Sep 18, 2015

நீ நானில்லை....




சட்ட கீசையில பைசா இரிக்கி
பத்து ருவா எடுத்து குடு
பஸ்ஸுல டிக்கெட்டும் எடுத்து
உச்சக்கி சாப்பிடவும் சொல்லு
சாப்பாடு கொண்டு போவச்சென்னா
கெளரவக்குறச்சலு ஒம் மவனுக்கு.......
.
ரேஷன் கட அரி வாங்கி
தின்னு வளத்துனா என் உம்மா
பள்ளிக்கொடத்துக்கு புஸ்தவம்
வாங்க வழியில்லேண்ணு
அஞ்சாங்கிளாசோட நிறுத்திட்டேன்...
.
அதுக்குணு உங்க புராணத்த
படிக்கிய புள்ளைட்ட பாடாதீங்கோ
அவனும் அப்டிஒண்ணும் இல்லாம
வளரட்டுண்ணா செல்லுதீங்கோ
உங்களுக்கு வாங்கி தர யாருமில்ல
அவனுக்கு நீங்க இரிக்கிதீங்கல்லியா....
.
படிச்சிருந்தா சர்க்கார்
உத்தியோகத்துல இரிக்கிலாம்
படிக்காத்ததுனால இப்போ
இந்த வட்டு புடிச்சி நோவ நோவ
ஓடவேண்டியிரிக்கி....
.
புள்ளியளுக்கு பைசா செலவு
செய்யியத சொல்லைல - பைசாக்க
அரும தெரியாம வளரக்குடாதுண்ணுதான்
வாயில வாறதை பொலம்புறது.
மொவனுக்க மேல பாசம் கூடுன
உம்மாக்கு தேச்சியம் வரத்தான் செய்யும்....
.
நாம பட்ட பாடு நம்ம
புள்ள படப்டாது அதுதான்
எனக்க ஆசையும் பிரார்த்தனையும்
செரமம் அறியணும் ஆனால்
செரமப்படுத்தப்டாது....
.
துளித்திளியாய்
பெய்திறங்குகிறது கண்ணீர்
போட்டும்மா உனக்கு மட்டுமா புள்ள
என் வாரிசுல்லா அவன்
நல்லா வரணும் நல்லா இரிக்கணும்
அதுக்குத்தான் எல்லாம்...

Jul 12, 2015


அன்புள்ள அம்மாவுக்கு,

அண்ட சராசரங்கள் உன்னால்தான்
ஆளப்படுகிறது என உன் பிள்ளைகளால் ஆற்பரித்தறைகூவல் விடுத்தபோது
நீதியின் வெளிச்சம்காணவியலாமல்
நேற்றும் முந்தைய நாட்களிலும்
சிறை கொண்டிருந்தாய்...
.*
அஃதோர் அகல்விளக்கு
உடைந்து தெறித்ததில்
இருண்டுபோன இடைவெளியில்
சத்தமின்றி நீ வெளியேறியதில்
செத்து விழுந்த நீதியை நானறிவன்....
*
அதுவல்லவென் வினா..
.
அ' என எழுத்தறிவிப்பாயென
ஆ' வென்றழுதேன் நான் - ஆனால்
அம்மா என்றழைக்காத
உயிரில்லாவிடத்து சும்மாவேனும்
அம்மாவாகிப்போனாயோ நீ...
.
அமுதம் தொடும் காலத்தும்
அம்மாவென்றே அழுகிறேன் - என்
அம்மாவென்றால் நீ என்
அழுகுரல் கேட்டிருப்பாய் நீதான்
சும்மாவேனும் அம்மாதானே.....
.
பாலருந்து வயதில் எனக்கு
மதுவூட்டும் தமிழ்குலத்தில்
பிறந்துபோயினேன் நான் - விஷம்
கொண்ட நாவால் நான் சும்மாவேனும்
அம்மா என்றழைக்கிறேன் உனை...
*
தள்ளாடும் தந்தையும்
ஃபுள்ளாடி வீழும் தங்கையும்
அரை நிர்வாணமாகும் அண்ணனும்
ஆட்டுவிக்கப்படுகின்றனர்
உன் மதுக்குப்பிகளால் - இன்னும்
உனை தவிக்கவைக்கவில்லையோ
நீ சும்மாவாகிப்போன அம்மாவோ....
.
அன்றொருநாள் அப்பா
பிறசவித்த சாராயக்குப்பிக்கு
இன்றும் புனிதம் தேடுகிறார் -ஆனால்
அப்பாக்களையே குடிமுழுகவைத்து
சும்மாவேனும் ஆர்ப்பரிக்கிறாயோ...
.
என் வலிகளோ வார்த்தைகளோ
உனை ஏதும் செய்யாதிருக்கையில்
நீ அம்மாவல்லவே .....
நீ சும்மாவாகிப்போனவள்....