Mar 28, 2013

பசி.......

பசி....

சுண்ணாம்பில் தோய்ந்த 
வெற்றிலை வாயில் - வெறுமனே
மென்று துப்புகின்ற
சிவப்புக்கறைகளில்
உண்ட உணவு செரித்ததாய்
மனம் கொள்ளும் போதை...

விற்று வரவுகளை
மூன்று 
முறை எண்ணிவிட்டேன்
ஒரு நோட்டு அதிகமாகவே
இருப்பதுபோல் தெரிகிறது
அது பொய்யென
எனக்குப்புரிகிறது ஆயினும்
வெற்று வயிற்றோடு
பசிக்கிறது என்று மெய்யாய்
பலமுறை யாசிக்கும்
வயோதிகரின் குரலை
ஏனோ நான் கேட்கவில்லை...

பசி தாங்கவில்லை
ஒரு நாள்தான் வீட்டில்
யாருமில்லை
வெளியே உண்ண
மனமில்லாமல் வயிற்றில் துணியை
கட்டிக்கொண்டேன்
தண்ணீரை தின்றேன்
தூங்கித்தீர்த்தேன் என பாடித்தீர்த்தேன்

காற்றையும்
அழுக்கையும் புகையையும்
சுவாசித்தும் தின்றும்
குடித்தும் ஏதோ சில ஆண்டுகளாய்
கட்டிய அழுக்காடையோடு
சாலையில் திரிந்த ஊருக்கே
பரிச்சயமான அந்த
பைத்தியக்காரனின் வயிற்றிலோ
சிரிப்பிலோ பசியால்
கட்டப்பட்ட எந்த துணியையும்
காணவில்லை நான்....

ஏதோ ஒரு திருமணத்தில்
தின்ற பிரியானிக்குப்பின்
விளம்பப்பட்ட சிகரெட்டுக்காய்
நான் முந்திக்கொண்டதில்
முட்டிமோதி என் கைகளை
வந்தடைந்தது பஞ்சு மட்டும்தான்

அதே திருமணப்பந்தலின்
பின்னால் எச்சில்
இலைகளுக்காகவும் முட்டி
மோதிக்கொண்டதில்
வயதின் முதுமை பாராத
அந்த அழுக்குத்தாயின்
கையில் சிக்கியது
யாரும் தின்றறியாத
பல்சுவை பருக்கைகள்
அவள் பின்னாலிருந்து வந்த
பிஞ்சுக்குரலில் கிழியாத
எச்சில் இலையின் சாதம்.....

எப்போதாவது
பசிப்பவனுக்கு மட்டுமே
பசி பிணியாய் தெரியும் - சதா
பசியிலேயே இருப்பவனுக்கு
அது ஒரு சிறு பிழை...

நிழலாய்ப்போன நான்....



நிஜங்களை பின்தொடர்ந்து
செல்கையில் நான் 
வெறும் நிழலாய் மிச்சமாகிறேன்...

சில நேரங்களில் கடும்சொல் எனும்
நெருப்புக்கவளங்களை உண்கிறேன் - ஆயினும் 
உண்டு முடித்தபின் 
உள் நீற்றல்களைத்தாங்கி
வெளியே சிரிக்கிறேன்....

கரைகளினின்றும்
தூண்டிலிடுபவனை
நான் பயப்படுவதில்லை - எனினும்
தூண்டிலில் கோர்க்கப்படிருப்பது
என் மரணம் என்பதை
நான் மறந்துபோகிறேன்...

என் இறக்கைகளின்
மீதான நம்பிக்கையை உதாசீனம்
செய்துவிட்டு காற்று என்னை
சுமந்து செல்வதாய் எப்போதும்
நினைத்துக்கொள்கிறேன்....

தண்ணீர் தேசத்தில்
மூழ்கி முத்தெடுக்கும்போது
என்னிலிருந்தும் வெளிப்படும்
கண்ணீரை கிஞ்சிட்டும் அறிந்ததாய்
காண்பிப்பதில்லை முத்துக்காய்
வெளியே காத்திருக்கும் கூட்டம்....

பிரபஞ்சம் பெரிது
முன்பு எனக்காய் சேர்த்துவைத்த
பரிவும் பாசமும் நிறையவே
களவாடப்பட்டிருக்கிறது
சில ஈனம் கெட்டவர்களால்....

காலூன்றி நடப்பவனின்
வேகத்தை சகிக்காமல்
பொய்யாய் புகழூட்டி
நொண்டியாக்கிவிடும்
மனிதக்கைத்தடிகள்
கடைசியில் ஆணிவேரை
பிடுங்கிவிடுகின்றன....

என் மீது யாரும் வெறுப்பை
உமிழும்போதும் நான்
வெறுப்பை மட்டுமே வெறுக்கிறேன்
உமிழ்பவனை
வெறுப்பதே இல்லை.....

மாணவனே...


தலைநகரத்து 
வன்கொடுமைக்கு
வரிந்துகட்டிய மாணவன்
வாச்சாத்திக்கு வரவில்லை...

விஸ்வரூபத்தின்
துவேஷத்திற்கு வீரம்
முளங்கிய மாணவன்
விதர்பாவில் செத்துவிழும்
விவசாயிக்காய் வரவில்லை....

போலி காந்திகளோடும்
திருட்டு சாமியார்களோடும்
ராம் லீலாவில் கூடிய மாணவன்
தர்மபுரிகளின் தெருக்களுக்கு வரவில்லை...

இலங்கையின் ஈழத்தமிழனுக்காய்
ஆழத்தில் இறங்கி நின்று
அமெரிக்காவை வாழ்த்தும் மாணவன்
இந்தியத்தாயின்
கஷ்மீர் குழந்கைளின்
ஈரல்குலைகளை அறுத்தெறிவதை
கண்டுகொள்ளவே இல்லை....

நம் இனம் அழிக்கப்படும்போது
அதற்காய் உயரும்
உன் குரலை மதிக்கிறேன் - நம்
தேசத்திலும் மனித இனங்கள்
அழிந்துகொண்டிருக்கிறது...

உன் குரல்கள் வளைகள்
சாகவில்லையெனில்
குரல்கொடு..

Mar 1, 2013

சவ் மிட்டாய்....!!!!


 சவ் மிட்டாய்....!!!!
****************

இது என்ன கலர்
நிறம்டீ இது -செவ்ப்பா
பச்சையாண்ணு தெரியல்லயே....

நாலணா குடுத்தா
ஒரு ரோஜாப்பூ செய்து தருவாரு
ஆனா உனக்கு பூ
புடிக்காதில்லா அதுனால
வேற ஒரு நாலணா குடுத்து
உனக்கு பொம்மை செய்து
வாங்கித்தாறேன்....

எனக்கட்ட பைசா இல்லை
அந்திக்கு வீட்டு பக்கத்தில வருவாரு
அப்போ வாங்கலாம் - இப்போ
வாங்கினாலும் நிறைய
தூரம் போகணும் வீட்டுக்கு...

எனக்கு இப்போ வேணும்
இங்கயே வாங்கீட்டு போலாம்
உனக்கு பூ புடிக்கும்
எனக்கு பொம்மை புடிக்கும்
செய்து கேக்கலாம்....

கம்புல சுத்தி தருவாரே
நீ உடனே தின்னுருவியா இல்ல
பொறவுதான் தின்னுவியா - நான்
வீட்டுல கொண்டு போயி தம்பிக்கு
காட்டிக்குடுத்துட்டுத்தான் தின்னுவேன்....

கொஞ்சம் பெருசா இருக்கட்டு
நாலணா தந்திருக்கேன் - இன்னும்
ஒரு நாலணா இருக்கு அதனால
பெருசா செய்து தாரும்
பூ வருமில்லியா பொம்மையும்
வருமில்லியா....

பிஞ்சுக்கைகளில்
சின்னக்குச்சிகளின் மேல்
பொம்மையும் ரோஜா பூவும்
ஓடியடைந்தது வீட்டு முற்றத்தை
இனிப்பு நிறைந்த
சவ்வு மிட்டாயின் புன்னகையும்......

எங்கலே போனே
இவ்வளவு நேரம் - கோபத்தில்
துரத்திய அப்பாவின்
கையிலிருந்த கம்பு தட்டி
மண்ணில் விழுந்தது ரோஜாப்பூ...

குச்சிப்பொம்மையை பார்த்து
பூரிப்பில் பூத்த தம்பியுடன்
தின்ன மறந்த கண்களோடும்
அகம் மகிழ்ந்த இதயத்தோடும்
பக்கத்து வீட்டு முற்றத்தில் அவள்....


ஏக்கப்பார்வையும்
தொலைந்துபோன ரோஜாப்பூவின்
வலிகளோடும் தெருமுனையில்
விழி வைக்க
சவ் மிட்டாய்காரனிடம் அவள்

இந்தா எட்டணா இருக்கு
ரோஜாப்பூ பெருஸ்சா இருக்கட்டு
குச்சியில வேண்டாம்
முழுசும் முட்டாயிலே.......


அபூ ஃபஹத்