்கொள்ள 
என் விரல்கள் தேடுகிறது
அச்சேலையின் தலைப்பை
அழுக்கில்தானே கிடக்கிறோம்
சேலையும் நானும்......


என் கால் பாதங்களின் கீழ்

சிவப்புக்கம்பளம் - இதிகாசம்
பறைந்த ஏகோபகர் நடந்து தீர்த்ததால்
நிறம் மாறிப்போன கெளரவ
முகங்களின்  எந்த கால்பாடுகளும் இல்லை
அழிந்துபோன ரேகைகள் போல்......

இன்னும் நான்  

பொறுக்கிக்கொண்டே இருக்கிறேன் - நான்
மூற்சையாகி விழும் வரை
என்  கைகளின் வேகம் 
குறையாதிருக்கும்வரை
தேடிக்கொண்டே இருக்கிறேன்

சகதிகளில் அகதிகளாய்

பிறசவித்து வீசப்படும்
எம்மில் வெறுப்பின் வீச்சு
உணர்வதில்லையெனினும் 
நாதியற்றுப்போன வாழ்க்கையில்
நாற்றமடிக்கிறது நீதியற்ற
அழுகிய அரியணைகள்......

ஆமாம்...

நான் செத்து விழும்போதும்
என் பிணம் சுமக்கிறது 
பொறுக்கிப்பயல் எனும் 
பிறப்பில் வைக்கப்படாத
சமூகம் பிறப்பித்த பெயர்...

இன்னும் தேடித்தேடி

பொறுக்கிக்கொண்டே 
இருக்கிறேன் - என் 
கைகளுக்குள் எப்போதாவது
அகப்படும் அந்த மா மனிதம்......



Oct 9, 2013

ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை
*****************


இருட்டும் வெளிச்சமும்
உள்வாங்கி ஆற்பரிக்கும்
அலைகளினின்றும்
தெறித்துவீழும் துளிகளில்
தெரியவேயில்லை உன் கோபம்....

ஏதோ ஒர் அதிகாலை
நிசப்தத்தின் வாதில் உடைத்து
கரைகளேறிப்புறப்பட்டு
இழுத்துச்சென்ற முகங்களில்
தெரிந்தது அவர்களின் உள்ளிருந்து
கடைசியாய் வெளியேறிய
மூச்சுக்காற்றின் வெளிறிய நிறம்.....

எட்ட நின்று பார்த்து
தொட்டு நின்று ரசித்து
கொஞ்சி விளையாடிய
கால்களில் யாரும் எப்போதும்
உணர்ந்திருக்க வாய்ப்பேயில்லை
சமுத்திரத்தின் கோர தாண்டவம்......

சூரிய வெப்பத்தை
சகித்துக்கொள்கிறாய் - ஏனோ
எமது வலிகளை பொறுத்துக்கொள்ள
உன்னால் இயலவில்லை
சகித்தது போதும் செத்துவிடு
என்பதுபோல் கொன்று முடித்தாய் நீ.....



அலைகளுக்குமுண்டோ சாந்தம்
கடலுக்குமுண்டோ கண்ணீர்
எண்ணங்களையும் சின்னங்களையும்
சுமந்த இதயங்களை பிரட்டி
எடுத்துத்தான் விழுங்கியது கடல்....


இரத்தம் இல்லாமல்
சத்தம் இல்லாமல்
ஏதுமறியாததுபோல்
நிதானம் கொள்கிறாயே நீ....


பயம் இன்னும் போகவில்லை
இதயத்தில் வலி இன்னும்
குறையவேயில்லை - எனினும்
இப்போதும் அருகிலேயே
நிற்கிறேன் நான் 
கண்ணீரால் நிறைந்த கடலே...



இழப்பதற்கில்லை ஏதும்
இனி என்னிடம் - நான்
மட்டுமே உள்ளேன்
ஆட்படுவதும் ஆட்கொள்வதும்
உன் தீர்மானத்திலேயே உள்ளது....



என் இரவுகளை
எனக்காய் மீண்டும்
தேடிக்கொள்ளவே வந்தேன்
ஏசித்தீர்பதற்கானதல்ல
இத்தருணம் என்பதால்
மீண்டும் விடை சொல்லாமல்
வீடு திரும்புகிறேன்.....











Oct 8, 2013

வெளிநாட்டில் குடும்ப ஒன்றுகூடல்கள்.....


வெளிநாடு வாள் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும்...
***************************************************
குடும்ப ஒன்றுகூடல்கள் பற்றிய ஒரு பார்வை.

KIFA பற்றிய சில கேள்விகள் என் நண்பர்களிடமிருந்தும், KIFA வின் எந்த நிகழ்சியிலும் இதுவரை பங்குகொள்ளாத என்னைத்தெரிந்தவர்களிடமிருந்தும் சில நக்கல் விமர்சனங்கள் வருவதுண்டு...அது அவர்களின் குற்றமல்ல... முன்பு நானும் இதபோன்றே விமர்சிக்கவோ, கிண்டல் செய்வதோ உண்டுதான்..

சிலர் நான் KIFA-மீட்டிற்கு செல்வதைக்கூட கொஞ்சம் வெட்கத்தோடு உண்ரந்துகொள்கிறார்கள்.

ஆனால் அதன் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதற்கு ஒன்றுமே இல்லாத அந்த நிகழ்சிகளில் பங்கு கொள்ளும் குடும்பங்களின் குழந்தைகளிடம் கேட்டால் அந்த ஒரு நாளை பற்றி ஒரு நூறு கதைகள் சொல்லி தங்களுக்குள் மகிழந்துகொள்வதை எட்ட நின்று பார்த்தால்தான் அதன் எதார்த்தம் அல்லது அதன் தேவை புரியும்...


சகோ. Mohamed Sainuddin B, சகோ. Bava Sulaiman A,  இதுநாள் வரை எங்களோடு எல்லா KIFA MEET -லும் எங்களோடு சரி சமமாக இருந்து, குழந்தைகளுக்கு குழந்தையாய், பெரியவர்களுக்கு பெரியவராய், என்னைப்போன்ற சிறியவர்களுக்கு சிறியவராய் நகைச்சுவைக்கு நகைச்சுவையாய் இருந்த Ahmed Shajahan அவர்கள் போன்றவர்கள் தந்த அந்த ஒரு நாள் சந்திப்புகள் பல கதைகளை சொல்லும்...


வலிகளையும், வேறு வேறு மனிதர்களின் உள்ளக்குமுறல்களை, சந்தேஷங்களை, விளையாட்டுக்களை, நாடு மற்றும் ஊர் சார்ந்த சமூக தொண்டுகள் பற்றிய தகவல்களை, அரசியல், மற்றும் மார்க்கம் பற்றிய வேறுபட்ட கருத்தாடல்களை ஆங்காங்கே குழுமியிருந்து பகிரந்துகொண்டுவிட்டு,

கடைசியில் விளையாட்டாய் சில விளையாட்டுப்போட்டிகள் வைத்து ஏறத்தாள குழந்தையாகவே மாறும் அந்த விலை மதிக்கமுடியாத தருணங்களை ஏகாந்த வாழ்க்கை வாழும் யாராலும் யோசித்துப்பாற்கவே இயலாது...


எப்போதும் எல்லோரும் போகிறோம், வருகிறோம், ஆனால் அதனை ஒன்றுதிரட்டி ஒரு குடையில் கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக முடிப்பது என்பது மிகவும் சிரமம்.... அதற்காகவே சகோ. செய்னுத்தீன் சாஹிபையும் பாவா சுலைமான் போன்றோர்களை எத்தனை பாராட்டினாலும் தீராது...




வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களின் தினப்படி வாழ்க்கை என்பதே ஒரு வகையில் ஜாடிக்குள் அடைத்து வைத்து வளற்கப்படும் தங்க மீன்களின் வாழ்க்கையேதான்....


மனைவி பக்கத்தில் இருந்தால், பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் நலம் என்று நினைக்கும் நாம் அவர்களின் இயந்திரமயமான இந்த நகர வாழ்க்கையில் அவர்கள் அதிகம் விரும்பும் ஊர் வாழ்க்கை போன்ற ஒரு ரிலாக்ஷேஷனாக மாற்றுவதற்கான ஒரு தருணத்தை பலபொழுதும் நாம் சிந்திப்பதில்லை....


எல்லா வாரமும் விடுமுறை நாட்களில் நண்பனை பாற்கவேண்டும், அல்லது மாமாவை, காக்காவை பாற்கவேண்டும் என்று நினைக்கும் என்போன்ற பேக்ஷலர்கள், குறோணிக் பேக்ஷலர்கள், குடும்பத்தோடு இருப்பவர்களை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு செல்வதால், அவர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, அல்லது அவர்களின் ஒரு ரிலாக்ஷேஷன் கிடைப்பதற்காக வெளியே செல்வதை தடை போடுகிறோம் என்றே சொல்லலாம்...


நாம் அவர்கள் வீட்டில் சென்று மணிக்கணக்கில் பேசிப்பேசி இருந்து அவர்களின் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதைவிட அந்த குழந்தைகளின் ஆசையை, அவர்களுக்கு சுதந்திரமா்க விளையாட கிடைக்கும் ஒரு மாலை நேரத்தை சூறையாடுகிறோம் என்றே சொல்லலாம்...




அப்படியென்றால் பேக்ஷலர்கள் என்னதான் செய்வது..?? மன்னிக்கவும்,


குடும்பமாக இருப்பவர்களை முடிந்தவரையில் நாம் அவர்கள் குழந்தைகளோடு விளையாடும், அல்லது நேரம் செலவிடும் இடத்திற்கு அவர்கள் அனுமதி பெற்று சென்று பாற்கலாம், அடுத்து வீட்டிற்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும், நிறுவனத்தில் வேலையிலும் இருந்து புழுங்கிப்போன நாம் இன்நொரு வீட்டின் அறையை ஆக்கிரமிப்பதைவிட புத்துணற்சியூட்டும் பூங்காக்களில் அல்லது, கடற்கரைகளில் அவர்களோடும் அவர்களின் பிள்ளைகளோடும் நேரம் செலவிடலாம்....



ஒரு வீட்டை அடைந்தாலே அவர்களின் வரவேற்பு அறையில்முதலில் கேட்கும் நலம்தானா என்ற கேள்வியி்ல் ஆரம்பிக்கிறது நமது மன அழுத்தத்தின் முதல் வாயில்படி...அதிகமானவர்களின் மனதில் ஏதோ ஒரு சோகம், நிறை மாத கற்பிணியாக வலியோடு நின்றுகொண்டேதான் இருக்கும், அதனை இறக்கி வைக்க அங்கே நினைத்தால் அடு்தது இருக்கும் மற்றொருவரோடும் அது பகிரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அது அப்படியே வலி வழிமாறி வேறு வேறு கதைகளாக பயணித்து பின் மிக மோசமாந மன அழுத்தத்திற்கும் அதன் வாயிலாக பல ஆபத்துக்களுக்கும் வழி வகுக்கும்,

பின் நம்மிடையே இருந்த அழகிய நட்பு, அல்லது சகவாசம் தேவையற்ற புரிந்துகொள்ளாமையினால் அறுந்துபோகும். இவைகள் அனைத்தையும் களையும் முகமாகத்தான் நாம் குடும்பமாக இருப்பவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகமும் வெளியே வைத்துக்கொள்வது நல்லது என்று சொல்கிறேன்....



ஊரில் இருக்கும்போதான பிரச்சினைகள் இல்லை இங்கே வெளிநாடுகளில் வாழும்போது வருவது. மிக மோசமான பிரச்சினைகள் வந்து நல்ல உறவுகள் கூட தொடர்பற்று பல வருடங்களாக பேசால் இருக்கும் நிலைகள் ஊட இங்கே இருந்துதான் வருகிறது.

நாம் எப்போதும் மறந்துபோகும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது குழந்தைகளின் வாழ்க்கை. கூட்டுக்குள் புதிதாக வாங்கி விடப்பட்டிருக்கும் கோழிக்குஞ்சைக்கூட அவ்வப்போது நாம் அதிசயித்து பார்த்துக்கொள்வோம். அவைகளுக்கு ஒரு நாளில் சில மணி நேரங்கள் சுதந்திரமாக மேய அணுமதிப்பதுண்டு. மீண்டும் கூடையால் மூடி வெளியே இருந்து அதிசயிப்போம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நாம் குழந்தைகளை அப்படி பாற்கிறோமா..?? அவர்களின் குசுருதிகளை அதிசயித்தோமா...?? அவர்களுக்கு அப்படிப்பட்ட குறும்பு செய்வதற்கான அழகிய தருணங்களை  உருவாக்கி கொடுத்தோமா...? அவர்களுக்கு நமது நட்பு வட்டாரத்திலோ, சொந்த பந்தங்களிலோ நண்பர்களை ஏற்படுத்திக்கொடுத்தோமா...?
அப்படி அவர்கள் பழகிய நண்பர்களோட குறைந்தபட்ஷம் வாரத்திற்கு ஒருமுறையேனும் பரஸ்பரம் பேசிப்பழக வாய்ப்பேற்படுத்திக்கொடுத்தோமா.....?? இல்லவே இல்லை...


பணம், பணம், பணம்.. என்ற ஒற்றை வேட்டைக்குப்பின் மறந்துபோவது குழந்தைகளின் மகிழ்ச்சி..... ஆனாலும் நாம் நமது தேவைக்கான மகிழ்ச்சிக்காக நமது நண்பர்களை சந்திப்பதற்கோ அல்லது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து பார்த்து சந்தோஷிப்பதற்கோ மறப்பதோ இல்லை... என்ன ஒரு கேவலமான சுயநலம்.....


ஆக மேலே குறிப்பிட்ட ஒரு நாள் சந்திப்புகள் வெறும் சாப்பாடு அல்லது பார்ட்டி அல்லது கெளரவம் சாரந்ததே அல்ல... மாறாக நமது குழந்தைகளுக்கான ஒரு மகத்தான ஒன்றுகூடல் அல்லது குழந்தைகள் பழகிப்பயிலும் அழகிய தளம். A wonderful platform for our children's get together...



மனோவியல் ரீதியாக நாம் படித்தறிவதைவிட ழகி அறியவேண்டிய விஷங்கள் நிறையவே இருக்கிறது.

சகோதரர் Colachel Mj Hussain அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நான் கலந்துகொண்ட முதல் KIFA MEET எனக்கும் மிக மோசமான போர் அடிக்கிற ஒரு அனுபவத்தை தரும் என்றே நினைத்தேன்...


சவூதி அரே்பியா வந்தபின் இன்னும் சொல்லபேனால் வளைகுடாவில் ஏறத்தாள வெறும் 12 வருடங்கள் அனுபவத்தில் எனக்கு பல விதமான புதிய மாறுதல்களை தந்ததும் நிறைய நண்பர்களை நல்ல மனிதர்களை சமம்பாதிக்க இயன்றதும் முதல் KIFA MEET -ற்குப்பின்தான்...

ஆக நாம் ஒன்றை விமர்சிப்பதற்கு முன் அவைகளை பற்றிய சரியாக தெரிந்துகொள்வேண்டியதும் நமது கடமையாகும்...



சகோ. JAHIR HUSSAIN அவர்களுக்குத்தான் அத்தனை நன்றிகளும் கூறவேண்டும்...

எனது வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான மகத்தான மனிதர்களை கொண்டது KIFA எனும் குடும்ப சங்கமம்...



மனோவியல் ரீதியான எனது பல கருத்துக்களை ஒரு தந்தை என்ற இடத்திலிருந்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன்...

படிக்க கொஞ்சம் சிரமமாகவே இருக்கலாம்... ஆனாலும் சகித்துக்கொள்ளுங்கள்..


நேசத்துடன்


அபூ ஃபஹத்

Oct 4, 2013


முதுமை...

**************

சாலையோர மைல் கல் 

பிடுங்கி எடுக்கப்பட்டது 
சாலையில்- வேறொரு
இடத்தில் வேறொரு
எண் எழுதப்பட்டு மீண்டும்
நாடப்பட்டது....

பிடுங்கி எடுக்கப்பட்ட கல்லில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
ஒரு கைத்தடியும் பழைய
துணிகள் கொண்ட பை ஒன்றும்
அங்கேயே விடப்பட்டது....

வழியே சென்ற ஆட்டிடையன்
ஒருவன் கைத்தடியை
எடுத்துக்கொண்டான் - அந்த
அழுக்குப்பையை
குறத்திப்பெண்ணொருத்தி
துளாவிக்கொண்டிருந்தாள்....

உள்ளே இருந்த எந்த
ஆடையிலும் ஒட்டைகள்
இல்லாமலில்லை - எதற்காகவோ
சிலதை தோளில் போட்டவள்
அழுக்குப்பையையும் கூடவே
எடுத்துக்கொண்டாள்....

தேர்ந்தெடுத்ததை தவிர
சில பொட்டலங்களும்
ஒரு சில பழைய புத்தகங்களும்
அங்கேயே விடப்பட்டிருந்தது...

முதுகில் பெரிய சாக்குப்பை
ஒன்றை தொங்கவிட்டு
நடக்க இயலாம் அந்த
இடம் அடைந்தான் பேப்பர்
பொறுக்கும் சிறுவன் ஒருவன்....

அழுக்கால் கசங்கிப்போன
விளிம்புகள் சுருண்ட
அந்த புத்தகங்களில் காகிதத்தின்
வாடை வரவில்லை
வியர்வை நாற்றம் மட்டுமே இருந்தது...

எல்லாவற்றையும் எடுத்து
பைக்குள் திணித்தான் - ஏதோ
ஒரு புத்தகத்தின்
நடுப்பக்கம் வாய் பிழந்து
அதனுள்ளே நீளமாய்
உதிரியாய் நின்றது
ஒரு காகித அட்டை.....

எடுத்தவைகளில் அந்த
புத்தகத்தை மட்டும் அங்கேயே
விட்டுச்சென்றான் சிறுவன்- ஏதோ
யோசித்தபடி தலைசொறிந்து
அடுத்த இடம் நோக்கி
நடந்தான் அவன்...

அநாதையாய் விடப்பட்ட
அந்த புத்தகத்தின் ஒரத்தில்
ஏகாந்தமாய் தூங்கும்
அந்த முதியவர் யாராலும்
கவனிக்கப்படாமலே போனார்....

கண் விழித்துப்பார்த்து
புத்தகத்தை கையிலெடுத்து
விளிம்பு சுருங்கிய வியர்வை
நாற்றத்தின் நடுவே கசங்காமல்
வீற்றிருந்தான் மகன்...

அருகே மருமகளும்
குழந்தைகளும் அடங்கிய
அந்த புகைப்படத்தில்
சட்டென விழுந்தது சுத்தமான
அந்த ஒற்றைக்கண்ணீர்......


எழுந்து நடக்க முற்பட்டபோது
பின்னாலிருந்து தாத்தா
எனும் சில சப்தங்கள்...

ஆட்டிடையன்
குறத்திப்பெண்
காகிதப்பையன்
இவர்களோடு
மைல் கல்லுடன்
அந்த தொழிலாளியும்....

சிறகுகளை வைத்துக்கொண்டு
தன்னை தூக்கிச்செல்ல 
காற்றுக்காய் காத்திருக்கின்றன 
சில குருவிகள்.....

*************










அவள் புன் சிரித்தால்
என்ன செய்வதென்றறியாமல்
பதிலுக்கு நானும்
புன்சிரித்துவிடுகிறேன்.....

*************






படித்துக்கொண்டிருக்கும்போது
மாதமிருமுறை மகனை
பள்ளி விடுதியில்
சென்று பார்ப்பேன்....

படித்து முடித்தபின் 
இப்போது வருடத்திற்கொருமுறை
என்னை முதியோர் விடுதியில்
வந்து பாற்கிறான்....

  ********
எத்தனை நேரமிருந்தாலும்
இரவு மிகவும்
குறுகியதாகவே இருக்கிறது.........


இங்கே தமிழன்
தமிழில்தான் பேசுகிறான்
மலையாளி மலையாளத்திலும்
மற்றவர்கள் ஹிந்தியிலும்
பாகிஸ்தானிகள் உருதுவிலும்
பஞ்சாபிகள் பஞ்சாபியிலும்
பேசுகிறார்கள்....

தமிழ்நாட்டில் இப்போது
தமிழர்கள் ஆங்கிலத்திலும்
ஆங்கிலம் கலந்த தமிழிலும்
பேசப்படுகிறார்களாம்...

நான் ஹிந்திக்காரனிடம்
ஹிந்தியில் பேச கற்றுக்கொண்டேன்
மலையாளத்தை மலையாளியிடம்
பேசியேதான் தீற்கவேண்டியிருக்கிறது....

அரபிகள் அடிக்கடி
அன்த கேரளா என்று
கேட்டுதான் நமது நாடு
எது என்று தீர்மானித்துக்கொள்கிறார்கள்....

மதராஸி வல்லாஹி
மிஸ்கீன் என்று சில அரபிகள்
கேரளா ஹராமி என்று
பல அரபிகளும் இந்திகளும்....

எப்போதெல்லாம் தமிழன்
மலையாளியிடம் ஏமாறுகிறானோ
அப்போதெல்லாம்
மலையாளி கொலையாளி
என்று திட்டி மனதை
தேற்றிக்கொள்வான்....

அதிகமான இடங்களில்
பாகிஸ்தானிக்கு உற்ற
நண்பர்கள் பட்டர்களாக
மட்டுமே இருக்கிறார்கள்
கேட்டால் இருவருமே
ஹமாரா தோஸ்த் ஹே
என்று நாறுகிறார்கள்.....

வழி கேட்டால் மலையாளி
எவ்வளவு தூரம், எப்படி
போகலாம் என்பது வரை
சொல்லிக்கொடு்பபான்...

இன்றைக்கும் ஓஃபீசுக்கும்
கோஃபிக்குமான உச்சரிப்பு
சர்ச்சைகளில் உடன்பாடு
ஏற்படவே இல்லை....

நாம் வழி கேட்போம் என்று
முன்கூட்டியே தெரிந்து
ஒதுங்கி ஒன்றுமறியாததுபோல்
நின்றுகொள்வான் தமிழன்...

டிக்கெட் இல்லாத
பயணம் இ்பபோது சாத்தியம்
லேப்டாப் இல்லாத பயணம்
இப்போது சாத்தியமற்றது...

என்னதான் கேமரா வைத்தாலும்
சிக்னல் போஸ்ட்களை
இடித்தே நிற்கும் ஜி.எம்.சி
வண்டிகள்....

செவியில் சேம்சங்
நொடியில் செவிடு....
சொல்ல வந்தேன் உன்னிடம்.... 
***************************

நீ வருவாய் என 
காத்திருந்தால் நீ
வருவதே இல்லை

நீ வந்ததாய் சொல்லும்
நேரங்களில் நான்
இருப்பதும் இல்லை....

நான் வரும்போது
நீ இருந்தாலும் நான்
அறிவதில்லை - நீ
இருப்பதை ஒருபோதும்
தெரிவித்ததும் இல்லை....

நீ சாங்கேத பாஷையில்
நிறைய சங்கதிகள்
சொல்கிறாய் - என்ன
சொல்கிறாய் என்று
அறியாதபோது சங்கடாமாய்
இருக்கிறது.....

நொடியிடையில் என் இமைகள்
சுருங்கிவிடுகிறது உன்
விழியை பாற்கையில்- சூரியனை
உற்று நோக்கி
தோற்றுப்போவதுவதுபோல்
இருக்கிறது....

ஏதோ சொல்ல வருகிறேன்
நீ எதையோ சொல்லி
சிரித்துவிடுகிறாய் - நான்
சொல்லாமலேயே
நிறுத்தி விடுகிறேன்

என் சிந்தனைகள்
புலம்பெயர்கின்றன.....

--------------------

எனது பழைய நாட்குறிப்பேடிலிருந்து.....

கலைஞரின் அறிவு பிடிக்கும்

மூப்பனாரின் அரசியல் பிடிக்கும்

வைகோ வின் கம்பீரம் பிடிக்கும்

அம்மாவின் துணிச்சல் பிடிக்கும்

இல.கணேசனின் தமிழ் பிடிக்கும்

நல்லக்கண்ணுவின் எழிமை பிடிக்கும்

பி.ஜெ வின் உடனடி பதில்கள் பிடிக்கும்

பேரா. ஜவாஹிருல்லாஹ்வின் மேடைப்பேச்சு பிடிக்கும்

தெஹ்லானின் நட்பு பிடிக்கும்

திருமாவின் வீரம் பிடிக்கும்

ஆர்.எம்.வீ.யின் அமைதி பிடிக்கும்

கேப்டனின் அறியாமை பிடிக்கும்

தளபதியின் பணிவு பிடிக்கும்

நாஞ்சில் சம்பத்தின் இலக்கிய பேச்சு பிடிக்கும்

வைரமுத்துவின் கவிதை வாசிப்பு பிடிக்கும்

சத்தியராஜின் நக்கல் பிடிக்கும்

கவுண்டமணியின் கோபம் பிடிக்கும்

வடிவேலுவின் காமெடி பிடிக்கும்

இப்படியே வெட்டியாய் இருந்து எழுதவும் பிடிக்கும்.......

எப்போதோ எழுதிய வரிகள்
**************************

உன் பார்வை
பயப்படுத்துகிறது - உன்
விழியால் விழுங்கிவிடுவாயோ
என பயப்படுத்துகிறது.....

என் இதயம்
படபடக்கிறது - நீ
உதிற்கும் வார்த்தைகள்
என்னவாக இருக்குமென்று....


நான் இன்னும்
தூங்கவில்லை - என்
இமைகள் மூட
மறுப்பதால் சொல்கிறேன்.....

இன்னும் உயிர்
இருக்கிறது - என்
இதயம் துடித்துக்கொண்டே
இருப்பதால்
சொல்கிறேன்....

யாரைக்கேட்டு
என் எதிரில் வந்தாய் - என்
பாதிப்புக்கு யார்
பதில் சொல்வார்......

உன் கண்களை
தந்துசெல் - நான்
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்...

உன் இதயத்தை
தந்துசெல் - நான்
வாழ்ந்துகொண்டேயிருப்பேன்....

நான் கற்றுமுடித்த
பாடங்களில் இதுவரை
தோற்றதே இல்லை - இதோ
காற்றில் வரும் உன்
வார்த்தையில் தினம் தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.....


நினைவுகளை என்னில்
நெய்து செல் - உன்
கனவுகளாய் நான்
வாழ்ந்துகொள்வேன்....