Nov 25, 2014

ஒரு நாள் வரும்......

ஒரு நாள் வரும்.....
*****************************
இன்னும் பெய்திறங்குகிறது
பெரும் மழை - நேற்றுவரையிலான
கடும் வெயிலில் காய்ந்து நிற்கும்
ஒலைச்சருகுகளினூடே
பெய்திறங்குகிறது மழை...
.
சாய்த்திறக்கிய மேற்கூரையில்
ஆங்காங்கே சொருகப்பட்ட
கமுகின் பாளைகளினூடே
வெளிப்பட்டிருக்கவேண்டும்
ஏழ்மையின் ஓட்டைகள்...
.

நிமிர்ந்து பார்த்து கருமேகத்தை
கோபித்துக்கொள்கிறேன் - நீர்த்துளிகள்
வீழ்வதும் வரையறைக்குள்
நிற்காத என் அறைகளுக்குள்..
.
கீச்சிடும் சப்தங்களினூடே
சில மூஞ்சூறுகளின்
மழைக்கோபம் என்மீதான
பரிவின் ஏக்கமாயிருக்கக்கூடும்.....
.
நீண்டு சுருங்கும் புழுக்கள்
எப்போதோ என் பாதங்களை
நக்கி வெளிப்படுத்திய மகிழ்ச்சியில்
சகதியில் வெந்து சுருங்கிய
சருமங்களில் நீற்றல்கள்....
.
எடுத்து வைத்த நேற்றைய
பழஞ்சோற்றில் சற்றே
முன்பு விழுந்திருக்கக்கூடும்
வாரியினின்றும் வழைந்து
நெழிந்த மழை அட்டை...
.
கைக விரல்களின் நடுக்கம்
ஒருபோதும் என் கால்களின்
பலத்தை பாதித்ததேயில்லை
நம்பிக்கையையும்தான்....
.
மறுகால்பாயும் ஓடைகளில்
இன்னும் என் முகம்
தெழிவாய் தெரிகிறது - யாரும்
மாய்த்துவிடவியலா ஏழ்மையின்
சபிக்கப்பட்ட முகம்...
.
ஒரு நாள் வரும்..
அருட்கொடைகளால்
நான் அகமகிழ்வேன்
காத்திருப்பின் அவஸ்த்தையை
அழகிய மேகங்களால்
மூடும் ஒரு நாள் வரும்.....
.
.அபூ ஃபஹத்

Mar 16, 2014

சுயமிழந்த சிங்கம்....


சுயமிழந்த சிங்கம்....
**************************


அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில் 
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....

சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......

அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....

சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....

வாலின் நீளம் வாயின் அகலம்
பற்களின் கூர்மை நகங்களின் பலம்
கால்களின் வேகம் என
தன் பலமறியாமல் பலனிழந்த
சிங்கம் இன்னும் ஆயத்தமாவதை
மறந்து நிழல் தேடுறது....

அட்டைகத்திகள் இன்னும்
நிமர்ந்து நிற்கிறது - காற்று
வேகமெடுக்காதவரை
அட்டைக்கத்திகள் வீரமிடும்
முழங்கும் ஜொலிக்கும்...

சலசலக்கும் சருகுகள்கூட
பயப்படுத்தும் - நரம்புகள்
புடைக்க நெற்றி வியற்க
பிரம்மை கொள்ளும்.....

சற்றும் சுணங்காது
எடுத்து வைக்கும் முன்னங்கால்கள்
பெருங்கூட்டத்தையும்
பின்வாங்கச்செய்யும்
எதிர்த்து நிற்கும்ஆயுதங்கள்
அடங்கிப்போகும்.....

சூழ்சிகளால்
வீழ்த்தப்படுகிறது வீரம்
வீரம் விழுந்தால்
வெற்றியும் வீழும்.....

உள்ளீடற்ற உருவம் கண்டு
பயந்து நடுங்கும்போது
நான் இரவில் இருக்கிறேன்
என்பதை மறந்துபோகிறேன்...

உள்ளீடற்றது உருவமா
அல்லது இரவின்
நிலா வெளிச்சத்தில்
வீழ்ந்த எதோ ஒன்றின்
நிழலா...

இவை இரண்டுமாயிருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்

பயம் மட்டும் நிஜத்தில்
என்னோடு பயணிக்கிறது.....

Feb 20, 2014


சூரிய வெளிச்சத்தில்
மட்டுமே கண்ணயர்கிறேன்
இரவுகள் ஒருவேளை
என் வாழ்க்கையை
இருட்டாக்கக்கூடும்....

என் நண்பர்கள் ஆங்கே
வேலிகளில் மண் குன்றுகளில்
மறைந்திருக்கக்கூடும் - நான்
தூங்குதற்காகவல்ல
என்போன்ற பலரை
மரணத்தினின்றும்
தற்காலிகமாய் காப்பதற்காக ...


நாளை இந்த கல்லைத்தான்
உடைத்து எறியப்போகி்றேன் - என்
தேசம் கொதிக்கும் சுதந்திரத்தை
இதினின்று எய்தும் ஏதோ
ஒரு கல் பெற்றுத்தரலாம்...

எனது உடை அழகானது
என் தந்தையைப்போலவே
என் தாயின் அன்பைப்போலவே  - அவர்கள்
எனக்கு உடுத்திய அன்றே
பீரங்கி ரவைகள் துளைத்து
இறந்துபோயினர்
அவர்களின் உடைகளில்
பல இடங்களில் ஓட்டைகள்..


இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
எனது அயர்வில் சற்றும்
நிம்மதியில்லை - இருப்பினும்
என் கனவுகளில் யூப்ரடிஸ் நதிக்கரை
வந்து சொல்கிறது....

ஆங்கே எனக்கான இடத்தில்
கற்களை மடியில் கட்டி
யாரோ ஒரு சிறுவன்
நிற்கக்கூடும் - அவன்
மரணித்துவிடுவானோ எனும்
பயத்தின் வலிகள் இமைகளை
திறந்துவிடுறது....


எந்த முயற்சியும் எங்களுக்கு
அயர்வை தரவில்லை - இறுதி வெற்றி
என்னைப்போலவேஅழகானதொரு
பூவாய் பூக்கும்
அழுக்கு படிந்த மனங்களில்
அழகு மலரும்...


தாய் மடிகள் இங்கே
இல்லவேயில்லை - வெறும்
கற்களாலான படுக்கைகள் மட்டுமே
கனவுகள் முழுக்க
என் தேசத்தின் வெற்றி பற்றியதாக
மட்டுமே இருக்கும்....

எங்கள் அங்காடிகளில்
தலையணைகளோ
பட்டுமெத்தைகளோ இப்போது
விற்பதற்கில்லை - இழந்த
தலைமுறையி்ன் முகங்கள்
மட்டுமே உள்ளன....

நான் தூங்கவேண்டும்....
அடுத்த முறை நானாகவும்
இருக்கலாம் - வேலிகளின்
குறுக்கே நிற்பதற்காக....



Feb 4, 2014




அந்த ஒற்றை காலடிச்சத்தம்
மட்டும் கேட்கவில்லை - கூடவே
ஒரு குழம்பொலி சத்தமும்
கேட்கிறது பலமாக....

அழைக்கும் சப்தம் மூடியிருக்கும் 
என் வீட்டுத்தளத்தையும்
தாண்டி என் சமையறைவரை 
கணீர் என ஒலிக்கிறது....

நிசப்தத்தின் முன்னால்
மண்டியிட்டிருந்தது அந்த
மதிய நேரம் - வெயிலின்
உச்சம் அவன் தொண்டையை
வரளச்செய்திருக்கவேண்டும்
இரைப்பின் ஓசை காற்றில்
கரைந்துகொண்டிருந்தது......

கிலுகிலுப்பையின் சில்லென்ற
ஒலியை தோற்கடித்தது
சில்லரைகளை குலுக்கும்
அமிர்தப்பாத்திரம்...

பகலின் வெளிச்சம் சீறும் வீட்டில்
என் கதவுகள் மூடியே இருந்தது
என் அறை முழுக்க இருட்டின்
ஆற்பாட்டமான சிவப்பு நிறம்
விழிகள் இழந்த நான்
இமை மூடி எப்போதோ
அறிந்து வைத்திருந்த அந்த நிறம்....

நான் சப்தமிடத்தான் வேண்டும்
குரல்வளை எப்போதோ
தீய்ந்துபோயிருந்தது வெற்றிலையும்
புகையிலையும் சேர்ந்து
மூட்டிய புற்றிலையின் நெருப்பு.....

அவன் மீண்டும் தன் கால்
முன்னெடுத்து வைக்கமுடியாத
பளிங்குத்தரை அது
முன்னெடுத்தாலும் வைக்க
இடம் கொடாத ஏழ்மை மனது....

சில பருக்கை மண் துகள்கள்
பளிங்குத்தரையில் உராயும்
சிராய்ப்புகளின் சப்தம் - அவள்
மெதுவாய் நகர்ந்து செல்வதை
உணர்த்திய அதிர்வுகள்.....

ஒட்டிய குடிலில் ஒரு
துளி தண்ணீர் ஒரு குவளை
பழைய சாதம் கேட்டு
பாத்திரம் நீட்டி கும்பிட்டு
காத்திருக்கிறது அந்த
ஒற்றைக்காலும் உடைந்ததோர்
ஒற்றை மரக்குழம்பும்....

என் தலைவாசல் கதவின்
பி்ன்னிலிருந்து அவள் 

பேசினாள் ஒற்றை வரியில் 
வீட்டில் யாருமில்லை 
அப்புறம் எங்கேயாவது போய் கேளும் ஓய்
சட்டென இருண்டது அந்த
கிழட்டு யாசகனின் உலகம்...

ஏமாற்றம் என்ற வார்த்தையை
அந்த பழிங்குத்தரையில்
தன் பார்வையால் பதித்துவிட்டு
திரும்பும்போது ஒரு
ஒற்றைத்துளி வியர்வை
தெறித்து வீழ்ந்தது தலைவாசலில்...

மீண்டும் என் காதுகள் கேட்டன
அந்த ஒற்றைக்காலடிச்சப்தம்
ஒற்றை குழம்பொலி சப்தம்
வேறு ஒரு வாசலில் அவனுக்காய்
காத்திருக்கலாம் அவனின்
ஒரு குவளை சோறும்
ஒரு கோப்பை நீரும்.....

அபூ ஃபஹத்




பாராமுகங்கள்....
****************
பார்த்தும் பழகியும் 
உண்டும் களித்தும் 
கொண்டும் கொடுத்தும் 
நேற்றுவரை ஒன்றாய் நடந்த 
பல முகங்கள் இன்று
பாரா முகங்களாய் 
காரணங்கள் சொல்லாமல்
ஒதுங்கிச்சென்றுவிடுகிறது...

நான் நிற்குமிடம் அவன்
வருவதில்லை - அவன்
இருப்பிடம் சென்றால்
அவன் இல்லையென்று
சொல்லிச்செல்லும் யாரோவின்
முகங்களினின்றும் தெறித்து
வீழ்கிறது அவன் உள்ளேயே 
இருப்பதற்கான 
வெட்கத்தின் சமிக்ஞைகள்....


எனினும் அவர்களில்
நம் இதயங்கள் பரிதவித்து
எதிர்நோக்குவது பாரா
முகங்களையல்ல காரணங்களற்ற
பழைய முகங்களை மட்டுமே....


டீக்கடை வாசலில்
பேருந்து நிறுத்தத்தில்
இரயில் நிலையத்தில்
என எதேச்சையாய்
எதிர்நோக்கும் பல முகங்கள்
பாராத முகங்கள்தான்....

நான் மட்டுமே சுவாசித்து
முடிப்பதற்கல்ல இந்த காற்று
நான் மட்டுமே வாழ்வதற்கானதும்
இல்லை இந்த பிரபஞ்சம்....


எனினும் ஏதோ பரிச்சயமானதாய்
தோன்றுகையில் இதயம்
பார்த்த முகங்களை
உதடுகளால் லேசாய்
புன்சிரித்து வைக்கிறது.....

பரிவின் பாஷை கண்ணீர்
என்றால் பிரிவின் பாஷையும்
கண்ணீரே.....
விழிகள் நீந்தும் கண்ணீரே.....
குடியரசு தினம்
-----------------------


குடியரசுகள் ஆங்காங்கே
குடிமுழுகிப்போகிறது 
ஏழ்மையின் ஆழங்களை 
நிரப்பஇயலாமல்- இதோ
என் தாய்நாடு தலை 
நிமிர்ந்து நிற்கிறது....

குடிமக்களின் குடலைக் கட்டி
குடி மகன்களை குடிக்கவைத்து
காலடியில் சேர்த்துவைத்த
காந்தியின் தலைகள் பதித்த
ரூபாய் நோட்டுக்களில்
காலூன்றி நிற்கிறது
தலை குனிந்த எனது குடியரசு......


கிழக்கும் மேற்கும்
வெறி பிடித்த நாய்களுக்கு
இரையாகும் ஏழைகள்
வடக்கும் தெற்கும்
சித்திரவதையின் தியாத்தழும்புகள்
சுமந்த வீரமகன்கள்
மத்தியில் மானம் கெட்டது
என் மண்ணின் குடியரசு...

பணக்கார காலடிகளில்
மிதிபடும் பணக்கட்டுகளில்
ஏழ்மையில் இறந்துபோன
பிணங்களின் வாசம்....

விற்று வரவுகளில் இரத்த வாடை
ஏற்றுமதிகளில் செத்த வாடை
கட்டி வைக்கப்பட்டிருக்கும்
அலுவலக கோப்புகளில்
இன்னும் தூங்குகிறது
வட்டிக்கணக்குகளாய்
ஏழையின் குடியரசு....

இத்தனைக்கும் மத்தியில்
வாழ்த்தித்தான் ஆகவேண்டும்
என் நாடு பொன் நாடு
என் மக்கள் மேன் மக்கள்
என் தேசம் நிறை பாசம்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...


அபூ ஃபஹத்

கட்டுச்சோறு.
***************

தூரமா போறா மோனேண்ணு
கேட்டா உம்மும்மா - பக்கந்தான்ணு
நான் சொன்னப்பொறவு
எங்கேண்ணு கேக்கைல உமும்மா...

வறுக்கத்தா போய்ட்டு வாண்ணு
சொன்னா வாப்பும்மா- வெளியில
போற புள்ளைய என்னவுள்ள
கேள்வி இதுண்ணு கொஞ்சம்
தேச்சியப்பட்டா வாப்பும்மா....

விடியக்காலம் எழும்பி
ஒலை போட்டு தேங்கா
பால் ஊத்தி கொதிக்க வச்சி
வத்த வச்சி வச்சிருந்தா உம்மா....

அம்மி கல்லுல எனத்தையோ
தல்லுற சத்தம் கேட்டுத்தான்
நானே எழும்புனேன் - வெளிய வந்து
கண்ணு தொறந்து பாத்தா
தாத்தா சம்மந்தி அரச்சி வச்சிருந்தா....

பல்லு தேச்சி மூஞ்சி கழுவி
குளிச்சி முடிஞ்சி ஓடி வந்து
உடுப்பு போடும்போ உம்மா
நியூஸ் பேப்பர் தேடீட்டிருந்தா...

கழுவி போட்ட சட்டையை
அசையிலயிருந்து எடுக்க
போவும்போ வாழையெல
வெட்டீட்டிருந்தா சின்னம்மா...

தல சீவி முடிஞ்சி பவுடர்
டப்பா தேடும்போ மாமியும்
தாத்தாயுமா சோறும்
சம்ந்தியும் பொதிஞ்சிட்டு
நிண்ணதையும் பாத்தேன்....

உடுப்பு உடுத்து தயாராயி
பேக்கெடுத்து தோள்ல
போட்டுட்டு ஷூ போடும்போ
எல்லாரும் வீட்டுக்கு மின்ன உண்டு....

வெளிய எறங்கிட்டு வாச்சை
பாத்தா பஸ்ஸுக்கு நேரமாச்சி
எல்லார்ட்டையும் செல்லீட்டு
ஓடிப்போவும்போ வாப்பா
செலவுக்கு வச்சிக்கோண்ணு
கொஞ்சம் பணமும் தந்துது....

துருசமா போவாத
நிதானமா போடாண்ணு
யாரோ செல்லி கேட்டுது
கேட்டது பாதி கேக்காத்தது
பாதீண்ணு பஸ் ஸ்டாண்டுக்கு
ஓடிப்போய் பஸ்ஸுல ஏறியாச்சி...

பஸ்ஸு பொறப்பட்டு
போகும்போ மின்னுக்கு
ரோட்டுல தம்பி ஓடி வாறான்
எனக்குள்ள சாப்பாட்டு பொதி
கையில வெச்சிண்டு
தொரத்தி வந்தான்...

வத்தவச்ச தேங்காச்சோறும்
எரிவுள்ள தேங்கா சம்மந்தியும்
எனக்கு குடுத்து வக்கைலதான்
பிரச்சினையில்லை...

ஆனா
உம்மா கரைவாளே
புள்ள என்ன செய்வானோண்ணு
அதை நெனச்சித்தான்
மனசு கலங்குனேன்....


அபூ ஃபஹத்



யாசித்தலின் மொழி
என் வாசலில் நீட்டி 
ஒலிக்கிறது அம்மா என்று.......

நான் சில்லறைகளை
தேடுகிறேன் - என்
மனைவி நேற்றைய இரவில்
மிச்சமாகிப்போன
ரொட்டித்துண்டுகளையும்.....

முப்பதும் முப்பதும் அறுபது
நாளிகை நேரவும் பிச்சக்காரன்
தொல்லைதானா - உள்ளிருந்து
பாட்டியின் சப்தம்.......

என் குழந்தை மட்டும்
அடம் பிடிக்கிறது - எங்கிட்ட குடு 

நான்தான் குடுப்பேன்
நானேதான் குடுப்பேன் என்று.....

பழையதாயினும்
சில்லரையாகினும் வயோதிக
வெறுப்பின் அர்ச்சிப்பாகினும்
எதனையும் பொருட்படுத்தாமல்
நிமிடத்தில் கவர்ந்துசெல்கிறான்
என் குழந்தையின் அன்பையும்
புன் சிரிப்பையும்.........

அபூ ஃபஹத்

Jan 14, 2014

ஒரு மாடப்புறாவின் மரணம்...


ஒரு மாடப்புறாவின் மரணம்......
****************************


சற்றுமுன் இறக்க
துவங்கியிருக்கக்கூடும் - ஏதோ 
வாகனம் அடித்திருக்கவேண்டும்
நான் நாங்கள் அவர்கள்
நீங்கள் என எல்லோரும் பார்த்திருக்க
தலை குனிந்து வீழத்துவங்கியது....


சாலையில் கடந்து சென்ற
வாகனத்தின் இரைச்சல்
மரணத்தின் நேரத்தில்கூட
பயத்தை தந்திருக்கக்கூடும்
இன்னும் சில நாளிகையில்
மரணிப்பதறியாத அந்த நிமிடங்களில்....

மனிதர்களின் பாதச்சுடவடுகள்
பயத்தின் உச்சம் – கால்கள்
நடக்காதபோது தன் அலகால்
ஊர்ந்து இடம் மாறும்போதும்
எட்டநின்று பார்த்த கண்களில்
அதிசயித்தலின் அவா....

மரணத்தின் கடைசி ரேகைகளை
சாலையின் குறுக்கே தானே
வரைந்து தீர்த்தது அந்த மாடப்புறா
பின்னோக்கிச்சென்ற கால்களை
தாங்கிநிற்கத்துடிக்கும் பலமிழந்த சிறகுகள்
கர்வமில்லை நெஞ்சுரமில்லை
தன்னைத்தானே மீட்க முனையும்
மாபெரும் முயற்சி.....

மரணத்தின் நேரத்தை காத்திருக்கும்
கரும்பூனை ஒரு பக்கம் – மரணிக்கும்
மாடப்புறாவை கண்டு
ரசிக்கும் வக்கிர மனிதரின்
கொலைக்கண்கள் மறுபக்கம்....

கண்கள் இருண்டிருக்கவேண்டும்
இமைகள் மூடி அரைத்தூக்கத்தில்
இருக்கும் சிறுவனின் கண்கள்போல்
அழகாயின மாடப்புறாவின் மரணம்....



சிறகுகள் சிலிர்த்தது
மயில் தோகையாய் விரிந்தது
இமைகள் திறந்து சுற்றும் பார்த்து
தரையில் தன் அலகால் கொத்தி
மரணத்தில் வீழ்ந்தது மாடப்புறா...

கண்கள் பனித்து கண்ணீர்
துளிற்கும் தருணம் – இதோ
மரணம் மறந்த மடையர் கூட்டம்
வளைந்து நெழிந்து தாழ்த்தி உயர்த்தி
தன் கேமிராக்கண்களோடு
சிரித்து கை கொட்டி மகிழ்ந்து தீர்த்தது....
மானிடம் அங்கே
கழுகுக்கண்களாய் எட்ட நின்ற
பூனையை தோற்கடித்தது...


மரணம் மகத்தானது...
உண்ர்ந்து கொள்ளாத
மனிதம் இருட்டானது.....

அபூ ஃபஹத்

Jan 4, 2014




நீ சொன்ன அதே
நிறுத்தத்தில்தான் இறங்கினேன்
அங்கே நீ இல்லை - உன்னை
தேடி வந்தது தெரிந்து
வெறுமனே சிலர் வேடிக்கை
பார்ப்பதுபோல் தெரிந்தது....


சிறிது தூரத்தில் வேறு
ஒரு பேருந்து வருவதைக்கண்டு
நான் அங்கேயே
நின்றுகொண்டேன் - ஒருவேளை
நீ நிற்பதாய் சொன்ன
அதே இடத்தில் என்னை
தேடலாமல்லவா.....

இன்னும் சிலர் என்னையே
வெறித்துப்பார்ப்பதுபோல்
உணர்கிறேன் - அந்த பேருந்தில்
நீ இல்லாமல் போனதை
நான் வெறுப்பாய்
பார்த்துக்கொண்டிருந்தேனே....

யாரோ ஒருவருக்காய்
எப்போதோ தேடி நின்றதை
இப்போதும் நினைத்துப்பார்க்க
இயல்கிறது இன்னும்
மாய்ந்து போகாத அதே
பேருந்து நிறுத்தத்தில்
யாருக்காகவோ எதற்காகவோ
காத்து நிற்கும்போதும்
மனதை விட்டு விலகாத
அதே வெறித்த முகங்களும்
வெறுமையின் எனது பார்வையும்.......

      ........





உனது தோள்களை
பலப்படுத்து - உனது
கால்களை ஸ்திரப்படுத்து
உனது கைகளை
எந்நேரமும் அகலமாய் வை
உனது மனதை விஷாலமாக்கு

வயோதிகத்தின் கழைப்பில்
ஏழ்மையின் இயலாமையில்
நோயின் வலியில்
எந்நேரமும் உன்னைத்தேடி
யாரும் வரலாம்

உனக்கு பிடித்தமானவர்கள்
உனது உறவினர்கள்
உனது நண்பர்கள்
நானும் வரலாம்

உன்னைப்பிடிக்காதவரும்
உனக்குப்பிடிக்காதவரும்கூட
வருவதற்கான சாத்தியம் உண்டு

இவை அனைத்தும் உன்
வாழ்நாளில் எப்போதும்
நிகழாமலும் போகலாம்
எனினும் நீ மனதை
விஷாலமாக்கு ...


உன்
இதயத்தை பாவத்திற்கு
விற்றுவிடாமல்
பரிதவிப்பிற்காக கொஞ்சம்
வைத்துக்கொள்......


பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கில்லை
என் சினேகிதியே...

புது வருடம் பிறந்திருக்கிறது இன்று,

கழிந்த வருடம் இதே போன்றொரு தருணம்தான் உன்னை நான் வாழ்த்த மறந்தேன். இரண்டு தினங்கள் கழிந்து உன் அலைபேசியிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தாய், அந்த எண்ணில் பல முறை தொடர்பு கொண்டேன், விபரம் இல்லை, மீண்டும் மீண்டும் மிஸ்டு கால்.... நான் களைத்துப்போயினேன்....

பரிதாபப்பட்டாயோ என்னவோ, ஒரு நாள் முழுக்க தொல்லையான நட்பை மீண்டும் தொலைக்க விரும்பாமல் அலைபேசியை எடுத்து ஹலோ என்றாய்...

வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த மிருகத்தின் பெயரை எந்த தயக்கமுமின்றி வாரி இறைத்தாய்...

என்ன செய்வது நட்பின் முன்னால் மகிழவேண்டியிருந்தது, வாழ்த்து சொல்லாததற்காக இவ்வளவு கோபம் காட்டுகிறாய் என்று தெரியாமல் போனது...

சகட்டு மேனிக்கு அலப்பரை செய்து புது வருடம் முதல்நாள் முதல் கடைசி நாள் வரை புதுப்புது பெயர் போட்டு கொண்டாடித்தீர்த்தபோது வராத வெறுப்பா இப்போது வந்துவிடப்போகிறது...

கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்கள், புது வருடத்தின் பிறப்பு இப்போதெல்லாம் டாஸ்மாக்கிலும், இரவு விடுதிகளிலும் ஆனபோது இங்கே நோயினாலும், அடுத்த வேளை சோற்றுக்கும், அடுத்த வேளை மருந்துக்கும், இருக்க இடம், குளிரில் போர்த்திக்கொள்ள ஆடை, என எதுவுமில்லாத சாதி மத இன மொழிகள் தாண்டிய ஒரு சமூகம் தெருவிலும் முகாம்களிலும் இருந்துகொண்டிருப்பதை நினைத்தால் புது வருடம் என்ற ஒன்று சாதாரணமாக இருந்துவிட்டது...

உனக்கு மட்டுமல்ல, எனது அன்புச்சினேகிதர்களுக்கும் நான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை....


நான் ஏதோ பெரிய கதையோ, சட்டங்களோ, விலக்குகளோ, அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்றெல்லாம் பார்த்து வெறுமனே இருக்கவில்லை...

மனதுக்குள் உனக்காக நான் பிரார்த்தித்துள்ளேன்....

நீ முடிந்தால் நம்மை தெரிந்த நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும்போது அவர்கள் கொண்டாட்டங்களை ஏதேனும் ஏழையின் வீட்டில் சென்று அவர்களோடு இருந்து அவர்களின் வாழ்க்கையை ஒரு தினம் முழுக்க அனுபவித்து அவர்களுக்காக ஏதேனும் நற்சேவை செய்து திரும்பி வரச்சொல்...

குறைந்த பட்ஷம் மதுவுக்காக செலவிடும் பணத்தையாவது இவ்வழியே செலவிடச்சொல்...நீயும் சேர்ந்து செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....


இறையருளால் மாதம் யாராவது ஒருவருக்காவது நானும் எனது நண்பர்களும் எங்களால் இயன்ற ஏதேனும் உதவி செய்துவிடுகிறோம்...




மன்னித்துவிடு.....

நீயும் நமது நண்பர்களும் எங்கே இருந்தாலும் உனது இந்த நாளுக்காகவும் எல்லா நாட்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்....

நட்போடும் வாஞ்சையோடும்..

அபூ ஃபஹத்