May 8, 2013

முதுமை....




இதேபோன்றொரு நாள்
எனக்கும் வரலாம் - முதுமையை
அலைகளினூடே
பேசித்தீற்கும் நாள்.....


ஏகாந்தத்தின் வலியும்
ஆற்றாமையும் இப்போதெல்லாம்
நிறையவே கடல்தீரங்களில் 
சிதறிக்கிடக்கின்றன....

கால்களிரண்டையும் மடக்கி 
கைகளால் கோர்த்து 
வீட்டினுள்ளே யாதுமற்றதொரு
முற்றத்தையே பார்த்திருக்கையில்
ஒரு தொலைதூரப்பயணம்போல்
தெரிகிறது ஒவ்வொரு நாளும்.....

வாழ்க்கை துணைகளை 
இழந்த முதுமைகளில் 
அதிகமும் பிறக்கிறது
கேழாமையும் காணாமையும்
கூடவே இயலாமையும்.....

கரைகளில் நின்று தனிமையின்
வலிகளை அலைகளோடு 
பகிரும்போது மெல்லமாய்
என் கால்களைத்தொட்டு
தாலாட்டு சொல்கிறது....

என் பாதங்களை கரைகளில் 
பதிக்க விடுவதில்லை - ஏகாந்தத்தின்
இன்னல்களை பதியமிடும்
பாதச்சுவடுகளை கண்ணீரால்
கரைத்துவிடுகின்றன அலைகள்....


எப்போதெல்லாம் என்
கனவுகளில் அவள் வருகிறாளோ
அப்போதெல்லாம் அவள்
இயலாதவளாகவே என்னிடம்
நலம் விசாரிக்கிறாள்...

என் வாய் பேசாத முதுமை
ஊரெல்லாம் போய்
கோள் சொல்கிறதாம் - என்
இலக்கு தெரியாத நடையில்
அவர்கள் கெளரவம் போகிறதாம்
பிள்ளைகளின் மனது
அலைகளைப்போன்று
அழகானதில்லையோ.....

மீண்டும் பேசிக்கொண்டும்
மீண்டும் கல்லெறிந்துகொண்டும்
மீண்டும் பின்னோக்கி நடந்துகொண்டும்
மீண்டும் தனியாய் சிரித்துக்கொண்டு்ம்
இருப்பதற்காய் பல இரகசியங்களோடு
யாரும் வரக்கூடும்....

இருட்டின் மறைவில் 
என் ஏகாந்தம் 
உறங்கக்கூடும் உன்
ஆர்ப்பரிக்கும் அழகிய 
சப்தத்தோடு......


அபூ ஃபஹத்

May 7, 2013

மழையில்....




மழைத்துளிகளில் ஒன்று
சூடான என் தேநீர் 
கோப்பைக்குள் விழுந்து
நுரைத்து நின்ற தேநீர்
குமிழை உடைத்தது...

உடைந்து சிதறிய
குமிழின் திவலைகளில் சில
என் மீசையில் ஒட்டியபோது
தன் மீசையின் மீது
கை வைத்து சைகை செய்தார்
அருகே தேநீர் குடிப்பவர்....

திவலைகளில் ஒரு
நுண்துளி என் இடது விழியில்
தெறித்து வீழ்ந்தபோது
என் வலது இமையும்
இடது இமையும்
ஒரே நேரத்தில் பட படத்தது...

ஒவ்வொரு முறை
மின்னலடித்து முடித்ததும்
காதும் கண்களும் ஒரு
பயத்தோடே இடியின் சப்தத்தை
உட்கொள்ள தயாராயின....

என் கால்களை யாரோ
தள்ளிக்கொண்டே இருந்தனர்
மழையின் வேகம்
கூடுவதால் பக்கத்தில்
நின்ற ஆட்டுக்குட்டி நடு நடுங்கியே
உள் நோக்கி வந்தது....

இரண்டுமுறை உறிந்தபோதும்
என் தேநீர் கோப்பையில்
இன்னும் நுரைகள்
அடங்கவில்லை....

நாட்கள் சென்று
வரும் முதல் மழையில்
நனையாதே என யாரோ
யாரிடமோ சொல்வதைக்கேட்டேன்
அப்போதும் நான் முதல்
மழைத்துளி கலந்த தேநீரையே
குடித்துக்கொண்டிருந்தேன்.....

மழையின் வேகத்தையும்
ஆட்டுக்குட்டியின் தாபத்தையும்
ரசித்தவாறே பருகிக்கொண்டிருந்தேன்
தேயிலைப்பருக்கைகள்
வாயைத்தொட்டபோது
தேநீரின் சுவையை கடந்து
கசப்பை தொட்டிருந்தேன்....

கண்ணாடிக்கோப்பை
என் கைகளில்
கடைசியால் நடுங்கியது
இடியும் மின்னலும்
நின்றுபோய் அடை மழை
சாரலாகிப்போயிருந்தது...

பலமுறை துரத்தியடிக்கப்பட்ட
ஆட்டுக்குட்டி
மீண்டும் மீண்டும்
அதே இடத்தில்
வந்து நின்று நடு நடுங்கியது....

மழைக்காய் மட்டும்
துரத்தப்படுவதால்
ஆட்டுக்குட்டியினுடையது
வெறும் மழையின்
முடிவு தேடிய போராட்டம் மட்டுமே.....

May 6, 2013

சவப்பெட்டிகள் சுமக்கும் மாலைகள் ....




சவப்பெட்டிகள் சுமக்கின்றன 
பூமாலைகளை - மணமும் 
மனமும் அறியாமல் 
பெட்டிக்குள் மனிதன்
பிணம் என்ற பெயரோடு......

வாழ்ந்து முடித்ததில்
செய்து தீர்த்தவை பாவமோ
புண்ணியமோ மன்னிப்புகள் போய்
மிச்சவாது எதுவென
யாரும் அறிவதில்லை...

குறுகிய நேரத்தில் பெரும்பாலும்
அடக்கம் கூட நடப்பதில்லை – தாமதங்களின்
பின் வந்து சேர்வது வெளிநாட்டு
மகனோ வெளியூர் சகோதரனோ
திடீர் மழையோஆகலாம்....

நேற்று இறந்துபோன தந்தைகளின்
பாதச்சுவடுகளை பிள்ளைகள்
பின்பற்றுவதாய் கூறுவதில்
அர்த்தமில்லை
ஆகாததும் ஆகுமானதுமாய்
பின்னவர்களின் பெரும் பேறுகளும்
பிழைகளும் மாறுபட்டே நிற்கின்றன....

மரணம் பற்றி
யாரைக்கேட்பினும்
தனது முன்னவரின்
ஆரோக்கியம் பற்றிய
கவலைகளின் இழைகள்
தொகுப்புகளாய் ஓடுகிறது
இதயங்களிலும் வார்த்தைகளிலும்...

எனக்கு அளிக்கப்பட்ட
கால நீட்சியில்
நான் சேர்த்துக்கொண்டே
இருக்கின்றேனோ
பாவமென்றறிந்தே பாவத்தையும்
புண்ணியம் என்ற்றியாமல்
புண்ணியங்களையும்.....

மண்ணறையின் மேலிருந்து
என் கால் பகுதியில் கடைசியாய்
விழும் மண் குவியல்களை
யார் அள்ளி வீசுகின்றார்
என்பதை அறிவதற்குள்
என் முகமும் உடலும்
மூடப்பட்டிருக்கும்...

ஆமாம் நான் ஏற்கெனவே
இறந்துபோனதால் முகத்தில்
மண் குவியல்கள் விழும்போதும்
என்னால் பாற்கமுடியவில்லை.....

காலச்சுவடுகளில்
இன்றும் மரணம் பற்றிய
ஓராயிரம் பதிவுகள் - ஈராயிரம்
சடங்குகளால்
இல்லாமலாக்கப்படுகிறது....

மாலைகள்
சவப்பெட்டிகளில்.....

May 2, 2013

நான் தொடும் செடிகள்...



நான் தொடும் செடிகள்...
******************************
தெருவென்றோ வீடென்றோ
பார்ப்பதில்லை - கையெட்டும்
தூரத்தில் தலை சாய்த்துநிற்கும்
பச்சை ஓலையின் நுனியை
கிள்ளியெடுக்கிறேன்...

வீட்டுத்தோட்டத்தில்
ஆங்காங்கே நிற்கிறது என்
கைகள் படாத தொட்டால் வாடி
எனினும் ஆற்றுப்படுகை ஒரங்களில்
எப்போது கண்டாலும்
கால்களால் சீண்டி சுருக்கிவிடுகிறேன்...

ஏதோ நினைவுகளில்
கண் போன போக்கில் கால்கள்
நடக்கும்போது என் கை விரல்களில்
என்னையுமறியாமல் வகிர்ந்து
தீர்த்துவிட்ட பலா இலைகள்.....

யார்மீது கோபத்தோடு
வெளியேறினாலும் கல்வீசி தாக்குகிறேன்
கள்ளிச்செடிகளின் மீது - பாலாய்
வழியும் இரத்தத்தையோ
காயத்தையோ நான்
எப்போதும் பொருட்படுத்தியதில்லை....

மோந்து பார்க்காமல்
கறிவேப்பிலையை நான்
யாருக்கும் தருவதுமில்லை
எடுத்துக்கொள்வதுமில்லை....

குளங்களின் சுவர்களின்
பரணிச்செடிகள் - ஆசைகள்
என்னை விட்டுவைக்குமா என்ன
என் கைகளில் அச்சுப்பதிக்காமல்
விட்டதில்லை....

ரோஜாச்செடிகள்
யார் வீட்டில் நின்றாலும்
பரவாயில்லை - ஒரு துண்டு
தாங்களேன் என் மகளுக்கு
என்று கேட்டுவிடுகிறேன்....


இப்போதெல்லாம்
ஓலைக்கீற்றின் நுனிகளில்
ஈற்கல்கள் மட்டும் மிரட்டுகின்றன
பரணிச்செடியில் அச்சும் இல்லை
அசலும் இல்லை....

தொட்டால் வாடியில்
வெறும் கம்புகள் - ரோஜாவில்
வெறும் காய்ந்த முட்கள்
கறிவேப்பிலையில் ஆங்காங்கே
வெண் புள்ளிகளும் ஓட்டைகளும் ....

என் விரல்களை
இதயம் இப்போதெல்லாம்
தடுத்து வைத்துவிடுகிறது
இலைகளின் முகத்தில்
நகக்கீரல்களை பதிக்காதே என்று....

காய்ந்த உடல்களில்
காயங்களை கூட்டாதே
உன் கூரிய விரல்களால்
முட்களை மிருதுவான மூக்கை
உடைத்துவிடாதே...

உன் கண்களால் இலைகளின்
இதயங்களை எரித்துவிடாதே
இலைகளின் நுனிகளிலும்
உயிரின் வலிகளும் உணர்வுகளும்
இருக்கத்தான் செய்கின்றன....




May 1, 2013

பற்றாக்குறைகள்...

பற்றாக்குறைகள்..
***********************

வி்தைத்தது 
முளைக்கவில்லை - உண்பதற்கே 

இல்லாமல்மண்சோறு 
தின்னும்போது விற்பனைக்கேது....

இறைத்து இறைத்து எங்கோ
விற்கப்படுகிறது தண்ணீர் - என்
நிலத்தடியை தோண்டினால்
இனி பெட்ரோல் ஊறலாம்....

தினமும் என் வானம்
சிவக்கும்முன்னே
கார் முகில்கள் கறுப்பாக்குகிறது
மழை எனச்சொல்லி
சில துளிகள் தூவி
கடுப்பேத்துகிறது.....

கடற்கரையில் வாழ்கிறேன்
எனக்கு மீன் கிடைக்கவில்லை - மலிவு
விலையாம் மல்ஸியம்
கடலே இல்லாத ஊர்களில்....

நியாயவிலைக்கடையில்
வரிசையாய் நிற்கி்றேன் - எல்லா
கண்களும் கடைசியில் நிற்கும்
என்னையே பார்க்கின்றன
விலைப்பட்டியலை
பார்ப்பதுபோல்....

காக்கைகளின் கரைச்சல்
குறைந்திருக்கிறது - நாய்களின்
ஊளைச்சத்தம் இப்போதெல்லாம்
பகலிலும் அதிகம் கேட்கிறது....

தங்கத்தின் விலை
அகோரமாய் இருக்கிறது - மாப்பிள்ளைகளின்
விலையிலும் எந்த குறைவும்
ஏற்பட்டதாய் தெரியவில்லை
கோடிகளின் வால் நட்சத்திரங்கள்....

நான் பத்து வரிகளை
எழுதிமுடிப்பதற்கு
பனிரெண்டுமுறை
யோசிக்கிறத மின்சாரம்
போய் போய் வருகிறது....

பற்றாக்குறைகள்
வற்றாமல் இருக்கிறது
என்னைச்சுற்றி
பற்றாமல் இருக்கவேண்டும்....

மணமாகிப்போன மரணம்....


மணமாகிப்போன மரணம்.....
************************

வாங்க, உள்ளே போய்
பாத்துட்டு வாங்க
என வரவேற்கப்படுகிறது
இரு வீட்டிலும்...

முகம் பார்த்து
திரும்பும் முகங்களில்
ஓராயிரம் நினைவலைகள்
சில அறிந்ததும் பல
அறியாததுமாய்.....

முற்றத்தில் விரிக்கப்பட்ட
பிளாஸ்டிக் இருக்கைகளில்
பார்த்ததும் மறந்துபோனதமான
தெரிந்த முகங்கள்....

சிலரின் சின்னச்சிரிப்புகளில்
வெளிப்படுகிறது புதிய
அறிமுகங்கள் - யார் மகன்
இவர் என அறியாமலே
பதில் சிரித்து முடிக்கிறேன் நான்....

என்ன அழகு
ஐஷ்வர்யமான முகம்
நேத்து இப்படி இல்லை
எவ்வளவு ஆசைகள்
எவ்வளவு வருத்தங்கள்
என ஆங்காங்கே சில
முறிந்த வரிகள் பல
காதுகளை சுற்றிச்சுழல்கிறது....

பால் கலக்காத தேநீர்
ஒரு கோப்பை - கண்டிப்பா
நீங்க சாப்பிட்டுவிட்டுத்தான்
போகவேண்டும்
உபசாரம் ஒரு உபத்திரவமாகவே
தெரிகிறது பல நேரங்களில்....

நெய்ச்சோறில்
உப்பில்லை - யாரோ
இருவர் பேசிக்கொண்ட
இடம் மறந்த வார்த்தைகள்....

மேடையைச்சுற்றியும்
உறவினர் கூட்டம் - பாடையை
சுற்றியும் உறவினர் கூட்டம்
மாலையில் துவங்கி
மாலையில் அடங்குகிறது மாலை....

நேரம் குறிக்கப்பட்டே
நடைபெறுகிறது - இதுவும்
எப்போதோ நேரம் குறித்தே
நடைபெறுகிறது....

இறுதியாய் விடை
சொல்லிப்பிரியும்போது
கண்ணீரில் நனைகிறது
இதயங்கள் - இனி
வரவே மாட்டார்
என்பதால் கண்ணீரில்
பயணிக்கிறது ஊர்வலம்....

மணமும் மரணமும்
இன்று ஒன்றுபோல் - துக்கம்
களைந்த மரணம்
தூக்குமேடையில்....

அடையாளங்கள்...


அடையாளங்கள்...
**********************


ஆமாம் 
அவன் கையில் 
செல்ஃபோண் இருந்தது
தோளில் ஜோல்னாபோல்
லேப்டாப் தொங்கியது....

இறுக்கமான சட்டையின்
பொத்தான்களுக்கிடையே
சட்டை வாய் பிளந்து நின்றது

அவ்வப்போது குனிந்து
நிமிர்ந்தபோது அவன்
இடுப்புக்கு கீழே
உள் ஆடையின் கால் பகுதி
வெளியே தெரிந்தது....

இடது கையில்
இருக்கும் வீதியான
செல் போணின் மேல்
விரல்களால் கீச்சிக்கொண்டே
இருப்பது தெரிந்தது...

நெற்றியை துடைத்து
உருட்டி உருட்டி வீசிய
பேப்பரில் அழுக்கின்
நகக்கீரல்கள் தெரிந்தன...

ஏனோ தெரியவி்ல்லை
அவனுடைய காற்சட்டை
கீழே விழுவதுபோல்
எனக்கு தோன்றியது..

செருப்புக்கு பதில் ஏதோ
கயிற்றுப்பாயின் நிறத்திலான
தகட்டில் கம்பி
வைத்து தைத்ததுபோல் இருந்தது...

தேங்காய் உரிக்கும்
கொம்பின் முனைபோல்
இருந்தது அவன்
தலை முடியின் கோலம்....

சரிம்மா... எல்லாம் ஓ.கே
அந்த பையனோட
முகம் எப்படி இருந்தது..

சாரி சார், அவன் என்னையவே
பார்த்துக்கொண்டிருந்ததால் அவன்
முகத்தை சரியா பாக்கலை
அதுக்குள்ளே பஸ் வந்திடிச்சி
நான் பார்த்தவரைக்கும்
முகத்தில சொல்றமாதிரி
எதுவும் அடையாளம் இல்லை சார்....

அவள் பார்வையில்
தெரிந்த அடையாளங்களில்
அவள் மறந்துபோனது
அவனது நிஜமான முகம்....

பார்வைகளில்
பறிபோகிறது நிஜம்....