Jan 5, 2013

கண்ணீர்...............

கண்ணீர்
*********





















வா என்றழைத்தால் உடனே 
வந்துவிடுவதில்லை - யாரும்
விரும்பி அழைக்க மழைத்துளிபோல்
அவ்வளவு அழகானதுமல்ல....

பரிவின் பாஷை இன்றும்
கண்ணீரென்கிறது பிரபஞ்சம் - உன்
 இயலாமை கண்டும் என்னில் 
துளிற்காத கண்ணீரை உன்னால்
ஈரமற்றவனே என்று
எனை இகழச்செய்துவிடுகிறது.....

வலிகளும் சுகங்களும்
 ஒன்றோடொன்று முரண்படும்போதும்
அதனின்று வெளிப்படும் விழிநீரில்
இருவேறு அர்த்தங்கள் - எனினும்
கண்ணீரின் உவர்ப்பில் எனக்கு
வேறுபாடு தெரியவில்லை....

தான் பயணப்படும் வழியை
தானே தீர்மானித்துக்கொள்கிறது - ஏதும்
தடைகள் இருப்பினும்
வழிமாறி பயணிப்பதே இல்லை....

எப்போதும் கேட்கும் ஏச்சும்
இகழ்சியும் இதயத்தில் பெரிதாய்
எதையும் ஏற்படுத்துவதில்லை - எனினும்
எப்போதாவது கேட்கும் புகழ்சியின்போது
சட்டென புறப்படும் கண்ணீரின் அழகு
ஒரு தாய்போல் அன்பானது....

இறப்புகளும் இழப்புகளும்
ஏற்படும்போதும் இமை கடக்கும்
கண்ணீர் கூடவே இதயத்தையும்
பிழிந்து பூமியை நனைத்துவிடுகிறது.....

யாருமற்ற இரவுகளும்
ஏகாந்த வாழ்க்கையும் நமை நாதியற்றதாய்
உணரச்செய்யும்போதும்
உள்ளிருக்கும் உணர்ச்சிகளை
உயிர்வலிக்காவண்ணம் வெளிக்கொணர்கிறது
விலைமதிப்பற்ற கண்ணீர்....

தாகங்களோ ஏக்கங்களோ அதிகம்
தங்குவதில்லை இதயங்களில் - புதிய
வழிகள் திறந்து தடம் பதித்துவிடுகிறது
சில பல சிரமங்களை துளிகளில்
கரைத்து உதறித்தள்ளிவிடுகிறது......

விழி நனையா வழிகள் வெற்றியின்
வழியில் வெகு சிலதே - ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் நாம் கடந்த
காலம் சென்ற தோல்விகள்.....

நேற்றும் அழுதேன் நான்
இன்றும் அழுகிறேன் - இதுவரை
என் கண்கள் கண்ணீரை
பிரசவிக்கவில்லை ஆதலால் என்
 அழுகை பொய்யுமல்ல....

நேற்றும் கண்ணீர் சிந்தினேன்
இன்றும் கண்ணீர் வழிகிறது - என்னில்
வலிகளேதும் இல்லை
இதயம் கனக்க நொந்துபோகவுமில்லை.....

 ஒற்றைச்சொல்லில் என் கண்கள்
குழமாகிவிடுகிறது சிலநேரங்களில்- எனினும்
 இம் மண் தொட மறுக்கிறது கண்ணீர்,
 புரியவில்லை எனக்கு அவ்வின்சொல்லில்
 காயங்களில்லையோ
அது தாய் வாய் பிறந்ததால்......

யாவருக்கும் ஒரு நாள் வேண்டும்
அது தனிமையாய்
இருத்தலும் வேண்டும் - ஏதேதோ
சொல்லி அழவும் வேண்டும் அது
கண்ணீரில் பிறக்கவும் வேண்டும்.......

கண்ணீரோடு

 அபூ ஃபஹத்

Jan 4, 2013

நேற்றைய தலைமுறையும் வளைகுடா வாழ்க்கையும்...




வெகு நாட்களுக்குப்பின் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமாக வெளிநாடுவாள் சகோதரர்களுக்காக இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன்....

சொல்லப்படும் விஷயங்களில் தவறுகள் இருப்பின் தயவு கூர்ந்து மன்னிக்கவும்...

ஏறத்தாள அரை நூற்றாண்டுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கடல்வழிப்பயணமாக அரபு நாடுகளில் தொழில் தேடி வந்திருக்கின்றனர். அப்படி அரபு நாட்டு கடற்கரைகளில் வந்திறங்கும்போது இங்கே புர்ஜ் கலீஃபாவோ, புர்ஜில் அரபோ, றாஷித் மாலோ, லூலூக்களோ மரீனா மால்கலோ இருக்கவில்லை, மாறாக கண்ணெட்டும் தூரம் வரை சுற்றிலும் மணற்காடுகள், திரும்பி பின் பக்கம் பார்த்தால் நீல நிறத்தில் கடல்மநீர் மட்டும். வந்திறங்கியவர்களின் நிலையோ கண்ணை கட்டி காட்டில் விட்டவர்களைப்போல் வந்திறங்கியிருக்கக்கூடும், நாம் எப்படி நடத்தப்படுவோம், எந்த மாதிரியான வேலைகள் செய்யப்போகிறோம், என்பதெல்லாம் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பாலைவனத்தன் பளபளக்கும் மண் குவியல்களான குன்றுகளுக்கு இடையில் தபூக்கும், சிமென்டும், சுமந்து தீர்த்த தோள்கள் இன்று நம் ஊர்களில் நமக்கு அருகாமையிலேயே இருக்கலாம், ஏன் நம் வீட்டில் நமது தகப்பனாகவோ, அண்ணனாகவோ, உப்பாவாகவோ கூட இருக்கலாம்.       பல காலம் வளைகுடாவின் ஏதோ மூலைகளில் படாத பாடுபட்டு பல ஆண்டுகாலம் தன் இளமையையும், அழகிய வாழ்க்கையையும் பாலை மணலில் செடியாய் பதியமிட்டு அதனை தண்ணீருக்கு பதில் தம் கண்ணீரையும் உரத்திற்கு பதிலாக தம் இரத்தத்தையும் ஊற்றி வளர்த்து அதிலிருந்து கிடைத்த ஊதியத்தை தன் தாய் தந்தைக்கும் தம் குடும்பத்திற்க்கும் தந்துவிட்டு, தான் அங்கே உலர்ந்த ரொட்டித்துண்டுகளை மட்டும் உண்டு தியாகியாக வாழ்ந்து முப்பது நாற்பது ஆண்டுகளை கடந்தபின் திரும்பி ஊருக்கு வந்து ஏதாவது செய்யலாமே என ஒதுங்கும்போது கைகளிலோ ஏதுமற்று ஏமாற்றம் அடைந்தவனாக ஊரில் யாராலும் என்னவென்றுகூட கேட்க ஆளில்லாமல் அனாதையாய் இருக்கும் பலரும் நம்மிடையே இல்லாமலில்லை.



அன்றைக்கு இந்த பளபளக்கும் மண்ணில் கால் வைத்தபோது பூச்செண்டுகளோடோ, பொக்கேகளோடோ, பெயர் எழுதிய பலகைகளோடோ யாரும் வரவேற்பதற்காக வரவில்லை, யாரும் இருக்கவுமில்லை, மாறாக வெறும் அரபுக்களின் பாரம்பரிய உடை அணிந்த மனிதர்கள், சிலர் ஒட்டகங்களோடும், சிலர் அன்றைய காலத்தில் இங்கே இருந்த மோட்டார் வாகனங்களிலோ வந்திருக்கலாம்.

வந்திறங்கியவர்கள் யாரும் எஞ்சினீயர்களோ, டாக்டர்களாகவோ இருக்கவில்லை, 98 % -னர் வெறும் கை நாட்டுகளாகவே இருந்திருக்கின்றனர் என்பது மிக முக்கியமான விஷயம்... காரணம் இன்று தின்று கொளுத்து கிடைத்த நல்ல வேலைகளை துச்ச காரணங்களுக்காகவும், வரட்டுத்தனமான பந்தாவுக்காகவும் ஏதோ சில சான்றிதழ்கள் கையில் இருக்கும் தைரியத்திலும்  உதறித்தள்ளும் கேவலமான புத்திகெட்ட இளைய சமுதாயத்தின் ஆணிவேர்கள் நமது முன்னோர்களான கை நாட்டுகள் என்பதற்காகவே நான் மிக முக்கியமான விஷயம் என்று கூறினேன்.

அதிகமானவர்களின் வேலையும் மிகவும் சிரமமானதாகவே இருந்திருக்கவேண்டும். அதுபற்றி கேட்டறிய முற்பட்டபோது பலரின் கதைகளின் ஆரம்பமும் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது. சரியான தியாகம் என்பது என்ன என்பதை உணரமுடிகிறது. நேற்றைய தலைமுறைகள் இந்த மணற்காடுகளை ஏறத்தாள சமவெளிகளாக மாற்றியமைக்க மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அன்றைய நாட்களில் 10 பேர் வந்தால் 10 பேரும் பல மைல் தூரத்திற்கு பிரித்து அனுப்பப்படுவார்கள், அல்லது சிலரை மட்டும் அனுப்புவார்கள்.

அன்று வந்திறங்கியவர்கள் ஏதோ ஊரில் பெரிய பண்ணையர்களாக இருந்தவர்கள் இல்லை, ஊதாரிகளாகவும் இருந்திருக்கவில்லை, நல்ல உடல் ஆரோக்கயத்தோடும், உடலை வருத்தி  உழைத்தால் இன்னும் கொஞ்சம் நல்ல சம்பாத்தியம் வரலாம் என்ற நப்பாசையில் நாடு கடந்தவர்கள் அவர்கள், வந்திறங்குபவர்கள் ஒருவருக்கொருவர் சந்திப்பதற்குக்கூட வாய்பிருப்பதில்லை. ஆனாலும் தங்களின் தொடர்புகளை மிகவும் நெருக்கமாகவே வைத்திருந்தனர். தொலைத்தொடர்பு அற்ற அந்த காலத்தில் இன்றுபோல் கைபேசிகள் இல்லாத காலம், கடிதங்கள் பரிமாறிக்கொள்வதும், ஊரிலிருந்து யாராவது வந்தால் அவர்களை பார்ப்பதற்காக ஏதாவது ஒரு அருகாமை நகரத்தில் இருக்கும் ஒருவரோடு நல்ல தொடர்பு வைத்துக்கொண்டு அவரிடம் அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் வந்து சந்தித்து எல்லோரும் ஒன்று சேர்வதும் பின் இரவில் மீண்டும் கண்ணீரோடு அவரவர் இடங்களுக்கு பயணப்படுவதும் இந்த காலத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயங்கள்....

ஒரு கடிதம் வந்து சேர இரண்டு மாதங்கள் வரை ஆகலாம், அது வந்து சேர்ந்தபின் அவர்கள் கை வந்து சேர இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். அந்த கடிதம் கிடைக்கும்போது அதன் விபரங்களை மீண்டும் மீண்டும் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்தம், மதிய உணவில், இரவு உணவில், தூக்கத்திற்கு முன் என்று பலமுறை தம் தாயின், குடும்பத்தின், குழந்தைகளின் புகைப்படங்களை எடு்த்து பார்த்துக்கொள்வதும், மீண்டும் அதனை பெட்டியில் பத்திரமாக வைப்பதும், தினமும் ஒருதடவையாவது வந்த கடிதத்தையே மீண்டும் படிப்பதும் என இன்று நாம் பைத்தியக்காரத்தனமாக நினைக்கு்ம் விஷயங்கள் அனைத்தும் அன்று பொக்கிஷங்கள்...

வந்த கடிதத்திற்கு பதில் எழுத உட்கார்ந்தால் வார்த்தைகள் வராமல் விழி பிதுங்குவதும், கடிதத்தை எப்படி துவங்குவது என்று அறியாமல் புதிதாய் காதலிப்பவன் காதலிக்கு எழுதும் முதல் காதல் கடிதம் எழுதுவது போன்று பலமுறை பல தாள்கள் எழுதி கிழிப்பதும் வேடிக்கைதான்,  பலரும் எழுதத்தெரியாதவர்களாக இருந்தனர், மனைவியின் அன்பை ஏதோ ஒருவனிடம் சொல்லி படித்தறிவதும் அவர்கள் அன்போடு கிண்டல் செய்வதும், அதில் சில அன்பான கோபங்களும், என ஒரு கவிதையாகவே இருந்திருக்கிறது அன்றைய மாமனிதர்களின் வாழ்க்கை.

ஊரிலிருந்து வரும் எல்லா கடிதங்களும் வாசித்து முடிக்கப்படும்போது அவை கண்ணீரில் நனைந்திருக்குமாம்.. காத்திருப்பின் வலிகளுக்கு இதமாக மருந்தாக வரும் தென்றல் நேற்றைய கடிதங்கள். யாரிடம் சொல்லி படித்தாலும், தானே படித்தாலும் கடிதங்களின் இதயங்களில் கண்ணீர்துளிகள் விழுந்து இரத்தினக்கற்களாய் தெறித்துச்செல்லும்போது
மனம் மகிழ்வதை உணர்கின்றன கடிதங்கள்.  அன்றைய காலத்தில் கம்பியூட்டர்களோ, பெரிய இயந்திரங்களோ இருக்கவில்லை, எவ்வளவு பெரிய பாரத்தையும் தூக்கும் தோள்களும் நெஞ்சுரமும் மட்டுமே இருந்தன, அன்றைய தோள்கள் சுந்து தீர்த்த கற்களும், மூடைகளும் இன்று மாட மாளிகைகளாகவும், கூட கோபுரங்களாகவும் நம் முன்னால் மிளிர்கின்றன. இயந்திரங்கள் இன்று 2000 அடிவரை உயரத்தில் பயணித்து பொருட்களை கொண்டு செல்வதும் 100 பேர் செய்யும் வேலையை ஒற்றையாய் செய்யுமளவுக்கு வந்திவிட்டபோதும் அன்று இந்த வசதிகள் கண்டுபிடிக்கப்படாததால் நமது சகோதரர்கள்தான் இந்த வேலைகளை செய்தனர்...

எப்போதோ வரும் பெருநாளுக்காக இப்போதே ஒன்றுகூடுவதற்கான திட்டங்களும், பெருநாளை யாரோடு கொண்டாடுவது என்பது போன்ற எதிர்பார்ப்புகளுமாக தினம் தினம் கனவுகளில் களிவதும் அழகிய ஞாபகங்கள், ஊரில் யாரோ மரணித்தாலும் மனம் பொறுக்கமுடியாதவர்கள் உறவுகளின் இழப்புகளில் மிகவும் துயரப்பட்டுப்போகும் அவஸ்த்தைகள் அன்றைய ரணங்கள்தான்.

இது இப்படியென்றால் ஊரில் நிலைமையே வேறு,


வீட்டை விட்டு, உரவுகளை விட்டு, பல ஆயிரம் மைல்கள் கடல் கடந்து நிற்கும்போதும் பல மாதங்களுக்கு ஒரு முறை நகரத்திற்கு வந்து தொலைபேசி நிலையம் சென்று மணிக்கணக்கில் காத்துநின்று கடைசியில் லைன் கிடைத்து ஹலோ என்று கேட்கும்போது தொலைபேசியின் மறு முனையில் எதிரொலியுடன் கேட்கும் தாயின் சத்தத்தில் உணர்வுகள் அனைத்தும் உருகி கண்களில் ஆறாய் ஓடும் காட்சிகளில் அன்று நனைந்து போவர் ஊரில் இருப்பவர்கள்.

ஊரில் வசதிபடைத்த விரல் விட்டு எண்ணும் சிலரிடம் மட்டுமே அன்று தொலைபேசிகள் இருந்தன. கழிந்த மாதம் வந்த கடிதத்தில் அடுத்த மாதம் 15-ம் தியதி நான் ஃபோண் பண்ணுவேன், நீ காலைலயே வந்து ஷாகுல் காக்கா வீட்டில் இரு என்று எழுதப்பட்டிருக்க அந்த கடிதத்தை தினமும் நான்கைந்து முறையேனும் எடு்த்து பார்த்து பார்த்து வைக்கும் தாயும், மனைவியும், தந்தையும் அந்த நாளுக்காக காத்திருப்பதில் மட்டுமல்லாம் ஷாகுல் காக்காவின் வீட்டோடு தொடர்பை அதிகப்படுத்திக்கொள்வதிலிருந்து அடிக்கடி அவர்களுக்கான பல ஒத்தாசைகளும் செய்து கொடுப்பதுவரை பலவிதமான நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவதும், அந்த நாள் காலையிலேயே ஷாகுல் காக்கா வீட்டில் வந்து மகனின் ஃபோணுக்காக காத்திருக்கும் தாய்மார்களின் அவஸ்த்தை கலந்த எதிர்பார்ப்புகளையும் நாம் உணர்ந்துபார்த்தால்தான் புரியும்.

அன்றைய காலத்திலும் மிக மோசமான விமர்சனங்களும் வலிகளும் தாங்கியே இருந்துவந்தனர் வெளிநாடு பயணிப்பவர்கள். ஆனால் விடுமைறைக்கு வரும்போது அவர்களுக்கு ஊரில் இருந்த மரியாதை அன்றைய முதலமைச்சர்களுக்குக்கூட இருந்ததில்லை. மிகவும் மதிப்பும் மரியாதையும் மிகுந்தவர்களாக பார்க்கப்பட்டனர். ஒருவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெலிநாடு புறப்படும்போது அந்த வீடு ஏறத்தாள ஒரு இறந்தவீடு போன்றே காட்சியளிக்கும். ஏதோ சிலர்  சில கடிதங்களைக்கொண்டு வந்து கொடுப்பர். தன் மகனிடம் கொடுப்பதற்கும், போஸ்ட் செய்தால் போதும் என்றும் கூறி அவர்கள் தரும் கடிதத்தை பத்திரமாக தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்வர்.  பயணப்படுபரோடு வேலை செய்பவர்கள் யாராவது இருந்தால் ஏதாவது தின் பண்டங்கள் கொண்டு கொடுப்பர்.  அப்படி கொடுக்கப்படும் எந்த பொருளும் கடைகளிலிருந்து வாங்கி கொடுக்கப்படுபவை அல்ல.  தன் மகனுக்காக கொடுத்தனுப்ப தானே செய்து பக்கும் பார்த்து, கண் விளித்து, தன் அன்பையும், பாசத்தையும் அதில் கலந்து கொடுத்தனுப்புவாள்.

இதுபோன்ற நேரங்களில் மனைவிகளின் நிலை ஏறத்தாள மரணப்படுக்கையில் இருப்பது போன்ற உணர்வுகளையே தரும். அழுது அழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிறுத்து மானசீகமாக தளற்ந்துபோயிருப்பாள் மனைவி. இவை ஏதுவுமறியாமல் என்ன செய்வதென்றறியாமல் தேமே என முளித்துக்கொண்டு அப்படியே ஒதுங்கி நிற்கும் சிறு குழந்தைகள்.  விடியற்காலையில் காரில் ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று பம்பாய்க்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழியனுப்பிவைத்துவிட்டு வீட்டை அடைந்து அனுப்பிய விபரத்தை சொல்லிவிட்டு, எதுக்கும்மா அழுதுட்டே இருக்கீங்க, அவன் என்ன சம்பாதிக்கத்தானே போறான், சும்மா வேலையை பாருங்க என்று சொல்லும் தந்தை தன்னையுமறியாமல் கண் கலங்கி தன் கலருக்கு அடியில் இருக்கும் கைக்குட்டையை எடு்த்து கண்ணை துடைத்துவிட்டு ஏதோ யோசித்தவாறு சாய்வு நாற்காலியில்  அப்படியே படுத்து மனமுடைந்து படுத்திருப்பதும் மிகவும் மனதை வலிக்க வைக்கும் காட்சிகள்.

தன் மகன் போய் சேர்ந்தாச்சா என்று செய்தி வரும்வரை கையும் ஓடாமல், காலும் ஓடாமல், எந்த வேலையும் செய்யாமல் அதே ஷாகும் காக்கா வீட்டிற்கு ஒரு நாளைக்கு 10 முறையாவது சென்று ஏதும் ஃபோண் வந்துதா என்று விசாரிக்கும் தந்தையானாலும், தாயானாலும்,  நான்கு நாட்கள் ஆனபின்னும் நார்மலு்ககு வராத மனைவி என  அது ஒரு பெரிய ரணம் மிகுந்த கவிதையாகவே காட்சி தரும்...

காலையில் 9 மணிக்கெல்லாம் கடை திறக்க போகும் வழியில்  ஷாகுல் காக்கா இவர் வீட்டில் ஏறி, காக்கா நேத்தைக்கு ராத்திரி 2 மணிக்கு ஃபோண் வந்திச்சி, பிளேன் லேட்டாம். போய் எறங்கி ஒரு நாள் ஆச்சாம் என்று சொல்ல, அழுதவாறே வாங்களேன், ஒரு சாயா குடிச்சிட்டு போங்கோ, இப்போதான் உயிர் வந்தமாதிரி இருக்குண்ணு சொல்ல, அவன் வாப்பா வந்தா நீங்க இங்க வந்து விபரம் சொன்தை சொன்னா ரொம்ப சந்தோஷப்படும் என்று சொல்வாள் அந்த தாய். இந்த நல்ல சேதியை தன் அறைக்குளே நின்று கேட்டுக்கொண்டு நிம்மதியுடன் ஒரு அழுகையோடு தம் விரத்தை முடித்துக்கொண்டு மெதுவாக வீட்டன் திண்ணையில் வந்து தலை காட்டஆரம்பிக்கும் மனைவி. என ஒரு இனம்புரியாத தனிமைகளும் தேவைகளை தியாகம் செய்த வாழ்க்கையுமாக நேற்றைய வளைகுடா வாழ்க்கைகள்...


இன்றைய நிலையே வேறு. மேலே குறிப்பிட்ட எந்த ஒரு விஷயத்தையும் இன்றைய நாட்களில் நம்மால் யோசித்துப்பார்க்கக்கூட முடியாது, இப்படி ஒரு ஏகாந்த வாழ்க்கையில் இருந்தபோதும் அவர்களிடையே ஒரு பலமான அன்பு இருந்தது, பொறாமைகள் அற்ற பச்சையான பாசம் தெரிந்தது. அதன் விளைவுதான் நாம் இன்று சுபிட்ஷமாக வாழ்கிறோம் அரபு நாடுகளில்.  நேற்றைய நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊருக்கே உதவியாக இருந்தனர். அவர்கள் வாங்கிய ஊதியங்கள், சம்பாதித்த காசுகள் மிகவும் துச்சமாநவை. இருப்பினும் அவர்களின் உழைப்பில் அந்த துச்சமான காசில் உயர்ந்த மினாராக்கள் தமிழ்நாட்டின் பள்ளிகளில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.

அதில் ஒரு ஈரம் இருந்தது. அதில் ஒரு அற்பணிப்பு இருந்தது, அன்றைய காலத்தில் இன்றளவுக்கு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோதும் ஒவ்வொரு விஷயங்களையும் தன் வீட்டு விஷயமாக நினைத்து அதற்காக நேரம் ஒதுக்கி பல நண்பர்களும் ஒரே இடத்தில் பல நாட்கள் பல முறை சந்தித்து யோசனைகள் செய்து அந்தந்த விஷயங்களின் கெளரவத்திற்கு ஏற்றார்போல் தங்களின் தகுதிக்கு மீறி பெரிய அற்பணிப்புகள் செய்வதும் இவர்களிடம் இருந்தது. இவைகள் எல்லாம் நடந்தேறியவை ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொள்ள மாதங்கள் காத்திருக்கவேண்டிய காலத்தில் என்பது முக்கியமான விஷயம்...

ஆனால் இன்று.1990 கள் வரை இந்த அழகிய நிலைமைகள் இருந்தது என்றே சொல்லாம். அதாவது 2000 த்தில் மாற்றங்கள் தலைகீழானது என்றே சொல்லலாம்.. நேற்றைய மனிதர்களும், நேற்றைய உழைப்புகளும், நேற்றைய உணவுகளும், நேற்றைய உண்ரவுகளும் கொச்சைப்படுத்த ஆரம்பித்து எல்லோருடையவும் தூரங்களும் குறையக்குறைய இடைவெளிகள் அதிகம் ஆக ஆரம்பித்து இன்று பக்கத்து இருக்கையில் இருக்கும் என் சக ஜமாஅத் சகோதரனோடு பேசாதநிலைக்கு சென்று மனங்கள் சுருங்கிப்போயிருக்கிறது. இதயங்களில் அதிகம் இறுக்கங்கள் மட்டுமே காணப்படுகின்றன. என்ன காரணம் என்றில்லாமல் மனக்குழப்பத்தில் மனஸ்தாபங்கள், ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சலாம் சொல்லாதவர்கள் எல்லோரும் ஒன்ருகூடும் இடங்களில் நல்லவர்களாக நடந்துகொள்கின்றனர். ஆனாலும் தனித்தனியாக சந்தித்தால் ஒருவரைப்பற்றி ஒருவர் குறைகூறும் நிலையிலேலேதான் இருக்கிறோம், குறை கூறிய அடுத்த நிமிடமே அதே நபரோடு அன்பு பாராட்டுவதைப்போல் நடிப்பது எவ்வளவு பொய்யான வாழ்க்கை என்றே புரியவில்லை....

வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் எழுதப்படிக்கத்தெரியாமல் இந்த மண்ணில் வாழ்க்கையை தொலைக்கும்போதும் யாரும் ஒருவருக்கொருவர் பொய்யாக வாழ்ந்துகொண்டதாக தெரியவில்லை. ஆனால் வசதி வாய்ப்புகளும், ஆயிரங்களில் றியால்களும், லகரங்களில் திர்ஹமும் ிலநூறு தினார்களும் ஊதியமாக வந்தபின்தான் நாம் நமது சக சகோதரன் வரும் திசைக்கு எதிர் திசை நோக்கி முகம் திருப்பிச்செல்கிறோம்...


இவ்வளவு பெரிய கட்டுரை நான் எதற்காக எழுதுகிறேன் என்றே எனக்கு புரியவில்லை, காரணம் என்னைச்சுற்றிநடக்கும் பல செயல்களும் பகல்வேஷமாகவே படுகிறது. பல நேரங்களில் மனம் கொதிப்படைகிறது. மனம் வருத்தப்படுகிறது, பச்சாதாபப்படுகிறது. ஏநோ தெரியவில்லை. நானும் இதே நிலையில்தானே இருக்கிறேன் என்ற வலியும் இருக்கத்தான் செய்கிறது.

தினமும் வரும் மின்னஞ்சல்களில் சிலது மரண அறிவிப்புகளாகவே இருக்கின்றன. அதில் மரணித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும் நபரின் பெயரைக்கேட்டமாத்திரத்தில் மனது அப்படியே ஸ்தம்பித்துவிடுகிறது. காரணம் வாழ்க்கையின்ந பெரும்பகுதியை வெளிநாடுகளில் தொலைத்துவிட்டு ஊர் திரும்பி சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே, சில வருடங்களிலேயே மரணப்படும்போது அவரின் வாழ்க்கை பற்றி நன்கு தெரிந்த நம்மால் ஜீரணித்திவிட முடியவில்லை. நேற்று தேவைக்காக சம்பாதித்தார்கள், அவை விலைமதிக்கமுடியாத சொத்துக்களாக இன்றும் நிலை நிற்கிறது, அந்த மனிதர்களும் கர்வம் கொள்மால், பந்தா இல்லாமல், இழந்த இரத்தத்தின், வியர்வையின் விலை அறிந்து அமைதியாகவும், விவேகத்துடனும் நடக்கின்றனர்.. ஆனால் நாமோ எந்த தகுதியும் இல்லாதநாம் வாங்கும் பல ஆயிரம் ரியால்கள் நம் கர்வத்தை உயர்த்திவிடுகிறது, நமது மதிப்பை வானுயர நாமே புகழ்த்திக்கொண்டு பந்தா செய்கிறோம். பல நேரங்களில் பூமி பார்த்து நடக்க மறுக்கிறோம். நமது வாழ்க்கை சூழல் மறந்து வேற்று கிரக வாசிபோல் சக மனிதர்களிடம் நடக்கிறோம்...

ஒரு காலத்தில் படித்தால் நாட்டிலேயே வேலை, கவுரவம் மிக்கவனாக பார்க்கப்பட்டனர். அது ஒரு பெரிய அங்கீகாரமாகவும் இருந்தது. அன்று படிக்காதவர்கள் பயணப்படும் நாடாக இருந்தன அரபு நாடுகள், ஆனால் படிக்காதவர்களுக்கு வாழ்வழிக்கும் நம் தாய்நாட்டு வாழ்க்கைச்சூழல் என்ன பெரிய படிப்பு படித்திருந்தபோதும் பெரிதாக மதிக்கப்படாமல், கற்றறிந்த அனாதைகளாக அதே அரபு நாட்டின் படிக்காத பழைய கை நாட்டுகளின் கீழ் வேலை பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது, எவ்வளவு பெரிய வேடிக்கை....

ஆக அகங்காரம், ஆணவம், வீண் கெளரவம் எல்லாம் பெரிய வெற்றியை தருவனவல்ல என்பதை பழைய தலைமுரை வளைகுடா வாழ்க்ை நம்ககு தந்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன். நேற்றைய தலைமுறையிடம் நிரைய கற்கவேண்டியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் கல்வியை விட அவர்களிடமிருந்து வாழ்க்கையையும், அதந் வவிமுறைகளையும் ஒழுக்கமாக கற்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறி முடிக்கிறேன்....


அன்புடன்


அபூ ஃபஹத்



Jan 3, 2013

வளைகுடா...நேற்று முதல்...


வளைகுடா ....
*************************************

1970-களுக்கு முன்னரே அன்றைய நமது இளைஞர்களில் பலரும் பல நாட்கள் கடல்வழிப்பயணப்பட்டு அரபு நாடுகளின் ஏதாவது ஒரு கடற்கரையில் இறங்கியபோது அவர்கள் மனதில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இருக்கவில்லை, கண்ணை கட்டி காட்டில் விட்டவர்களைப்போல் வந்திறங்கியிருக்கக்கூடும், நாம் எப்படி நடத்தப்படுவோம், எந்த மாதிரியான வேலைகள் செய்யப்போகிறோம், என்பதெல்லாம் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்றைய காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பார்க்கக்கூட முடியவில்லை. அன்றைய நிலையை இன்றைய நாம் ஒரு 10 நிமிடம்கூட பொறுத்துக்கொள்வோமா என்று கூட தெரியவில்லை... கடற்கரைகளை முதலும் கடைசியுமாக பார்த்தவர்களும் இருப்பார்கள், மறுமுறை ஊருக்கு செல்லும்போதுதாதான் மீண்டும் பார்க்க நேரி்டும், சிலருக்கு கடலே கதி..

பாலைவனத்தன் பளபளக்கும் மண் குவியல்களான குன்றுகளுக்கு இடையில் தபூக்கும், சிமென்டும், சுமந்து தீர்த்த தோள்கள் இன்று நம் ஊர்களில் நமக்கு அருகாமையிலேயே இருக்கலாம், ஏன் நம் வீட்டில் நமது தகப்பனாகவோ, அண்ணனாகவோ, உப்பாவாகவோ கூட இருக்கலாம்.       பல காலம் வளைகுடாவின் ஏதோ மூலைகளில் படாத பாடுபட்டு பல ஆண்டுகாலம் தன் இளமையையும், அழகிய வாழ்க்கையையும் பாலை மணலில் செடியாய் பதியமிட்டு அதனை தண்ணீருக்கு பதில் தம் கண்ணீரையும் உரத்திற்கு பதிலாக தம் இரத்தத்தையும் ஊற்றி வளர்த்து அதிலிருந்து கிடைத்த ஊதியத்தை தன் தாய் தந்தைக்கும் தம் குடும்பத்திற்க்கும் தந்துவிட்டு, தான் அங்கே உலர்ந்த ரொட்டித்துண்டுகளை மட்டும் உண்டு தியாகியாக வாழ்ந்து முப்பது நாற்பது ஆண்டுகளை கடந்தபின் திரும்பி ஊருக்கு வந்து ஏதாவது செய்யலாமே என ஒதுங்கும்போது கைகளிலோ ஏதுமற்று ஏமாற்றம் அடைந்தவனாக ஊரில் யாராலும் என்னவென்றுகூட கேட்க ஆளில்லாமல் அனாதையாய் இருக்கும் பலரும் நம்மிடையே இல்லாமலில்லை...

அன்றைய காலங்களில் வெளிநாட்டிற்கு வந்தவர்கள் ஏதோ நன்கு படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய வேலைகளுக்காக வரவில்லை, மாறாக வீட்டிற்கே வேண்டாதவனாகவும், வேலையத்து திரிபவனாகவும் முத்திரை குத்தப்பட்ட துடிப்பான இளைஞர்களாகவேோ இருந்தனர். அவர்களை அன்று தொழில் ரீதியிலோ, அல்லது வியாபார ரீதியிலான எந்த துறைநோக்கியும் செலுத்த யாருமில்லாமல் இருந்ததும் ஒரு பெரிய காரணம். ஆனாலும் சமூகம் சமுதாயம் மற்றும் உறவினர்கள் கூட வெறுத்த பல சகோதரர்களும் அன்று இப்படி ஒரு வெலிநாட்டு பயணம் பற்றிய வழியே யோசிக்கும்போது இந்த இளைஞர்களிடையே வாழ்க்கை பற்றிய பயம் மட்டும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிகமானவர்களின் வேலையும் மிகவும் சிரமமானதாகவே இருந்திருக்கவேண்டும். அதுபற்றி கேட்டறிய முற்பட்டபோது பலரின் கதைகளின் ஆரம்பமும் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது. சரியான தியாகம் என்பது என்ன என்பதை உணரமுடிகிறது.

அன்று வளைகுடாவின் கடற்கரைகளை தொட்டபோது யாரும் புர்ஜ் கலீஃபாவையோ, புர்ஜில் அரபையோ, பஹரைன் பாலத்தையோ, பிரபலமான எதையுமோ அவர்கள் காணவில்லை. கப்பலில் வந்துகொண்டிருக்கும்போது தம்மை சுற்றி தண்ணீரை மட்டுமே கண்டவர்கள் கரைகளை தொட்டபோது கண்டது மணற்காடுகள் மட்டுமே, கண் எட்டும் தூரம்வரைக்கும் சுற்றும் மணற்காடுகளாய் பாலைவனக்குன்றுகள். இன்றுபோல் கைகளில் பூச்செண்டுகளோடோ, ஆங்கிலோயர்கள் பாணியில் கோட் சூட் அணிந்தோ யாரும் வரவேற்பதற்கு இருக்கவில்லை. ஏதோ சிலர் சில அரபுக்கள் அடிமைகளை ஓட்டிச்செல்வதற்காக நின்றதுபோல்தான் இருந்தது. ஆனால் பலரும் இன்றளவுக்கு மோசமாக அடிமைகளாக நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம். அவர்களின் மனதில் நல்ல ஈரமும், அன்பும் இருந்திருக்கிறது. காரணம் இன்றளவும் நாம் இந்த மணற்காடுகளை விரும்புகிறோம் என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

நேற்றைய தலைமுறைகள் இந்த மணற்காடுகளை ஏறத்தாள சமவெளிகளாக மாற்றியமைக்க மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் நேற்றைய நம் தலைமுறைகள் தூக்கிய தபூக் கற்களாலும், சிமென்ட் மூட்டைகளாலும் கட்டிமுடிக்கப்பட்ட வானுயர கட்டடங்களின் மாடிகளில் உல்லாசமாய் வாழ்க்கையை நடத்துகிறது இன்றைய தலைமுறை. வீட்டை விட்டு, உரவுகளை விட்டு, பல ஆயிரம் மைல்கள் கடல் கடந்து நிற்கும்போதும் பல மாதங்களுக்கு ஒரு முறை நகரத்திற்கு வந்து தொலைபேசி நிலையம் சென்று மணிக்கணக்கில் காத்துநின்று கடைசியில் லைன் கிடைத்து ஹலோ என்று கேட்கும்போது தொலைபேசியின் மறு முனையில் எதிரொலியுடன் கேட்கும் தாயின் சத்தத்தில் உணர்வுகள் அனைத்தும் உருகி கண்களில் ஆறாய் ஓடும் காட்சிகளில் அன்று நனைந்து போவர் ஊரில் இருப்பவர்கள்.

ஊரில் வசதிபடைத்த விரல் விட்டு எண்ணும் சிலரிடம் மட்டுமே அன்று தொலைபேசிகள் இருந்தன. கழிந்த மாதம் வந்த கடிதத்தில் அடுத்த மாதம் 15-ம் தியதி நான் ஃபோண் பண்ணுவேன், நீ காலைலயே வந்து ஷாகுல் காக்கா வீட்டில் இரு என்று எழுதப்பட்டிருக்க அந்த கடிதத்தை தினமும் நான்கைந்து முறையேனும் எடு்த்து பார்த்து பார்த்து வைக்கும் தாயும், மனைவியும், தந்தையும் அந்த நாளுக்காக காத்திருப்பதில் மட்டுமல்லாம் ஷாகுல் காக்காவின் வீட்டோடு தொடர்பை அதிகப்படுத்திக்கொள்வதிலிருந்து அடிக்கடி அவர்களுக்கான பல ஒத்தாசைகளும் செய்து கொடுப்பதுவரை பலவிதமான நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவதும், அந்த நாள் காலையிலேயே ஷாகுல் காக்கா வீட்டில் வந்து மகனின் ஃபோணுக்காக காத்திருக்கும் தாய்மார்களின் அவஸ்த்தை கலந்த எதிர்பார்ப்புகளையும் நாம் உணர்ந்துபார்த்தால்தான் புரியும். 

அன்றைய காலத்திலும் மிக மோசமான விமர்சனங்களும் வலிகளும் தாங்கியே இருந்துவந்தனர் வெளிநாடு பயணிப்பவர்கள். ஆனால் முதல் விடுமைறைக்கு வரும்போது அவர்களுக்கு ஊரில் இருந்த மரியாதை அன்றைய முதலமைச்சர்களுக்குக்கூட இருந்ததில்லை. மிகவும் மதிப்பும் மரியாதையும் மிகுந்தவர்களாக பார்க்கப்பட்டனர். ஒருவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெலிநாடு புறப்படும்போது அந்த வீடு ஏறத்தாள ஒரு இறந்தவீடு போன்றே காட்சியளிக்கும். ஏதோ சிலர்  சில கடிதங்களைக்கொண்டு வந்து கொடுப்பர். தன் மகனிடம் கொடுப்பதற்கும், போஸ்ட் செய்தால் போதும் என்றும் கூறி அவர்கள் தரும் கடிதத்தை பத்திரமாக தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்வர்.  பயணப்படுபரோடு வேலை செய்பவர்கள் யாராவது இருந்தால் ஏதாவது தின் பண்டங்கள் கொண்டு கொடுப்பர்.  அப்படி கொடுக்கப்படும் எந்த பொருளும் கடைகளிலிருந்து வாங்கி கொடுக்கப்படுபவை அல்ல.  தன் மகனுக்காக கொடுத்தனுப்ப தானே செய்து பக்கும் பார்த்து, கண் விளித்து, தன் அன்பையும், பாசத்தையும் அதில் கலந்து கொடுத்தனுப்புவாள்.

இதுபோன்ற நேரங்களில் மனைவிகளின் நிலை ஏறத்தாள மரணப்படுக்கையில் இருப்பது போன்ற உணர்வுகளையே தரும். அழுது அழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிறுத்து மானசீகமாக தளற்ந்துபோயிருப்பாள் மனைவி. இவை ஏதுவுமறியாமல் என்ன செய்வதென்றறியாமல் தேமே என முளித்துக்கொண்டு அப்படியே ஒதுங்கி நிற்கும் சிறு குழந்தைகள்.  விடியற்காலையில் காரில் ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று பம்பாய்க்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழியனுப்பிவைத்துவிட்டு வீட்டை அடைந்து அனுப்பிய விபரத்தை சொல்லிவிட்டு, எதுக்கும்மா அழுதுட்டே இருக்கீங்க, அவன் என்ன சம்பாதிக்கத்தானே போறான், சும்மா வேலையை பாருங்க என்று சொல்லும் தந்தை தன்னையுமறியாமல் கண் கலங்கி தன் கலருக்கு அடியில் இருக்கும் கைக்குட்டையை எடு்த்து கண்ணை துடைத்துவிட்டு ஏதோ யோசித்தவாறு சாய்வு நாற்காலியில்  அப்படியே படுத்து மனமுடைந்து படுத்திருப்பதும் மிகவும் மனதை வலிக்க வைக்கும் காட்சிகள்.

தன் மகன் போய் சேர்ந்தாச்சா என்று செய்தி வரும்வரை கையும் ஓடாமல், காலும் ஓடாமல், எந்த வேலையும் செய்யாமல் அதே ஷாகும் காக்கா வீட்டிற்கு ஒரு நாளைக்கு 10 முறையாவது சென்று ஏதும் ஃபோண் வந்துதா என்று விசாரிக்கும் தந்தையானாலும், தாயானாலும்,  நான்கு நாட்கள் ஆனபின்னும் நார்மலு்ககு வராத மனைவி என  அது ஒரு பெரிய ரணம் மிகுந்த கவிதையாகவே காட்சி தரும்...

காலையில் 9 மணிக்கெல்லாம் கடை திறக்க போகும் வழியில்  ஷாகுல் காக்கா இவர் வீட்டில் ஏறி, காக்கா நேத்தைக்கு ராத்திரி 2 மணிக்கு ஃபோண் வந்திச்சி, பிளேன் லேட்டாம். போய் எறங்கி ஒரு நாள் ஆச்சாம் என்று சொல்ல, அழுதவாறே வாங்களேன், ஒரு சாயா குடிச்சிட்டு போங்கோ, இப்போதான் உயிர் வந்தமாதிரி இருக்குண்ணு சொல்ல, அவன் வாப்பா வந்தா நீங்க இங்க வந்து விபரம் சொன்தை சொன்னா ரொம்ப சந்தோஷப்படும் என்று சொல்வாள் அந்த தாய். இந்த நல்ல சேதியை தன் அறைக்குளே நின்று கேட்டுக்கொண்டு நிம்மதியுடன் ஒரு அழுகையோடு தம் விரத்தை முடித்துக்கொண்டு மெதுவாக வீட்டன் திண்ணையில் வந்து தலை காட்டஆரம்பிக்கும் மனைவி...


சிறுகச்சிறுக தான் சேர்த்து வைத்த பணத்தில் சிலதில் ஊர் வரும்போது எங்காவது ஐந்தோ பத்தோ சென்ட் பூமி வாங்கி இடுவதும் அதிலிருந்து வரும் தேங்காயே வருமானத்தில் ஓரளவுக்கு செலவுகள் நடந்துசெல்வதுமாக இருக்கும். முடிந்தவரை செலவுகளை சுருக்கி சேமிக்க தாயாரிடமும், தந்தையிடமும் சொல்வார் மகன்...

வளைகுடாவின் வீதிகளில் துப்புரவு தொழில் முதல் கட்டிட வேலைகள், பெட்ரோல் கிணறுகளிலும், சுத்திகரிப்பு ஆலைகளிலும், இரவு பகல் பாராது வேலைகள் செய்து பணம் சேமிப்பது மட்டுமே தமது வேலையாக இருக்கும், இரவுகள் முழுவதும் தமது வீட்டின் நினைவுகளும், மனைவி மக்களின் நினைவுகளுமாக வாழ்க்கை ஒரு வலிமிகுந்து பயணப்படும். தான் ஒரு கடிதத்தை எழுதி முடிக்க பல நாட்கள் எடுத்துக்கொள்வதுமுண்டு. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் ஊருக்கு பயணப்படுகிறார் என்றாலும் அவர் கை வழியாக பணமோ பொருளோ, அத்தோடு ஒரு கடிதமோ கொடுத்தனுப்புவதற்காக அவரை காண செல்வதற்கு அந்த நெஞ்சம் படும் பாடிருக்கிறதே அது மிகப்பெரும் வேதனையானது. ஒரு பவுன் தங்கம் அனுப்புவதற்குக்கூட இயலாத காலம் அது. கடன் வாங்கியோ, அல்லது முதலாளியிடம் அட்வான்ஸ் வாங்கியோ மகளுக்காக ஒரு பவுன் தங்கம் வாங்கி அனுப்புவதும் அதனை கொண்டுசெல்பவருக்கு எந்த தடங்கலும் வராமலிருக்க அதனை மறைப்பதற்கான வழிமுறைகள் செய்வதும், அந்த சகோதரனின் வீட்டு்குக சென்று பெட்டிகள் கட்டி வீட்டில் சென்று தன் நிலைமைகள் பற்றி எடுத்துக்கூறி வாப்பாவிடமும், உம்மாவிடமும், பணத்தை தவராக செலவு செய்யாமல் வலியறிந்து செலவு செய்ய கேட்டுக்கொள்வதும், பயணம் அனுப்பிவைப்பதுவரை கூடவே சென்று அனுப்பிவிட்டு கண்ணீரோடு தன் அறைக்கு திரும்புவதும், இனி நாம் எப்போது ஊருக்கு பயணப்படுவோம் என்ற எண்ணங்களோடு இருப்பதும் அன்றைய வலிகள்...

காலம் செல்லச்செல்ல கடிதங்களின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. வேகத்திற்கு ஏற்றார்போல் தேவைகளும் அதிகரித்தது...


தொடரும்....

Jan 2, 2013


அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவட்டுமாக...