Jul 31, 2012

புகைப்படங்கள்.​...பொக்கிஷங்கள்....



பொக்கிஷங்கள்....புகைப்படங்கள்.​...
------------------------------------------------

ஒலைகள் கோர்த்த
என் ஒட்டடைக்குச்சியில்
மாட்டிக்கொண்டது கனமானதொரு
கண்ணாடித்துண்டு......

பரண்மேலேறி வெளியே
எடுத்துவைத்தேன் - வெறும்
கண்ணாடித்துண்டுகளல்லவை
ஏதோ ஒரு கதை சொன்னது
மரச்சட்டங்களாய் கூட்டப்பட்ட
அந்த மரியாதைமிகு கண்ணாடி.....

"ஏண்டா அதை எடுத்தே இப்போ"
எனும் என் பாட்டியின்
வார்த்தைகளில் சில்லென
உடைந்தது கண்ணாடியல்ல - என்
ஹிருதயம்தான்....

சிலந்திகளின் வாய்பிசின்கள்
தூசுகளில் கலந்து கண்ணாடியை
சாம்பல் நிறத்திலாக்கியிருந்ததில்
மழைச்சாரலைப்போல் ஆங்காங்கே
சில வெறும்புள்ளிகளும்.....

என் பிம்பம் அதில்
தெரியவே இல்லை - எனினும்
சில முந்தைய முகங்களை என்
முகத்தில் நிழலாடவைத்தது....

என் நகக்கீரல்களை அதில்
சிறிதாய் பதித்தேன் - கண்ணாடி
லேசாய் அழகறிந்தது
என் நகக்கண்ணும் அழுக்கானது....

ஏதோ ஒரு பழந்துணியில்
தண்ணீர் தோய்த்து துடைத்தபோது
கண்ணாடியினுள் சிலரின்
கண்களில் வெள்ளைப்பட்டிருந்தனர்....

கிப்பித்தலையும் முண்டா மீசையும்
முளிக்கண்களுமாய் முகங்கள் - நேற்றைய
கோலங்கள் பார்த்து
சிரித்து முடித்தபோது
யாரிவர்களென்றறியத்தோன்றயது...

என் முக பாவங்களை
எட்ட நின்று கவனித்திருப்பாள் போலும்
என் மூதாட்டி வாப்பும்மா - இதுதான்
உங்கப்பன், அப்போ சொன்னா
கேக்கமாட்டான்,
திண்டுக்கு முண்டுதான்.....

வலது பக்கத்தில மாமா
கிப்பி ஸ்டைலு - இடது பக்கம்
சித்தப்பா திமிரு புடிச்சவன்...

குறுக்கே கீறல் விழுந்திருப்பதறியாமல்
விரல் பதித்து தடவியபடியே சொன்னாள்
பின்னால கம்பீரமா
நிக்கிறதுதான் உங்க தாத்தா- கண நேரம்
அந்த கிழட்டு வெட்கத்தில் நான்
கிறங்கித்தான் போனேன்.....

கை விரல் சிராய்ந்த இரத்தம்
கண்ணாடியின் முகத்தில் - நான்
ஆ' வென்பதற்குள் விழுந்தது
இன்னும் இழமை மாறாத கண்ணீர்
வயதான விழியிலிருந்து
பல தலைமுறை தாண்டிய
எண்ணச்சிதறல்களாய்...

ஏய் என் தலைமுறையே நீ
எங்கே தேடுகிறாய் உன் அதீத
வீரத்தின் வேர்களை - உன் அபார
புத்தியின் வழித்தடத்தை...??

நீ உப்பாவைப்போல என யாரோ
சொல்லித்தெரிவதற்குள் உன்
உப்பாவைத்தெரிந்துகொள்

உன் வீட்டுப்பரண்களில்
சாம்பல்நிறக்கண்ணாடிச் சில்களி்ல்
தூங்கலாம் உனைதுளிர்த்தெழவைக்கும்
சில கேட்பாரற்றுப்போன புகைப்படங்கள்...

சில்லறைச்சாரல்களோடு
சிலந்தி வலைகளுக்குள்
அடைபட்ட புகைப்படங்கள்
பல தலைமுறை பொக்கிஷங்கள்.......

அன்புடன்

அபூ ஃபஹத்

Jul 12, 2012

அன்புக்கணவா.....


அனைவரும் மன்னிக்கவும்..

இந்த கவிதையை எவ்வளவோ சுருக்கியும் நீண்டுகொண்டேதான் போகிறது...
பெண்களின் தனிமையின் வலிகளும் அப்படித்தானோ...

 இந்த கவிதையை முழுக்க முழுக்க இணையதள சிந்துபாத்களுக்கே அற்பணிக்கிறேன்...
******************************​****************************

என் ஆசை மச்சானுக்கு,

அன்புக்கணவா
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்.....

கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
 நல்ல கவிதைகள் என்று.....

மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்.....

குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....

கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
 உன் விரல்கள் பதித்த "முத்தங்கள்"
எனும் வார்த்தையில்
வெட்கத்தை மறந்து முகம் பதிப்பேன்......

நான் இணையம் அறியாதவள்
எனத்தெரிந்தோ என்னவோ நீ
எனக்கெழுதவேண்டிய உன் வலிகளை
ஊருக்கு எழுதுகிறாய் - உனது
வலிகளைக்கூட என்னோடு பகிர மறுக்கிறாய்....

நான் படிப்பதற்காய் உன் கடிதம்
காத்திருந்த காலங்களில் நீ
பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று
பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம்
இணையப்பக்கங்களில்......

இரண்டு வருடமாய் கேட்கிறேன்
உன் கைப்பட ஒரு கவிதம் - எனக்கு
நேரமில்லை என்கிறாய் எப்போதும்
இணையதளத்தில் இருக்கும் நீ.....


யாம் பெண்கள் - எமது
தனிமை வெறும்
வார்த்தைகளால் முடிவதில்லை.....


ஒவ்வொரு முறை நீ
ஊர் வரும்போதும் நம் குழந்தை
உனை யாரோ என புதிதாய் பார்க்கிறது - தாய் நான்
 பெற்றேன் ஆனால் தந்தை நீ
வளற்கவில்லையே.....

 ஊர் வந்து நிற்கும் நாட்களிலாவது
எங்களுடன் வீட்டோடு
இருப்பாயோ நீ - உன்னோடு
வந்தவர்களுடன்
ஒன்றாய் ஊர் சுற்றுவாய்....

யாருமற்றவர்களுக்கு
எப்போதாவது கிடைக்கும் அன்னம்போல்
நீ தரும் தவணை முறையிலான
அன்பை வெறுத்துத்தான் போகிறன்
பல நேரங்களில்.....

தினம் தினம் தலையணைக்குள்
புதைந்துபோகும் எமது
தனிமையின் தாகம் - யாரையும்
அறிவிப்பதற்கு தெரியாமல்
இரவுக்கண்ணீராய்....

எழுதித்தீர்க்கும் நேரங்களையாவது
எம்மோடு களிக்கலாம் - வா
உனதும் எனதுமான தனிமையை
களைவோம்
நமக்காய் ஒரு விரகமற்ற
வாழ்க்கை காண்போம்.......


வருத்தங்களோடு
அன்பின் மனைவி....

--------அபூ ஃபஹத்______

Jul 11, 2012

கோலத்தின் காலம்.....


ஒரு ஊரில ஒரு பேயாம் என
நம்மை தூங்கவைத்த பாட்டிகளின்
பூச்சாண்டிக்கதைகள் அன்றைய
தூக்க மாத்திரைகள்.....

ஐ போண்களின் பின் துவாரத்தில்
செருகப்பட்டு நமது காதுகளோடு
இரக்கமின்றி இணைக்கப்பட்ட
ஈனம் கெட்ட இழைகள் – அதனூடே
சுலோ பாயிஸன்களாய் இசைகள்
நவீன துக்கங்கள்....

சந்துகளை கடக்கையில் சில
ஜன்னல்கள் பரிமாறிக்கொள்வதாய்
கேட்கும் நமது பெண்களின்
சத்தங்கள் அன்றைய பெண்மையின்
அழகிய இரகசியம்....

அறுத்துவிடப்பட்ட அரைப்பாவடையும்
முடிய மறுக்கும் பறமுடியும்
பெருத்துப்போன முலைக்கச்சைகளுமாய்
சாலை வீதிகள் - இன்றைய
பெண்ணீய தேசம் அலங்கோலமாய்.....

அதிகாலையில் ஆதவனை
அமைதியாய் தொழுதவளும்
அழகிய விடியலை கோலமிட்டழைத்தளும்
ஆலய மணியின் அசைவை
அறிந்தவளும் என பக்தியின் பேரருளாய்
நேற்றைய அறிவிலி பெண்டிர்...

விடியலும் தெரியா, விடிவதும் அறியா
விரல்நுனிகள்வரை விறைத்தாடும்
விதேச விடுதிகளின் இரவுகளில்
அடுத்த விநாடியையும்
அடுத்தவனின் நாடியையும்
அறுத்துத்தின்னும் இன்றைய
ஹைட்டெக் பெண்கள்.....

அரை மைல் தூரத்தில் அது
வருவதாரோ எம் பாட்டனாரோ என
வேட்டியின் கரை மடி கழைந்து
கை சேர்த்து தலை சோர்ந்து
முதல் மரியாதை செய்வான்
மானமிகு அன்றைய பேரன்கள்......

மலத்துவாரம் தெரிய காற்சட்டை,
பாற்பவர் அருவருத்து விலகும்
ஆண்மை களைந்த மீசை மளித்து
தாடி சிரைத்து தரம் கெட்ட
பாஷையில் தந்தையையும்
மதிக்க மறுக்கும் இன்றைய குபேரன்கள்....

மாறிப்போனதாம் உலகம்
மனைவி சொன்னாள் – முடிஞ்சா
ரெசமும் அவியலும் சமைத்து
வையுங்கள் நான் மாலையும்
வர லேட்டாகலாம் என்று....

ஐயாவும் அம்மாக்களும் போய்
மேடமும் சாரும் இல்லாத
இல்லங்களே இல்லை - முந்தைய
அடுக்களைச்சுவர்களின் ஆணிகளிலிருந்து
எடுத்துவீசப்பட்ட முறங்களைப்போல்
தாத்தாவும் பாட்டிகளும்...

இன்றும் நான் பனித்துளிகளை
பிரசவிக்கும் புல்நுனிகளை
அதிகாலையில் காண்கிறேன் - இன்றும்
நான் காறிருள் மேகங்களை
மழைக்கு முன் அதிசயிக்கிறேன்...

கொஞ்சமாய் சிரித்தோடும்
ஆற்றுப்படுகைகளின் அழகை
ஆனந்தமாய் களவாடுகிறேன்...

கோலம் மாறிப்போனதால்
நேற்றைய காலம் மறந்த
நமது வாழ்க்கையின் மாயைகள்...
மீண்டும் அந்தகால நினவுகள் தேடி......

Jul 9, 2012

கலைக்கப்படாத என் கரு....

கலைக்கப்படாத என் கரு....
**************************

எனது உணர்வுகளும்
அவரின் உணற்சிகளும் ஒருசேர
உருவாகிப்போனது
என்னில் அந்த கரு....

கொஞ்சமும் காலம் தாழ்த்தவோ
என் பாதங்கள் தரை பதிக்கவோ விடவில்லை
அவரும் அவர் வீட்டின் எவரும்
என் வயிற்றில் வளர்வது வாரிசாம்.....

நான் மூன்றாம் மாதம் தொட்டபோது
முதல் மருத்துவ பரிசோதனை – என்
கணவனுடன் கைத்தாங்கலாய்...

மருத்துவரின் அறையில்
பரிசோதனை என்ன சொன்னதோ
தெரியவில்லை – கொஞ்சம்
யோசிச்சிருக்கலாம் எனும் பதில்
அவரின் களை இழந்த முகத்தருகே....

மெல்ல நான்கை கடந்து ஆறாம்
மாதத்தில் அடுத்த சோதனை -கணவன்
நிறுத்திய இடத்தை மாமியார் தொடர்ந்தார்
கூடவே பதிலையும்தான்
அப்பவே சொன்னேனே என்று.....

ஏழை நான் ஏழை எட்டியபோது
எல்லாம் மாறிப்போனது - கட்டியவனோ
கை கழுவத்தயாரானான், மாமியாரோ
தலைமுழுகத்தயாரானார்...

எட்டி எட்டி எட்டை அடைந்தபோது
என்னை பெற்றெடுத்தவள் என்னருகில்,
என்ன தவம் செய்தனோ என் பிஞ்சு
யாருமற்றுப்போகிறதே என.....

பத்தில் பாதம் பதிக்க என்னில்
பெத்து வீழ்ந்தான் அவன் பேரழகாய்
பெயர் சொல்லக்கூட யாருமற்றுப்போய்..

கருவிலே கலைத்திருக்கலாமோ
யாருமற்றவன் எனும் விலாசம்
கழைந்திருக்கலாமோ – பேதை நான்
பிதற்றத்தான் செய்தேன்....
கால்களை உதைத்து குட்டிக் கண்
சிமிட்டி எனை நோக்கிய பார்வை
இதோ அவனின் இருபத்தைந்தாம்
வயதிலும் அதே பார்வையில்....

பைத்தியம் என்பர் அவனை புத்தி
பேதலித்தவன் என்பர் – என்
வயிற்றுப்பிள்ளை அவன் பார்வையில்
நான் ஏதும் குறை காணவில்லை
யாரையும் அவன்
குறைத்துப்பார்க்கவும் இல்லை....

ஏ மானுடமே இப்பூமியில்
நீ பிறந்து வீழ யாரைக்கேட்டாய் – என்
பிறப்பை மறுக்க யாரை கேட்கிறாய்,
அறிவிழந்தவனோ நான்
அறைகூவத்தெரியவில்லை
உனக்கறிவீனம் என்று.....

என் கலைக்கப்படாத
கருவின் கேள்விகள் - இங்கே
கலைக்கப்படும் கருக்களுக்காய்....

கண்ணீர்த்துளிகளோடு

அபூ ஃபஹத்....

Jul 8, 2012

வரன் தட்சனை.....


வரன் தட்சனை

***********************************

வந்த விபரம் சொல்லுங்கோ

என சத்தமாய் கேட்டது – பையனின்

உப்பாவாம் குடும்பத்தில் காரணப்பாடாம்...


எம்மகளுக்கு உங்க பையனை

நிச்சயம் பண்ண வந்தோம் – ஒரு

பணயக்கைதியைப்போல்

பெண்ணைப்பெற்றவனின்

ஒசை குறைந்த பதில்.....


குடுக்கல் வாங்கல்கள் எல்லாம்

பேசி முடிச்சாச்சா – மாப்பிள்ளையின்

தாய் மாமானாம் ஏலமிடப்படும்முன்

மணியடிப்பவன் போல்.....


எங்கட்ட உள்ளதை

புள்ளைக்கு குடுப்போம் – பெரிதாய்

பேச்சுக்கு குறைவில்லாத

பெண்ணின் குட்டியாப்பாக்கள் கூட்டத்தில்

மானம் காக்க வெறும் வாய் வார்த்தைகளாய்....


றேடோ வாட்சும் தங்க செயினும்

பெண்ணின் தம்பியிடம் – வாங்கிய

அடி மாட்டின் கழுத்தில் கட்டி

இழுத்துச்செல்ல காத்திருக்கும்

மாட்டிடையன்போல்....


கல்யாணத்தண்ணக்கி காலைல

மாப்பிள்ளைக்கு கார் வந்திருமில்ல – சைக்கிளுக்கே

போக்கத்தப்பயலுக்கு

சான்ட்ரோ கேக்குதோ என

யாரோ முனகியது கேட்டது....


50 பவுனும் 8 சென்ட் மனையும்

அதில் ஒரு வீடும் - ஏற்கெனவே

பேசினதில் மாற்றமில்லை,

பரோக்கர் பயலின் ஓசை

பல முறை கேட்டது.......


பெண்ணைப்பெற்றவன்

திண்ணையும் தெருவும்தான் – இதோ

நமது தெருக்களில்

அநாதை தந்தைகள்......


ஏய் ரோஷமில்லா இளைஞனே

நீ விலைபேசப்படுகிறாய் – சில

விலைபோகாத அடிமாடுகளைப்போல்....


ஏய் மானம் கெட்டவனே

மரித்துப்போனதோ உன் மனிதம் – சிரைத்த

மீசைக்குள் அடங்கிப்போனதோ

உனது ஆண்மை.....


கந்தக பூமிகளில் கால் பதித்து

கரைத்த எமது இரத்த நாளங்கள்

மின்னித்தீற்கிறது உன்

கைகளிலும் கழுத்திலும்.....


ஆண் மகனோ நீ

வரதட்சனை வேண்டாம் எனச்சொல்

ஆண்மை கொண்டவனாய் நெஞ்சை

நிமிர்த்தி நில்..................