Apr 25, 2012

பயணம்.....



 திரை கடலோடிய
நீண்ட பயணங்களில்
திரவியங்கள் இருந்தனவாம்
திரைகளில் மறந்துபோன
அனுபவங்கள்....

வான வெளியில்
சில மணி நேரங்களாய்
சுருங்கிப்போயிருக்கிறது
பல கடல் கடந்த தூரங்கள்.....

நேற்று தோல் பெட்டகங்களில்
நிறைக்கப்பட்டது விதேச
பண்டங்கள் - இன்று
அட்டைப்பெட்டிகளாய்
பயணப்படுகிறது நம்மோடு....

அன்று அத்தறும் அத்தோடு
கொஞ்சம் அன்பும் கலந்திருக்கும் - இன்று
தாலியும் கூடவே தலைவலி மருந்தும்
பயணத்தின் மாற்றங்கள்....

நேற்றைய பயணங்களை
முதலாளிகள் தீர்மானிக்கவேண்டும்
இன்றைய பயணங்கள்
முதலாளியை தீர்மானிக்கின்றன....

சிறகடித்துப்பயணப்படும்
சிட்டுக்குருவிகளைப்போல்
கொஞ்சம் குதூகலிக்கிறேன் நான்
ஒவ்வொரு முறை பயணப்படும்போதும்....

வெற்றுக் கால்களை மண்தரைகளில்
பதிப்பதே இல்லை - காலணிகள்
மனிதம் கடந்து மதிக்கப்பட்டபின்.....

நிழல் பார்த்து நேரம் குறித்த
காலங்களும் பயணங்களும்
இப்போது கடிகார முட்களில்
தவறாமலுமில்லை....

இரவுகளை கடந்து
பகல்களை துரத்தி தூரத்தை
கடந்து பயணித்தபோது
பயமென்பதே இல்லை - இன்று
இரும்புப்பெட்டிகளில்
பாதுகாப்போடு பயணங்கள்...

இலக்குகளை தீர்மானித்து
இலட்சியங்களை அடைந்தன
அன்றைய பயணங்கள் - இலக்குகளை
மறந்து இலட்சியமற்ற
பயணங்கள் இன்று...

இரைச்சலும் எரிச்சலுமில்லாத
அமைதியான பயணங்களை
உணரவே முடியவில்லை - சில பல
காரணங்களற்ற சஞ்சாரங்களில்....

மனம் கொதிக்கிறது
ஒரு அழகிய பயணம் தேடி.....

ஆயிரம் விளக்கு....

ஒவ்வொரு முறை
பிறக்கும்போதும் நொடிப்பொழுதில்
செத்து விழுகிறது - ஓராயிரம்
விளக்குக
ளுக்கு ஒளியாகி
தீக்குச்சி..........

Apr 12, 2012

இறைவா...

இறைவா...

காற்றைக் கிழிப்பரோ
கடலை பிழப்பரோ இவர்கள்– நின்
கரங்களில் பிழை காண்பரோ இறைவா....

அணுவை உடைப்பரோ
மலையை தகற்பரோ இவர்கள் – நின்
ஆற்றலின் வலிமையை
இவர் அறிவரோ இறைவா....

விண்ணை அறிவரோ
மண்ணை தெரிவரோ இவர்கள் – உன்
பார்வைகள் தவறுமோ இறைவா...


சூரியன் சுழலுதோ
சந்திரன் ஒளிருதோ – நின்
வழிகளில் குறைகளோ இறைவா
விண் வெளிகளில் குறையுமோ
என் இறைவா.....

ஆக்கமும் தந்தாய்
அழிவையும் தருகிறாய் – நின்
அருளினில் குறையுமோ இறைவா
எமது ஆசைகள் குறையுமோ இறைவா....

செல்வம் தந்தாய்
சேதாரமும் தருகிறாய் – நின்
நன்றி மறந்தேனே இறைவா
உனக்கு நன்றி மறந்தேனே இறைவா....

அறிவையும் தந்தாய் அதை
அறியவும் வைத்தாய் – நான்
அகந்தை கொண்டேனே இறைவா
எனக்கே தெரியும் எல்லாம் என
அடங்க மறுத்தேனே இறைவா.....

நீ கொடுத்தது எதையும் நான்
நான் மறுக்கவில்லை – நான்
மறுத்ததையும் கூட நீ
மன்னிப்பாயோ இறைவா

சிந்தை தந்த இறைவா நீ
சிரமம் தந்திடாதே – எந்தை
தாய்க்கும் நீ
மன்னிப்பருள்வாய் இறைவா.....

எந்தன் சக மனிதம்
காத்தருள்வாய் இறைவா – எம்
சொந்தங்களின் சுகங்கள்
காத்தருள் இறைவா.....

அண்டிப் பிழைப்போர் தனை
அன்றாடம் ஆக்கிடு இறைவா – நீ
மண்டியிடுவோற்கு மன்னிப்பருள்வாய் இறைவா....

பொங்கும் அலைகள் வேண்டாம்
தாங்காத பூகம்பம் வேண்டாம் – நச்சு
ஜந்துக்களும் வேண்டாம் இறைவா
எங்களை பிய்த்து எறிந்திடாய் இறைவா
எம் துக்கம் தெரியாமல் தூங்கவைப்பாய் இறைவா.....

நொடிப்பொழுதில் நின் திருவழியில்
ஒன்று சேர்ப்பாய் இறைவா...
எமை உன்பால்
ஒன்றாய் சேர்ப்பாய் இறைவா.....

___ அபூ பஹத் ______

Apr 10, 2012

கஃபாலத்து.......



கஃபாலத்து.......
------------------------

ஈரேழு வழுஷமாச்சி
இழமையை நானிழந்து - இப்போ
ஈராறு மாசமாச்சி
இகாமா தானிழந்து..!

வேலைக்கும் போவயில
என் கஃபீலையும் காணயில
விசா அடிக்க கொடுத்த பைசா
விவரமும் தெரியயில....!

சிவப்புண்ணும் மஞ்சைண்ணும்
புதுசு புதுசா சொல்றாங்க - என்
கலறு என்னேண்ணு
எங்க போய் நான் பாற்க.....

ரீ எண்ட்ரி கெடச்சாத்தான்
பட்ட கடன் தீர்க்க முடியும்- பைனல்

எக்ஸிட் ஆயிட்டா விசா வேற
எடுக்கவேணும்....

கஃபாலத்து விசாவால
காப்பாத்த வழியில்லை - என்
குடும்பத்தில கடமைகள்
ஒண்ணுமே ஒதுங்குதில்ல....

வேலைக்கு போனாலோ
ஏஜெண்டு கஃபாலத்து - வேலைக்கு
போகலைண்ணாலும்
கஃபீலுக்கு கஃபாலத்து....

காலம் கொறய ஆச்சு
கம்பனி விசா கேட்டு - வேலை
கெடச்சாலும் முதலாளி
தரமாட்டான் றிலீசு...

வச்ச வீடும் பாதியில
மச்சான் வீடும் பாதியில
இருக்கிற நெலமையில
ஒண்ணுமே ஓடயில....

அஞ்சிக்கும் பத்துக்கும் வழி
சொல்ல கேக்குறேன் நான் - றிலீசுக்கு
அவன் ஐயாயிரம் பத்தாயிரம்
கேட்டாக்கா எங்க போவேன்....

சாப்பாடு றூமோட
ஒரு வேலை கெடச்சாலும்
அதுக்குப் பின்னால
ஆயிரம் பேர் அதுக்கு மேல.....

ஊரு ஊருண்ணு மனசெல்லாம்
கெடக்குதங்கே - நிலைமை
நெனச்சாக்கா பாரு பாருண்ணு
வேலையத்தான் தேடுதுங்கே......

நல்ல காலத்தில படிச்சிருந்தா
போதும்தான் - பாவி
என் கதி அதோகதியாயிடிச்சி...

உண்டோ இல்லியோ
உள்ள தொழில் போதுமென்று
உள்ளூரில் வேலை செய்து
உள்ளபடி வாழ்ந்திடலாம்...

எல்லாம் சேர்த்து வச்சி
கையேந்தி நிக்கிறேன் நான்
எல்லாம் வல்லவன்தான்
ஏதாதவது செய்யவேணும்.....

அன்புடன்

அபூ ஃபஹத்

Apr 7, 2012

அம்மா இங்கே வா வா.....



நீ சொல்லித்தராமல் நான்
அம்மா சொல்லவில்லை - நீ
கை நீட்டாமல் நான்
அப்பாவை அறியவில்லை....

உன் விரல் பிடிக்காமல்
முதன்தலாய் என்
பாதம் பதிக்கவில்லை - எனை
நீ வாரி அணைக்காமல்
நான் அழுகை நிறுத்தியதில்லை....

நீ தாலாட்டாமல் நான்
தூங்கியதுமில்லை - நான்
சிரிக்காமல் நீ ஆனந்தம்
கொண்டதில்லை.....

உன் கனவுகளை நான் தினம்
ஆட்கொள்ளாமலுமில்லை - உன்
நினைவுகளில் எனைத்தவிர யாரையும்
பெரிதாய் உட்படுத்தவுமில்லை....

உறவுகளில் யாரையும்
இப்போதெல்லாம் நீ
நினைப்பதே இல்லை - கண
நேரங்கள் கூட எனை நீ
காணாமல் இருப்பதுமில்லை....

நான் அழைக்கும்போதெல்லாம்
உன் அலைபேசி கண்ணீரில்
நனையாமல் இருந்ததில்லை...

நான் அழுதாலும் நீ அழுதாய்
நான் சிரித்தாலும் நீ அழுதாய்
நான் ரசித்தாலும் நீ அழுதாய்
நான் பசித்தாலும் நீ அழுதாய்

நின் கண்கள் பாடும்
கண்ணீரின் நிறங்கள்
தேடி உன் கண்ணீர் விழுந்த
சுவடுகளின் தூரம் தேடி.....

அன்புடன்

அபூ ஃபஹத்

Apr 3, 2012


ஹைக்கூ...
_______________

எச்சில் இலைகளை
சுற்றி நின்ற நாயைப்பார்த்து
எச்சக்கற நாயே என்றான்
பிச்சைக்காரன்
எச்சில்களை பொறுக்கியவாறே......

அபூ ஃபஹத்....