Feb 20, 2014


சூரிய வெளிச்சத்தில்
மட்டுமே கண்ணயர்கிறேன்
இரவுகள் ஒருவேளை
என் வாழ்க்கையை
இருட்டாக்கக்கூடும்....

என் நண்பர்கள் ஆங்கே
வேலிகளில் மண் குன்றுகளில்
மறைந்திருக்கக்கூடும் - நான்
தூங்குதற்காகவல்ல
என்போன்ற பலரை
மரணத்தினின்றும்
தற்காலிகமாய் காப்பதற்காக ...


நாளை இந்த கல்லைத்தான்
உடைத்து எறியப்போகி்றேன் - என்
தேசம் கொதிக்கும் சுதந்திரத்தை
இதினின்று எய்தும் ஏதோ
ஒரு கல் பெற்றுத்தரலாம்...

எனது உடை அழகானது
என் தந்தையைப்போலவே
என் தாயின் அன்பைப்போலவே  - அவர்கள்
எனக்கு உடுத்திய அன்றே
பீரங்கி ரவைகள் துளைத்து
இறந்துபோயினர்
அவர்களின் உடைகளில்
பல இடங்களில் ஓட்டைகள்..


இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
எனது அயர்வில் சற்றும்
நிம்மதியில்லை - இருப்பினும்
என் கனவுகளில் யூப்ரடிஸ் நதிக்கரை
வந்து சொல்கிறது....

ஆங்கே எனக்கான இடத்தில்
கற்களை மடியில் கட்டி
யாரோ ஒரு சிறுவன்
நிற்கக்கூடும் - அவன்
மரணித்துவிடுவானோ எனும்
பயத்தின் வலிகள் இமைகளை
திறந்துவிடுறது....


எந்த முயற்சியும் எங்களுக்கு
அயர்வை தரவில்லை - இறுதி வெற்றி
என்னைப்போலவேஅழகானதொரு
பூவாய் பூக்கும்
அழுக்கு படிந்த மனங்களில்
அழகு மலரும்...


தாய் மடிகள் இங்கே
இல்லவேயில்லை - வெறும்
கற்களாலான படுக்கைகள் மட்டுமே
கனவுகள் முழுக்க
என் தேசத்தின் வெற்றி பற்றியதாக
மட்டுமே இருக்கும்....

எங்கள் அங்காடிகளில்
தலையணைகளோ
பட்டுமெத்தைகளோ இப்போது
விற்பதற்கில்லை - இழந்த
தலைமுறையி்ன் முகங்கள்
மட்டுமே உள்ளன....

நான் தூங்கவேண்டும்....
அடுத்த முறை நானாகவும்
இருக்கலாம் - வேலிகளின்
குறுக்கே நிற்பதற்காக....



Feb 4, 2014




அந்த ஒற்றை காலடிச்சத்தம்
மட்டும் கேட்கவில்லை - கூடவே
ஒரு குழம்பொலி சத்தமும்
கேட்கிறது பலமாக....

அழைக்கும் சப்தம் மூடியிருக்கும் 
என் வீட்டுத்தளத்தையும்
தாண்டி என் சமையறைவரை 
கணீர் என ஒலிக்கிறது....

நிசப்தத்தின் முன்னால்
மண்டியிட்டிருந்தது அந்த
மதிய நேரம் - வெயிலின்
உச்சம் அவன் தொண்டையை
வரளச்செய்திருக்கவேண்டும்
இரைப்பின் ஓசை காற்றில்
கரைந்துகொண்டிருந்தது......

கிலுகிலுப்பையின் சில்லென்ற
ஒலியை தோற்கடித்தது
சில்லரைகளை குலுக்கும்
அமிர்தப்பாத்திரம்...

பகலின் வெளிச்சம் சீறும் வீட்டில்
என் கதவுகள் மூடியே இருந்தது
என் அறை முழுக்க இருட்டின்
ஆற்பாட்டமான சிவப்பு நிறம்
விழிகள் இழந்த நான்
இமை மூடி எப்போதோ
அறிந்து வைத்திருந்த அந்த நிறம்....

நான் சப்தமிடத்தான் வேண்டும்
குரல்வளை எப்போதோ
தீய்ந்துபோயிருந்தது வெற்றிலையும்
புகையிலையும் சேர்ந்து
மூட்டிய புற்றிலையின் நெருப்பு.....

அவன் மீண்டும் தன் கால்
முன்னெடுத்து வைக்கமுடியாத
பளிங்குத்தரை அது
முன்னெடுத்தாலும் வைக்க
இடம் கொடாத ஏழ்மை மனது....

சில பருக்கை மண் துகள்கள்
பளிங்குத்தரையில் உராயும்
சிராய்ப்புகளின் சப்தம் - அவள்
மெதுவாய் நகர்ந்து செல்வதை
உணர்த்திய அதிர்வுகள்.....

ஒட்டிய குடிலில் ஒரு
துளி தண்ணீர் ஒரு குவளை
பழைய சாதம் கேட்டு
பாத்திரம் நீட்டி கும்பிட்டு
காத்திருக்கிறது அந்த
ஒற்றைக்காலும் உடைந்ததோர்
ஒற்றை மரக்குழம்பும்....

என் தலைவாசல் கதவின்
பி்ன்னிலிருந்து அவள் 

பேசினாள் ஒற்றை வரியில் 
வீட்டில் யாருமில்லை 
அப்புறம் எங்கேயாவது போய் கேளும் ஓய்
சட்டென இருண்டது அந்த
கிழட்டு யாசகனின் உலகம்...

ஏமாற்றம் என்ற வார்த்தையை
அந்த பழிங்குத்தரையில்
தன் பார்வையால் பதித்துவிட்டு
திரும்பும்போது ஒரு
ஒற்றைத்துளி வியர்வை
தெறித்து வீழ்ந்தது தலைவாசலில்...

மீண்டும் என் காதுகள் கேட்டன
அந்த ஒற்றைக்காலடிச்சப்தம்
ஒற்றை குழம்பொலி சப்தம்
வேறு ஒரு வாசலில் அவனுக்காய்
காத்திருக்கலாம் அவனின்
ஒரு குவளை சோறும்
ஒரு கோப்பை நீரும்.....

அபூ ஃபஹத்




பாராமுகங்கள்....
****************
பார்த்தும் பழகியும் 
உண்டும் களித்தும் 
கொண்டும் கொடுத்தும் 
நேற்றுவரை ஒன்றாய் நடந்த 
பல முகங்கள் இன்று
பாரா முகங்களாய் 
காரணங்கள் சொல்லாமல்
ஒதுங்கிச்சென்றுவிடுகிறது...

நான் நிற்குமிடம் அவன்
வருவதில்லை - அவன்
இருப்பிடம் சென்றால்
அவன் இல்லையென்று
சொல்லிச்செல்லும் யாரோவின்
முகங்களினின்றும் தெறித்து
வீழ்கிறது அவன் உள்ளேயே 
இருப்பதற்கான 
வெட்கத்தின் சமிக்ஞைகள்....


எனினும் அவர்களில்
நம் இதயங்கள் பரிதவித்து
எதிர்நோக்குவது பாரா
முகங்களையல்ல காரணங்களற்ற
பழைய முகங்களை மட்டுமே....


டீக்கடை வாசலில்
பேருந்து நிறுத்தத்தில்
இரயில் நிலையத்தில்
என எதேச்சையாய்
எதிர்நோக்கும் பல முகங்கள்
பாராத முகங்கள்தான்....

நான் மட்டுமே சுவாசித்து
முடிப்பதற்கல்ல இந்த காற்று
நான் மட்டுமே வாழ்வதற்கானதும்
இல்லை இந்த பிரபஞ்சம்....


எனினும் ஏதோ பரிச்சயமானதாய்
தோன்றுகையில் இதயம்
பார்த்த முகங்களை
உதடுகளால் லேசாய்
புன்சிரித்து வைக்கிறது.....

பரிவின் பாஷை கண்ணீர்
என்றால் பிரிவின் பாஷையும்
கண்ணீரே.....
விழிகள் நீந்தும் கண்ணீரே.....
குடியரசு தினம்
-----------------------


குடியரசுகள் ஆங்காங்கே
குடிமுழுகிப்போகிறது 
ஏழ்மையின் ஆழங்களை 
நிரப்பஇயலாமல்- இதோ
என் தாய்நாடு தலை 
நிமிர்ந்து நிற்கிறது....

குடிமக்களின் குடலைக் கட்டி
குடி மகன்களை குடிக்கவைத்து
காலடியில் சேர்த்துவைத்த
காந்தியின் தலைகள் பதித்த
ரூபாய் நோட்டுக்களில்
காலூன்றி நிற்கிறது
தலை குனிந்த எனது குடியரசு......


கிழக்கும் மேற்கும்
வெறி பிடித்த நாய்களுக்கு
இரையாகும் ஏழைகள்
வடக்கும் தெற்கும்
சித்திரவதையின் தியாத்தழும்புகள்
சுமந்த வீரமகன்கள்
மத்தியில் மானம் கெட்டது
என் மண்ணின் குடியரசு...

பணக்கார காலடிகளில்
மிதிபடும் பணக்கட்டுகளில்
ஏழ்மையில் இறந்துபோன
பிணங்களின் வாசம்....

விற்று வரவுகளில் இரத்த வாடை
ஏற்றுமதிகளில் செத்த வாடை
கட்டி வைக்கப்பட்டிருக்கும்
அலுவலக கோப்புகளில்
இன்னும் தூங்குகிறது
வட்டிக்கணக்குகளாய்
ஏழையின் குடியரசு....

இத்தனைக்கும் மத்தியில்
வாழ்த்தித்தான் ஆகவேண்டும்
என் நாடு பொன் நாடு
என் மக்கள் மேன் மக்கள்
என் தேசம் நிறை பாசம்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...


அபூ ஃபஹத்

கட்டுச்சோறு.
***************

தூரமா போறா மோனேண்ணு
கேட்டா உம்மும்மா - பக்கந்தான்ணு
நான் சொன்னப்பொறவு
எங்கேண்ணு கேக்கைல உமும்மா...

வறுக்கத்தா போய்ட்டு வாண்ணு
சொன்னா வாப்பும்மா- வெளியில
போற புள்ளைய என்னவுள்ள
கேள்வி இதுண்ணு கொஞ்சம்
தேச்சியப்பட்டா வாப்பும்மா....

விடியக்காலம் எழும்பி
ஒலை போட்டு தேங்கா
பால் ஊத்தி கொதிக்க வச்சி
வத்த வச்சி வச்சிருந்தா உம்மா....

அம்மி கல்லுல எனத்தையோ
தல்லுற சத்தம் கேட்டுத்தான்
நானே எழும்புனேன் - வெளிய வந்து
கண்ணு தொறந்து பாத்தா
தாத்தா சம்மந்தி அரச்சி வச்சிருந்தா....

பல்லு தேச்சி மூஞ்சி கழுவி
குளிச்சி முடிஞ்சி ஓடி வந்து
உடுப்பு போடும்போ உம்மா
நியூஸ் பேப்பர் தேடீட்டிருந்தா...

கழுவி போட்ட சட்டையை
அசையிலயிருந்து எடுக்க
போவும்போ வாழையெல
வெட்டீட்டிருந்தா சின்னம்மா...

தல சீவி முடிஞ்சி பவுடர்
டப்பா தேடும்போ மாமியும்
தாத்தாயுமா சோறும்
சம்ந்தியும் பொதிஞ்சிட்டு
நிண்ணதையும் பாத்தேன்....

உடுப்பு உடுத்து தயாராயி
பேக்கெடுத்து தோள்ல
போட்டுட்டு ஷூ போடும்போ
எல்லாரும் வீட்டுக்கு மின்ன உண்டு....

வெளிய எறங்கிட்டு வாச்சை
பாத்தா பஸ்ஸுக்கு நேரமாச்சி
எல்லார்ட்டையும் செல்லீட்டு
ஓடிப்போவும்போ வாப்பா
செலவுக்கு வச்சிக்கோண்ணு
கொஞ்சம் பணமும் தந்துது....

துருசமா போவாத
நிதானமா போடாண்ணு
யாரோ செல்லி கேட்டுது
கேட்டது பாதி கேக்காத்தது
பாதீண்ணு பஸ் ஸ்டாண்டுக்கு
ஓடிப்போய் பஸ்ஸுல ஏறியாச்சி...

பஸ்ஸு பொறப்பட்டு
போகும்போ மின்னுக்கு
ரோட்டுல தம்பி ஓடி வாறான்
எனக்குள்ள சாப்பாட்டு பொதி
கையில வெச்சிண்டு
தொரத்தி வந்தான்...

வத்தவச்ச தேங்காச்சோறும்
எரிவுள்ள தேங்கா சம்மந்தியும்
எனக்கு குடுத்து வக்கைலதான்
பிரச்சினையில்லை...

ஆனா
உம்மா கரைவாளே
புள்ள என்ன செய்வானோண்ணு
அதை நெனச்சித்தான்
மனசு கலங்குனேன்....


அபூ ஃபஹத்



யாசித்தலின் மொழி
என் வாசலில் நீட்டி 
ஒலிக்கிறது அம்மா என்று.......

நான் சில்லறைகளை
தேடுகிறேன் - என்
மனைவி நேற்றைய இரவில்
மிச்சமாகிப்போன
ரொட்டித்துண்டுகளையும்.....

முப்பதும் முப்பதும் அறுபது
நாளிகை நேரவும் பிச்சக்காரன்
தொல்லைதானா - உள்ளிருந்து
பாட்டியின் சப்தம்.......

என் குழந்தை மட்டும்
அடம் பிடிக்கிறது - எங்கிட்ட குடு 

நான்தான் குடுப்பேன்
நானேதான் குடுப்பேன் என்று.....

பழையதாயினும்
சில்லரையாகினும் வயோதிக
வெறுப்பின் அர்ச்சிப்பாகினும்
எதனையும் பொருட்படுத்தாமல்
நிமிடத்தில் கவர்ந்துசெல்கிறான்
என் குழந்தையின் அன்பையும்
புன் சிரிப்பையும்.........

அபூ ஃபஹத்