Aug 24, 2013




பாதைகள் என்னவோ
எனக்கானதுதான் - ஆனால் 
நான் எனக்காய் நடக்க 
நேற்றுவரையில் 
அனுமதியில்லை இங்கே....

இந்நேரம் நான்
கயிற்றுப்பாயில் ஓரமாய்
ஒருக்களித்து படுத்திருப்பேன்
என என்னை அப்படியே
அநாதையாய் விட்டுச்சென்ற
என் மகன் எண்ணலாம்...

முதுமையின் வாயிலில்
என் முதுகால் கூனி
வீட்டுக்குள்ளேயே நான்
நெரங்க துவங்கியிருப்பேன்
என எண்ணலாம் நகரத்தின்
நெரிசலில் புழுகும் என் மகள்....

பாட்டி எப்படி இருக்காங்க
என யாரும் என் பேத்தியிடம்
விசாரித்தால் வயசாகிப்போய்
கண்ணெல்லாம் தெரியாதுண்ணு
நெனக்கிறேன் என்று யாரிடமோ
அறியாமல் சொல்லக்கூடும்...

சதைகள் தாழ்ந்து
நரம்புகள் புடைத்து
சருமங்கள் உலர்ந்துபோய்
கறுத்துப்போனதொரு
ஏகாந்தக்கிழவிதான்
இந்த வீட்டில் இருப்பாள்
என ஏதேனும் அரசு
அதிகாரிகள் எனது வீட்டை
புறக்கணித்துச்செல்லலாம்....

நான் மட்டும் தனிமையில்
என்பதால் எனக்கான எல்லா
சலுகைகளையும் யாரோ
என் வீட்டு வாசல்
மிதியாமல் செய்யலாம்...

இதோ இன்னும்
இருக்கிறேன் - என்
தளர்ந்த தசைகளில்
மிளிரும் நரம்புகளில்
நோய்த்திசுக்களற்ற குருதியின்
ஓட்டம் என்னோடு
உற்சாகமாய் பயணிக்கிறது...

எனக்கான சுவாசத்தை
இறைவன் நிறுத்தும்வரை
நானும் நிறுத்தப்போவதில்லை
இடையறாத என் உழைப்பில்
நானும் சிலரும் கொஞ்சம்
இழைப்பாறுவோம்.....

இதோ எனக்கான பாதை
நானே தீர்மானித்துள்ளேன் - என்
கால்களை மட்டுமல்ல
நான் கைவிடப்போவதில்லை என
என் மீதான நம்பிக்கையையும்
சேர்த்தே சுமந்து செல்கிறது
என் வாகனம்.....

ஏகாந்தத்தை நான்
உணர நினைப்பதில்லை - ஏனெனில்
நான் அநாதையாக
விருப்புவதில்லை.....

அபூ ஃபஹத்

நன்றி :
புகைப்படம் சகோ. திருவட்டாறு சிந்துகுமார்...

Aug 21, 2013







தாண்டவம்...
****************


விண்ணை முட்டுகிறது
விலைவாசி - துண்டா
வலைவீசி பிடிக்கப்பட்டான்
தலைப்புச்செய்தியில்
தொங்கும் கோவணத்தில்
எங்கும் பெரிய ஓட்டைகள்....

தொடர்ந்து நிராகரிக்கப்படும்
கருணை மனுக்கள் - அரக்கர்களின்
பெயரோடு நரகத்தின்
விலாசத்தில் சேர்ந்திருக்கலாம்
உங்கள் மனுக்கள்.....

என் கைகள் நிறைய
ரூபாய் நோட்டுக்கள் - எதிலும்
காந்தியின் சிரிப்பைக்காணோம்
ஒரப்பார்வையில்
தீக்குச்சி கேட்கிறார்.....

தினம் தினம் பிறக்கின்றன
திரையில் த(று)தலைகள் - இனி
திரைப்படங்களின் நிர்வாண
நடனக்கூடங்களாகலாம்
ஆட்சி மன்றங்கள்....


பெண்கள் கவர்ச்சியாய் உடை
அணியாதீர்கள் - காவல்துறை
தாய்மை காக்க கண்ணியத்தை
பிச்சை கேட்கிறது
நமது பெண்களிடம்....


நமது தெருக்கள்
குறுகிப்போயின -மாடிப்படிகள்
உயர்ந்துகொண்டேசெல்கிறது
இடையில் எப்போதாவது
முகங்களை சந்திப்பது
மின்சார லிஃப்டில் மட்டும்....


சலாமும் வணக்கமும் சொல்வது
நின்று போயிருக்கிறது - ஆங்காங்கே
ஆள் தெய்வங்களின்
அலங்கோலங்களில்
அடிமையாகிப்போயிருக்கிறது
மனிதகுலம்....

இன்னும் இன்னும்
உயிர் இருக்கிறது - கிணற்றிலேயே
இருப்பதால் தவளைகளாகவும்
வெளியே வந்தால்
விஷ ஜந்துவாகவும் பாற்கப்படும்
உணற்சியற்ற தேசத்திற்கும்
மக்களுக்கும்......


அபூ ஃபஹத்


அந்த அரச மரம்....
*************

அந்த மரம் மிகவும்
உயரமாய் இருந்தது
பார்ப்பதற்கு அழகாககவும்
அதன் நிழலில் உட்கார்ந்தால்
இதமாகவும் இருக்கும்.....

அதன் இளந்தளிர்
இலைகளை தண்ணீரில்
போட்டு வைப்பார் - தீர்த்தம்
என எல்லோருக்கும் அந்த
தண்ணீரை கைகளில்
ஊற்றி தருவார்...

மரத்தை சுற்றி வர
ஆண்களை மட்டும்
அனுமதிப்பதுண்டு - பெண்கள்
வெளிப்புற கட்டிடத்தை
சுற்றிவருவதில்
ஆட்சேபனை தெரிவிப்பதில்லை....

புனிதத்தின் எல்லை
வெயிலில் கரிந்து வீழும்
சருகுகளை மென்று உண்பதையும்
கடந்து சென்றது.....

கழிந்த மாத மழையில்
அந்த புனித மரம்
சரிந்து வீழ்ந்ததாம் - ஊர் கூடி
மரத்தை வெட்டி
அகற்றினார்களாம்....

சில நாட்களாய் நான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
சாய்ந்து விழுந்த
புனிதமிக்க மரம் அடக்கம்
செய்யப்பட்ட சமாதியை.....

சருகுகளும் கிளைகளும்
வெட்டி நறுக்கப்பட்டு
விற்கப்பட்டதாம் - எழும்புங்கள்
மரம் அறுவை நிலையத்துக்கு
எடுத்துச்செல்லவேண்டும்
வாகனம் வந்து நின்றது...

மரம் நின்ற சமாதியில்
புதிய செடி நடப்பட்டிருந்தது
அந்த செடிக்கும் பழைய
பெயரும் வரலாறுமே
மீண்டும் சொல்லத்துவங்கியிருந்தனர்....

அபூ ஃபஹத்

சுதந்திர தினம்....
******************

தலைநகரிலும் 
தலை நகரங்களிலும் 
கற்பழிப்புகள் - பாரதத்தாயா
அவள் எப்போதோ கற்பை
இழந்துவிட்டாள் இன்றைய
தலைமகன்களால்
என்றான் வழிப்போக்கன்.....

ஆளும் கட்சியின் ஊழல்களும்
எதிர் கட்சியின் அராஜகங்களும் - அவள்
கால்களில் சீழ் வடிகிறது
விழுப்புண்களில் பாய்ச்சப்படும்
சூலாயுதங்கள்....

சிறைகள் முழுக்க
தொப்பிகளும் தாடிகளும் - புழுத்துப்போன
சிறைகள் இப்போதுதான்
புனிதம் பெறுகின்றன
உழுத்துப்போன மனிதம்
உண்மை அறியவில்லை.....

சுதந்திரக்காற்று முழுவதும்
நச்சுக்களின் வீச்சு - விதைகளும்
விருட்சங்களும் கூடவே
விந்தணுக்களு ம்செயலிழந்து போயின....


கோட்சேவின் குண்டுகளுக்கு
வீழ்ந்தது காந்தியல்ல
அவர் கனவுகளும்
சுதந்திரத்தின் எதிர்காலமும் - இதோ
கோட்சேக்களின் கைகளில்
நெரிக்கப்படுகிறது
சுதந்திரத்தின் குரல்வளை.....

எனதும் உனதும்
வாக்குரிமையை பறிப்பதாய்
வந்தேறிகளின் கூக்குரல் - பாஷிசத்தீயில்
வெந்துகொண்டிருக்கிறது
வந்தே மாதரங்கள்.....

வெண்சாமரம் வேண்டாம்
சிவப்புக்கம்பளம் வேண்டாம்
சிந்தை மகிழ என்
தாய் தேசத்தில் நேசம்
மிகுந்த சுந்திரம் போதும்....

எங்கே எனது நேசம்
எங்கே எனது பாசம்
எங்கே எங்கே எங்கே
எனத்தேடுகிறேன் விஷமும்
வேஷமும் கலக்காத
சுதந்திரக்காற்றை....


எனினும்
என் தேசம்போல் ஒன்று
இன்னும் இல்லை - என்
மக்கள் போல் யாரும்
எங்குமில்லை
எம்மைப்போல் சுதந்திரமாய்
யாருமில்லை....

எவனும் என்
தேசத்தின் மீதான
பற்றில் நச்சு வீசவேண்டாம்....


இனியொரு விதி செய்வோம்....




அபூ ஃபஹத்


அனைவருக்கும்

எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்....

Aug 9, 2013




நேற்றில் முடியாத பயணம்.....
************************

என் பயணம் மீண்டும்

தொடர்கிறது - உடைசல்களும்
கிழிசல்களுமாய் தெரிந்த
என் பாதைகளை நானே 
செப்பனிட்டேன்....

மீண்டும் மீண்டும்

விரிசல்களுக்கான வரைகோடுகளின் 
சில சாத்தியக்கூறுகள்
என் பாதையில் பரிணமிக்காது
போகவேண்டும்.... 

வெண் புகை போல் என்

விழிகளை தாண்டிச்சென்றது
புரைகள் அவ்வப்போது - நான்
ஒருபோதும் என் கண்களை 
மூடிக்கொள்ளவில்லை
நல்லவை நோக்கி 
விழிகளை விலக்கிக்கொண்டேன்
ஆகாததை அநாதையாய்
அலட்சியம் செய்தேன்...

கேட்பதற்கான செவிப்புலனை

கேள்விகளுக்காய் மட்டும்
திறக்கவில்லை - சில 
வேள்விகளுக்காகவும்
புறக்கணித்த கேள்விகளை
அடிக்கடி கேட்டுக்கொண்டேன்...

வாசித்து முடித்தபின்தான்

மனம் சாந்தமானது - இன்று
இத்தனை வாசித்ததில்
எத்தனை வசனங்கள் 
உளபூர்வமாக இதுவரை 
விவாதிக்காத வசனங்கள் என்று......


நாவை அடக்கிவைப்பதற்காய் 

நான் ஒன்றும் வாய் மூடி
இருந்துவிடவில்லை - நாயன்
நவின்றதை நாள்தோறும்
மொழி பெயர்ந்து படித்ததில்
நான் நா நடுங்கினேன்....

இப்போதும் பயப்படுகிறேன்

 நான் பாதுகாத்துக்கோர்த்த
மாலைகளினின்றும் இனி 
ஒருபோதும் என் முத்துக்கள்
சிதறாதிருக்கவேண்டும்...


என் கால்கள் இன்று லேசாய்

பதறித்துடிக்கிறது - என் 
பாதைகளில் விரல் நகங்கள்போல்
அகோரமாய் நீண்டு நிற்கும்
பட்ட மரக்கொம்புகளில் என்
மாலைகள் மாட்டிக்கொள்ளாமல்
இருத்தல் வேண்டும்...


என்னால் இயன்றவரை

நானே பாதுகாத்தேன்
நானே சேர்த்து வைத்தேன்
நானே ஒப்புவித்தேன் உன்னிடம்
இறைவா..!!!

உன்னிடம் யாசிப்பதற்கா

யோசிப்பேன் நான் 
என் இறைவா- உன்
இசைவுகளுக்காய்
இன்னும் இன்னும்
யாசித்துக்கொண்டே

என் பயணம் மீண்டும்

தொடர்கிறது - என்
பாதைகளை பாதுகாப்பாயாக....



அபூ ஃபஹத்