Jul 27, 2013

எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்...



















நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் அல்லது சமூக அமைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நாம் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். 

தினமும் வேலை, தொழில் என் வீடு, என் குடும்பம் என ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே நமது வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கும்போதும் நம்மைச்சுற்றியும் நமது பகுதியை சுற்றியும் நடக்கும் நல்ல விஷயங்களையும் அதே போன்று நமது சமூகத்தை தொடர்ந்து பாதித்துக்கொண்டிருக்கும் அநியாயங்களையும் அவலங்களையும் நாம் நம்மில் உட்கொள்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன்.  

ஏதோ வெகு சிலர் மட்டும் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் எல்லா விதமான நல்லது கெட்டதுகளையும் தமது வாழ்க்கையோடும் தமது சுற்றத்தோடும் சேர்த்து உணர்ந்து அதற்காக வாழ்த்தவேண்டியவைகளை வாழ்த்தி, விமர்சிக்கவேண்டியவைகளை விமர்சித்து, எதிற்கவேண்டியவைகளை எதிர்த்து, கோபப்படவேண்டியவைகளை கோபித்து சமூகத்தை தனதாக்கிக்கொள்கிறார்கள்.

துர்ரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும், சமூகத்தில் இப்படிப்பட்ட வெகு சிலரை இந்த சமூகம் கோமாளியாகவோ, அல்லது ஏதுமற்ற ஒரு ஒன்றுமில்லாதவனாகவோ ஏளனமாகவே பாற்கிறது. இது இந்த நாட்டின் சாபம் என்றோ அல்லது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் விழுந்துபோன சுயநலத்தின் விஷ விதை என்றோதான் சொல்லத்தோன்றுகிறது.  

இப்படி சமூகத்தின் முக்கியத்துவதையும் சமூகத்தினூடே நடந்துகொண்டிருக்கும் அவலங்களையும் அக்கிரமங்களையும் எதிர்த்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் அக்கிரமக்காரர்களுக்கு எதிராகவும், அல்லது அதிகார வற்கங்கங்களுக்கு எதிராகவும் தன்னால் ஆயுதம் ஏந்தவோ, அல்லது சட்டரீதியாக மோதவோ இயலாமல் தனிமைப்பட்டு போகும்போதும் தன்னால் இயன்ற அளவுக்கு விமர்சனங்களாலோ, தனது குரல்களாலோ தமது ஆதங்கத்தை இந்த சமூகத்திற்காக வெளிப்படுத்தும்போது அவனோடு குறைந்த பட்ஷம் கை கோற்கவோ அல்லது குரல் கொடுக்கவோ தாயராகாமல் அவர்களை சமூகநல அநாதைகளாகவும் கோமாளிகளாகவும் நாம் பாற்க ஆரம்பித்து பல காலங்களாகிவிட்டது என்பதே உண்மை.

காலம் செல்லச்செல்ல அதிகார மோகத்தின் கைகள் இரண்டிலிருந்து ஈராயிரமாக படர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி இராஜாங்கமாகவும், மிகப்பெரும் பிராந்தீய பிரபுக்களாகவும் சுல்தான்களாகவும் இருப்பதிலிருந்தே இந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு கேவலமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ள இயலும். 

இன்றும் இந்த நாட்டில் சிறிதேனும் மனிதாபிமானமும், மனிதநேயமும், மக்கள் வாழ்வதற்கான சூழலும் இருப்பதற்கு காரணம் இதுபோன்ற சமூகத்திற்காக சமூக அவலங்களுக்காக குரல்கொடுக்கும் கோமாளிகள் இருப்பதால்தான்...

ஒரு பக்கம் பணம் மட்டும் பொருளாதாரம் சார்ந்த கொள்ளையடிக்கும் கூட்டம், இன்னொரு பக்கம் அதிகார வற்கங்களின் ஊழல் ராச்சியம், அரசில் கொலைகள், கொள்ளைகளின் வளற்சியும் அதனை  எதிர்த்துக்கேட்பவர்களை கூலிப்படைகளை ஏவி தலைமுறையே வளராத அளவுக்கு அழித்துவிடல் என தொடரும்போதும் மறு பக்கம் சிறுபான்மை மக்களும், ஜாதீய இன்னல்களால் பரிதவிக்கும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதப்படும் மக்களும் திட்டமிட்டு சித்திரவதைக்குள்ளாவதும், திட்டமிட்டு தாக்கப்படுவதும், அவர்கள் மீது திட்டமிட்டு சுமத்தப்படும் வீண்பழிகளும் இந்த நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்துவிட்டுத்தான் இருக்கின்றன.

அதன் விழைவு இப்போது மிகவும் துல்லியமாக கணக்கிட்டு செயல்திறன் உருவாக்கி, பல வித வழிகளில் ஒட்டுமொத்த சமுதாயத்தை அழித்தொழிக்க பலவிதமான வழிகளில் சூழ்ச்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இப்போது நடக்கும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் என்று கூறலாம்.  

காலம் நம் மீது சில பொறுப்புக்களை தருகிறதோ என்று நினைக்கிறேன்
அதன் வெளிப்பாடுகளினூடே நாம் பயணித்து மனித உயிர்களின் விலை என்ன என்பதை இந்த சமூகத்திற்கு உணர்த்தும் காலம் வந்துவிட்டதோ என்றும் நான் எண்ணுகிறேன்.

இயேசுவும், மோசேவும் மற்றும் அதற்கு முன்பு வந்த  தூதர்களும் இறைவன் எந்த ஒரு அழகான மார்க்கத்தை அல்லது வாழ்க்கை வழிமுறையை இந்த உலக மக்களுக்கு தருவதற்காக பணித்தானோ அதன் மூலம் எந்த வெற்றியை மக்களுக்கு தருவதற்கு விரும்பினானோ அதையே இறுதியாக முஹம்மது நபி (PBUH)யின் மூலம் தந்திருக்கிறான். ஏதேதோ காரணங்களால் அந்தந்த சமூகங்கள் வேறுபட்டுப்போயிருந்தாலும்   போதித்த விஷயங்களில் எந்த மாற்றத்தையும் காண இயலவில்லை. அப்படிப்பட்ட சத்திய மார்கத்தை, அமைதியின் வழியை போதிக்கும் இஸ்லாம் எனும் வழிமுறையை இன்று கூண்டிலேற்றி கிழித்தெறியப்பார்க்கும் சில சமூக விரோத கும்பல்களின் வெறுப்பிலிருந்து உமிழப்பட்ட விஷமானது அந்தந்த சமூகத்தின் மக்களிடம் முஸ்லிம்களை கோரமாக பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் மிகவும் வெட்டவெளிச்சமானதும் கூட. 

எந்த ஒரு செயல் அல்லது எந்த ஒரு கொள்கையை நோக்கி மக்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கிறார்களோ அந்த கொள்கைக்கு எதிராகத்தான் அதிகம் எதிர்ப்பும் இருக்கும் என்பது நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவே நிதர்சனமான உண்மை.

9/11 க்கு பின்னர்தான் 20 -ம் நூற்றாண்டின் இறுதி யை விட 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும், இதனை குறைக்கவும் உலகமெங்கும் பல வழிகளில் சூழ்ச்சிகளும், பெரும் கொடூரங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
 அதன் தாக்கம் இந்திய துணைக்கண்டத்திலும் பரிணமித்து படர்ந்துகொண்டிருக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சமூகம் புதிய யுக்திகளை கையாள்கிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் தொடர்ந்து கண்டுவருவது.

இதற்கிடையில்  பல சூழ்சிகள் இங்கே இறைவனால் முறியடிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கல் நம்மீது விழும்போதும் அதைவிட பெரிய கற்களால் இறவன் எதிரிகளை தாக்குறான் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்...

ஆக இதுபோன்ற பல நிகழ்வுகளும், பழி சாரல்கள் நம்மை குற்றவாளிகளாக ஆக்குவவதற்காக நடைபெற்றாலும் இறைவன் எல்லா சமூகத்தாரிலும் நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் நம்மோடு வைத்துள்ளான் என்பதே உண்மை.

நம்மீதோ அல்லது ஜாதீய கொடுமைகளாலும், சமூக்தினின்றும் வெளியேற்றப்படும் மக்கள்மீதோ சுமத்தப்படும் பழிகளுக்கும் , கொடுமைகளுக்கும் ஒரு மிகப்பெரிய தோல்வியை ஆதிக்க வற்கமும் பாஸிஷ சக்திகளும் எதிக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை...

ஆனாலும் இந்த சமூகத்தில் நம்மை நாமாக வெளிக்காட்டவேண்டிய கட்டாயமிருக்கிறது. 

அதற்கான களம் இப்போது நமக்காக ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.தொடர்ந்து நடைபெறும் பல இன்னல்களையும் நாம் பொறுத்துக்கொணேடும், நமக்கென்ன எவனோ பாதிக்கப்பட்டால் நாம் எதற்கு கவலை கொள்ளவேண்டும் என்கின்ற குரூர புத்தியை களையும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே சரி.

சமீப காலமாகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பல கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. 

பெரும்பாலான கொலைகள் அரசியல் சார்ந்த கொலைகளாக இருக்கிறது, அடுத்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களுக்காக கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் அரசியல் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய கொலைகளில் கொலை செய்யப்பட்டவர்கள் சாதாரண மக்களாக இருக்கும் பட்ஷத்தில் எந்த பெரிய கட்சிகளும் போராட்டம் நடத்துவதோ பந்த் நடத்துவதோ அல்லது அந்த கொலைகளை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை கோரவோ செய்வதில்லை. அது போன்ற கொலைகள் நடக்கும்போது அந்த கொலைகள் பற்றி பொதுவாக கருத்துக்கேட்க இப்போது வருவதுபோல் மத்தியிலிருந்தும் மாநிலத்திலிருந்து சிறப்பு குழுக்கள் யாரும் வருவதில்லை...

ஆனால் சில கொலைகளில் கொலை செய்யப்படுபவர் ஏதாவது அரசில் கட்சியிலோ, அல்லது பெரும்பான்மை சமூகத்தைச்சார்ந்த மதவாத கட்சிகளை சார்ந்தவர்களாக இருப்பின் கொலை செய்யப்பட்டது சொந்த பிரச்சினைக்காகவோ, அல்லது பொருளாதாரம் மற்றும் றியல் எஸ்டேட், றவுடியிசம் போன்ற காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டிருப்பினும் அந்த கொலைகளை தமது கட்சியின் அல்லது மதத்தின் சார்பாக மாற்றி அதனை வைத்து கேவலமான அரசில் செய்யும் நிலையும் தமிழ்நாட்டில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

தொடர்ந்து பல கொலைகளில் எந்த விசாரணையும் துவங்கும் முன்பே அந்த கொலை இவர்களாதான் செய்தார்கள், இதற்காகத்தான் செய்தார்கள் என்பதபோல் ஒரு சமுதாயத்திந் மீதோ இனத்தின்மீதோ, ஜாதியின்மீதோ திணித்து அதனை உலகம் நம்புவதற்கும் பொதுப்புத்தயில் மோசமான தீவிரவாத முத்திரை விழுவதற்காகவும் தமிழ்நாட்டின் முக்கிய ஒளி மற்றும் அச்சு ஊடகங்கள் முன்னமே பெரிதுபடுத்திவிடுகின்றன. ஆனால் விசாரணைகள் தொடர்ந்து நடக்கும்போது அதில் வரும் முடிவுகளை பின்னர் இதே தரம் கெட்ட ஒளி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் குற்றவவாளி முஸ்லிமல்லாதவராக இருக்கும் பட்ஷத்தில் அதனை வெளியிடுவதோ, அல்லது தொலைக்காட்சியில் திரும்பவும் அதனை சொல்வதோ இல்லை மாறாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர்...


ஆனால் தொடர்ந்து சில கொலைகளில் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் வீண் பழி சுமத்தப்படுகிறார்களா,, அல்லது அவர்கள்தான் குற்றவாளிகளா என்பதை அறியத்தருவதும், இவர்கள்தான் அந்த கொலைகளை செய்திருந்தால் அந்த கொலைகள் என்ன காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நேரமையாக விசாரித்து முக்கியமாக பொதுமக்களுக்கு சொல்லவேண்டியது காவல்துறையின் மற்றும் நீதித்துறையின் கடமையாகும்...

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்தவர்களைப்பற்றியும், ஊடகங்கள் திடீரென வெளியிடும் முஸ்லிம் பெயர்கள் பற்றியும், காவல்துறையோ அரசோ வெளியிடும் வரைபடங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றியும் சரியாக தெரிந்துகொள்ளவும், அவர்கள் இந்த கொலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதையும் அவர்கள் ஏன் இப்படி பழி சுமத்தப்பட்டனர் என்பதுபோன்ற காரணங்களையும் சமூகத்திற்கு சரியாக தெரிவிக்க வேண்டியதும் ஊடகங்களின் கடமையாகும். 


தொடர்ந்து நடக்கும் இந்த கொலைகள் மற்றும் அசம்பாவிதத்திற்கு மதச்சாயம் அல்லது மதத்தோடு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்மீது பழி சுமத்துவதற்கும் காரணம்தான் என்ன என்பதை ஆயந்தறியவேண்டியதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொறுப்பிருக்கிறது.


நாம் ஏன் பழி சுமத்தப்படுகிறோம், அப்படியே நமது சமுதாயத்தினர் ஏதேனும் கொலைக்கு காரணமாக அமைந்திருந்தால் அதற்கான காரணம்தான் என்ன..??? அவர்கள் சம்மந்தப்பட்ட அல்லது செய்த கொலைக்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருந்ததா..அல்லது பொருளாதார பிரச்சினைக்கான கொலையா..அல்லது மதம் சார்ந்த முன் விரோதமா என எந்த காரணமாக இருப்பினும் அதனை அறியவேண்டியதும், பிரச்சினைகள் தனிப்பட்ட பிரச்சினைகளாக இல்லாத பட்ஷத்தில் சமுதாயத்தின் மீது பழி விழும் அளவுக்கு ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது எந்த அளவுக்கு கேவலமானது என்பதையும், அதுபோன்ற செயல்கள் சமுதாயத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் அதுபோன்ற குற்றவாளிகளுக்கும், சமுதாயத்தின் மக்களுக்கும் விளிப்புணர்வை ஏ்ற்படுத்தவேண்டியதும் நமது கடமையும், பொறுப்புமாகவும் இருக்கிறது என்பதையும் நாம் எடுத்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

அதே போன்று எந்த கொலைக்கும், எந்த பிரச்சினைக்கும் முஸ்லிம்களையே குறிவைத்து பழி சுமத்தும் மதவாத அமைப்புகளின் கேவலமான அரசியல் கொள்கைக்கும், மதக்கலவரங்களை உருவாக்கும், அல்லது பெரும்பான்மை மக்களின் மனதை மாற்றி அவர்களின் மனதிலும் வாழ்க்கை நடைமுறையிலிருந்தும் முஸ்லிம்களை அகற்றி தனிமைப்படுத்தி  முஸ்லிம்கள் மீதான எண்ணங்களி்ல் விஷத்தை ஊற்ற நினைப்பவர்களிடமி்ருந்து பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் எதார்த்த நிலைமையை காட்டவேண்டிய கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்....


முந்தைய காலங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்களும், சமுதாய மக்களும் அந்தந்த ஊர் அல்லது பகுதி சார்ந்த ஜமாஅத்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஊர் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டனர். அசம்பாவிதங்கள், அக்கிரமங்களை எதிர்த்து மத இன ஜாதி மொழி மறந்து அனைவரோடும் சேர்ந்து கட்டற்று போராடவும்  சமுதாய நலனுக்காக உழைக்கவும், சமுதாய மக்களின் நலனுக்கு ஏற்படும் இன்னல்களை சமுதாயத்தின் துணையோடு போராடவும் முடிந்தது. ஜமாஅத்களின் மீது மக்களுக்கும் மிகுந்த மரியாதையும், ஜமாஅத் நிர்வாகங்களின் மீது மக்களுக்கும், அரசு இயந்திரங்களுக்கும் பயமும் மரியாதையும் இருந்தது..

ஆனால் முஸ்லிம் சமுதாயம் பல நூறு இயக்கங்களால் பிளவு பட்டு வீட்டுக்கு ஒரு கட்சித்தலைவரும் இயக்கத்தலைவரும் வந்தபின் சமுதாய கூடங்கள் களை இழந்து செயலிழந்து கேட்பாரற்று போயிருக்கிறது. இதனாலேயே இன்றைய இளைஞர்களில் பலரும் கூட சிறு வயதிலேயே கட்டுப்பாடற்று வழிகெட்டுப்போவதும், பயமற்றநிலையில் தனது இயக்கத்திற்காகவும், இயக்கங்களின் கொள்கைக்காகவும் உள்ளுக்குள்ளேயே துவேஷமும் காழ்ப்புணற்சியும், பகையும் கொண்டு சக மனிதர்களை நேசிக்க மறந்த நிலைக்கு போய்க்கொண்டிருப்பதும் நிகழ்கிறது...

இதுவரை நடந்த எந்த கொலைகளும் இஸ்லாத்திற்காகவோ அல்லது இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்காகவோ, நமது நாட்டில் இஸ்லாமிய முறைப்படி வாழ இயலவில்லை என்பதற்காகவோ நடக்கவில்லை, ஆனால் முஸ்லிம் இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகவும், முஸ்லிம்களை அழித்தொழிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை உட்புகுத்துவதற்காக பாஷிச சக்திகள் செய்யும் பல தமூக விரோத செயல்களால் பாதிக்கப்பட்டதாலும் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும், பொருளாதாரம், மற்றும், தொழி போட்டி என வேறு வேறு காரணங்களுக்காகவே நடந்திருக்கிறது என்பதே உண்மை...

யாரையாவது எப்படியாவது பிடித்து, மனதை மாற்றி, அவர்களுக்கு எதையாவது கொடுத்து ஆள் சேர்த்து இஸ்லாத்தை நிலை நிறுத்தவேண்டிய அவசியம் இஸ்லாத்திற்கு இல்லை, அதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைவிட இஸ்லாம் அதனை வெறுக்கிறது என்பதே உண்மை...

இஸ்லாத்தில் போலீஸிற்கு ஆள் எடு்க்கவில்லை... 

இஸ்லாம் எனும் இனிய மாற்கத்தை அது சொல்லும் நற்பண்புகளை, நன்நெறிகளை, எந்த அளவுக்கு நான் அறிந்து என்னுடைய வாழ்கையில் உட்படுத்தியிருக்கிறோனோ அதே போன்று  அதனை அறியாத மக்களுக்கு நன்மை கருதி எடுத்துச்சொல்வது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு கடமையே தவிற வலுக்கட்டாயப்படுத்துவதோ யாரையும் இஸ்லாம் என்றால் என்று தெரியாதவாறே அவர்களை  இணைத்துக்கொண்டு அடையாள அட்டை கொடுப்பதற்கோ இஸ்லாத்தில் இடமில்லை....


பிறப்பால் முஸ்லிமாக இருப்பவர்களெல்லாம் சுவர்க்கத்திற்கான அடையாள அட்டையோடு இருப்பதாகவோ, அக்மார்க் முஸ்லிமாக இருப்பதாகவோ மற்றவர்கள் நினைத்தால் அதுவும் மிகப்பெரிய மெகா தவறு. நீங்கள் படித்தறிந்தபின் அல்லது இஸ்லாத்தின் குணங்களால் ஈற்கப்பட்டு இஸ்லாத்தை தழுவ முற்பட்டால் அதற்காக பெரிய பெரிய தவமெல்லாம் இருந்து ஏதேதோ செய்து அடையாள அட்டை வாங்கவேண்டிய அவசியமெல்லாம் இங்கே இல்லை...

ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, இறுதித்தூதர் முஹம்மது ஸல். அவர்கள் அவனின் தூதர் என்று கூறினால்போதும்...அதன் பின் அவரேதான் அவருடைய வழியை தேடிக்கொள்ளவேண்டுமே தவிர அவர் இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக யாரும் அவருக்கு சும்மாசனத்தை வழங்கவோ, குறைத்து மதிப்பிட்டு கேவலமாக நினைப்பதோ இல்லை. அவரின் நன்மை தீமைகளைகளை இன்னொருவரோ இன்னொருவரின் நன்மை தீமைகளை அவரோ சுமக்கப்போவதில்லை....


ஆக தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் உட்கட்டமைப்பில் பல பெரிய பிழவுகள் ஏற்பட்டு அதன் சரியான கட்டமைப்பை இழந்து  இளைஞர்கள் பலவேறாக பலவிதமான அரசில் சார்ந்த கொள்கைகளால் பிழவுபட்டு அதனூடே தனது மார்க்க வழிமுறையிலும் பல கருத்துவேறுபாடுகொண்டு, இன்று தனது விலாசம் இழந்து நிற்கிறார்கள்.. 

இதனால் நாம் இழந்தது ஏறாளம். தலைமைகளே இல்லாத காலத்தில்கூட நாம் கட்டுக்கோப்பாய் இருந்தோம். தமிழ்நாட்டில் ஓராயிரம் இயக்கத்தலைவர்களும் அரசில் தலைவர்களும் ஆனபோது கட்டும் கோப்பும் கலைந்து கேவலப்பட்டுநிற்கிறோம்....

இயக்கங்களையும் அரசில் கட்சிகளையும், அமைப்புகளையும் சார்ந்திருந்தாலும் அவரவர் சார்ந்த ஜமாஅத்களோடு தொடர்பில் இருக்கவேண்டியதும் கடமையாகிறது...அதேபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞற்களையும், மக்களையும் உடனுக்குடன் தடுத்துவைப்பதும் இளைஞர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொள்வதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்றுவதும் அதற்கான விளிப்புணர்வு நடத்துவதும் இயக்கங்களுக்கும், ஜமாஅத்களுக்கும் கடமையாகும்....


அரசியல் சார்ந்த, இயக்கங்கள் சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும், அவர்களின் தவறான நிலைபாடுகளுக்கோ, அவர்களுக்குள்ளேயான பிரச்சினைகளுக்கோ அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கோ ஜமாஅத்கள் துணைபோவதோ, ஜமாஅத்தைச்சார்ந்த மக்கள் அதற்கு துணைபோவதோ கூடாது எனவும், நியாயமான பொதுவான செயல்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஒட்டுமொத்த மக்களோடு துணை நிற்பதும் போராடுவதுமே சிறந்தது என்றும் நாம் நினைக்கவேண்டும்....


பொதுவாகவே ஊடகங்களை எதிர்த்து மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தவேண்டிய கட்டாயம் ஜமாஅத் கட்டமைப்புகளுக்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன், மட்டுமல்லாது அசம்பாவிதங்களுக்கும், அரசில் பிரச்சினைகளுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவதையும், பழி சுமத்துவதையும் வன்மையாக கண்டித்து அதற்காக அரசு இயந்திரங்களை ஜமாஅத்கள் நேரடியாக புகார்கள் அனுப்புவதும், போராட்டம் செய்வதும் சிறந்த வழியாகும்...


எந்ஒரு ஜமாஅத் கட்டமைப்பும் எந்த இயக்கத்தாலோ, எந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாகவோ அறியப்படாமலும் இருக்கவேண்டியதும் மிக முக்கியமான பொறுப்புமிக்கதாகவும் இருக்கிறது...


ஆக முஸ்லிம்கள் எப்படிப்பட்ட  இக்கட்டான சூழ்நிலையில் எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் மிகவும் அறிந்து சமுதாயத்தின் மீதான் பழி சுமத்தல்களையும், கேவலமான குற்றவாளிகளாகவும், சமூகத்தின் முன்னால் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதையும் இந்திய தேசத்தின் முன்னால் தோலுரித்துக்காட்டும் கடமையும் உரிமையும் கூட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது...
அதே சமயம் நாம் வீண் பழி சுமத்தப்படுவதிலிருந்து நாம் நிரபராதிகள் என்று தெழிவு படும்போது அன்றைய தினம் மிகப்பெரும் போராட்டத்தின்மூலம் அதனை மக்களுக்கு முன்னால் தெரிவிக்கவேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கிருக்கிறது...


மாறாத சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கேவலமான விவாதங்களோ நாய்கள் குரைக்கும்போது பதிலுக்கு  பன்றிகளைப்போல் அவர்களின் சாக்கடையை கலக்கி அவர்களைப்போல் ஆகாமல் நாம் பரிசுத்தமான மார்க்கத்தால் வழி நடத்தப்படுபவர்கள், ஆதலால் சுத்தமாகவே இருப்போம் என்று நமது நற்செல்களால் பதிலளிப்பதுமே நமது பெரிய கடமையாகும்....



அரசு இயந்திரங்களும் கபோதிகளின் கூடாரத்தில் கஞ்சி குடிப்பவைதான். ஆனாலும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தில் ஒரு சிறு பகுதியே அப்படி இருக்கிறதே தவிர இன்றும் நெஞ்சுரம் மிக்க நேர்மையான அதிகாரிககளும் அரசும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் நம் நினைவில் வைத்து அவர்களோடு ஒத்துழைத்து நமது நிபராதித்துவத்தை தெழிவு படித்த முற்படுவதும் நமது தலையாய கடமையாகவே நான் பார்க்கிறேன்....


அனைத்து சமுதாய, மத, இன, ஜாதி, மக்களும் ஒன்றாய் சேர்ந்து எந்த ஒரு வெறியும் அற்ற இறைவன்மீதான பற்றுதல்களோடு மட்டும் முன்னேறி நல்லதொரு சமூகத்தை உருவாக்க நாம் காரணமாக அமையவேண்டும்.....



அபூ ஃபஹத் 

Jul 6, 2013

வனாந்தரம்.........



இருட்டும் வெளிச்சமும்
ஒரு சேர முடிங்கிக்கிடக்கிறது
எமது அறைகளுக்குள் - நாங்கள்
விளக்கேற்றி வைத்த 
வாழ்க்கைகள் எப்போதும்

வெளிச்சத்தில் இருக்கட்டும்.....

கட்டில்களுக்கிடையே
இடைவெளிகள் - எங்கள்
மனங்களுக்கிடையில் 
எப்போதும் இல்லை ஏனெனில்
எங்களின் ஜாதிக்கு ஒரே பெயர்...

என் வீட்டு வாசலில்
ஏதோ ஒரு யாசகன் - அரிசி
தருவதற்காய் முன்வாசல்
வந்தபோது என்னவர் 
கோபப்படுவார் அன்னிய 
ஆண் முன்
வருதல் நன்றல்ல....

இதோ என் பக்கத்து
இருக்கையில் யாரோ
கைவிட்ட ஒருவரின்
முகத்தில் இரண்டு சாயல்கள்
ஒன்று கணவன் 
மற்றொன்று யாசகன்....

என்னவோ தெரியவில்லை
வீட்டுப்படிகள் மிதித்து
ஆண்டுகள் பலவானபோதும்
இன்னும் கண்களில்
எம் வயிற்றுப்பிள்ளைகளின்
அழகிய வாழ்க்கை ஓடுகிறது....

எப்போதெல்லாம் என்
சிரிக்கிறோமோ அப்போதெல்லாம்
எங்கள் இதயத்தில் வந்துபோவதும்
நிறைந்து நிற்பதுமான
என் குழந்தைகளின் ஏதோ
சில பல நினைவுகள்தான்....

கட்டில்கள் சாட்சி 
சொல்லவா போகிறது - என்
ஆற்றாமைக்கு யார் காரணமென்று
ஆனால் என் வீட்டு வாசற்படிகள்
அவ்வப்போது சூழ்ச்சி
செய்யாமல் இருக்கவேண்டும்
என் பிள்ளைகளை.....

எம் வாழ்க்கையை 
காலம் மாய்த்துவிட்டதாய்
சொன்னால் அது பொய்
எமக்கேயான இவ்வாழ்க்கை
எந்த நிலையிலும் என் 
பிள்ளைகளுக்கு வேண்டாம்...

கொடிது.. கொடிது...
யாருமற்ற சாகா வரம்
கொடிது....

ஒருநாள் வருவான்
ஒரு பொழுது வருவாள்
என மகளையும் மகனையும்
தேடும் நாங்கள்தான் கொடிது...

இனிது.. இனிது
இப்போதைய வாழ்க்கை
இனிது...தனிமையினும்
இது இனிது இனிது...

Jul 5, 2013

அன்புள்ள அம்மாவுக்கு......

அன்புள்ள அம்மாவுக்கு...
**************************


அம்மா.! நீ நலமாய் இருப்பாய்
என்று எனக்குத்தெரியும் - நானும்
நலமாய் இருப்பதாய்
நினைக்கிறேன்....

நகரத்து மாப்பிள்ளை
வேண்டாம் என்றேன் - நீ
நகரம்தான் அழகு என்றாய்
ஆமாம்.. அவரைத்தவிர
எல்லாம் நரகமாய் இருக்கிறது....

பக்கத்து வீட்டு ஆச்சியும்
முன்வீட்டு மாமியும்
அக்காவும் குழந்தைகளும்
அப்பாவும் நல்லா இருப்பாங்க...
உங்களுக்கென்ன
ஊர்லயே இருக்கீங்க....

நான் ஆறாவது மாடியில்
ஏழாவது ஃபிளாட்டில் இருக்கிறேன்
அக்கம் பக்கம் யார் யாரோ
இருக்கிறார்கள் - ஆனால்
யாரும் யாரையும் இதுவரை
தெரிந்துகொள்ளவே இல்லை...

நாம் வீட்டை திறந்தே
வைத்திருப்போம் - இங்கே
வீட்டிற்குள்ளேயே பூட்டிவிட்டுத்தான்
இருக்கவேண்டும்....

கட்டிடங்களுக்கும்
வாகனங்களுக்கும் இடையில்
தினமும் நெருங்கிச்சாகிறோம்
நானும் இந்த நகரமும் - ஆமா
புகையும் அழுக்கும்
வெறுப்பை ஏற்படுத்துகிறது...
....

நம் வீட்டு வேப்பமரம் ரொம்ப
பெருசா வளர்ந்திருக்காம்
தங்கச்சி சொன்னாள் ஊஞ்சல்
கட்டி ஆடுவதாய் - இங்கே
மணி பிளான்ட்டுக்கு மட்டும்
என் கணவர் தண்ணீர் ஊற்றுகிறார்....

புளி கொண்டு வரும்
பாட்டி வந்தா எனக்காய்
கை குத்து புளி வாங்கி வை - பாட்டியையும்
அவங்க மகளையும் நான்
ரொம்ப விசாரிச்சதாக சொல்...

நீ எப்பவும் அழகாதான்மா
இருக்கிறாய் - நான்
இப்பவே நகரத்து
வெப்பத்தில் வெந்து
வயசாகிப்போய் இருக்கிறேன்....


அண்ணன் வந்தப்ப
எள் உருண்டை கொண்டு தந்தான்
நீ சோறு ஊட்டி தந்ததுபோன்று
சுவைத்து சாப்பிட்டேன்
ஏதேதோ இழந்ததுபோல்
அவ்வப்போது அழுகை வருகிறது....


நேத்து லிஃப்ட் வேலை செய்யல
அவரு ஆஃபீஸ் போய்ட்டாரு
புள்ளைங்க ஸ்கூல் போய்ட்டாங்க
நூத்தி இருபது படி
ஏறி எறங்கி காலெல்லாம் வலிக்குது....


ரொம்ப பொறுமையானவள்ணு
ஊர்ல சொல்லுவாங்க - ஆனால்
இங்கே எதுக்கெடுத்தாலும்
டக்குணு கோபம் வருது
காய்கறியிலயிருந்து
காயலாங்கடை வரை ஏமாத்தறாங்க...

பெருநாளுக்கும் திருநாளுக்கும்
நம்ம வீடு நிறைய
செந்தக்காரங்களால
கல கலண்ணு இருக்கும் - இங்கே
சாப்பாடு முடிந்து
தூக்கத்திலோ கடற்கரையிலோ
முடிந்துபோகிறது.....

மெட்டி ஒலியோ
முந்தானை முடிச்சோ
டி.வி. யில ஓடலைண்ணா
யாருமில்லாத தனிமை
திகிலாகவே இருக்கும்....

அம்மா நீ கொஞ்சநாள்
என்னோட வந்து உட்காரும்மா
சில நாட்களாவது
நான் ஊரில் இருந்ததாய்
எண்ணிக்கொள்வேன்....

 ஆமாம்மா...
நீ சில நாட்கள்
இந்த நரகத்தில் எனக்கு
சுவர்க்கத்தை தந்து செல்....

__

அபூ ஃபஹத்