கலைக்கப்படாத என் கரு....
**************************
எனது உணர்வுகளும்
அவரின் உணற்சிகளும் ஒருசேர
உருவாகிப்போனது
என்னில் அந்த கரு....
கொஞ்சமும் காலம் தாழ்த்தவோ
என் பாதங்கள் தரை பதிக்கவோ விடவில்லை
அவரும் அவர் வீட்டின் எவரும்
என் வயிற்றில் வளர்வது வாரிசாம்.....
நான் மூன்றாம் மாதம் தொட்டபோது
முதல் மருத்துவ பரிசோதனை – என்
கணவனுடன் கைத்தாங்கலாய்...
மருத்துவரின் அறையில்
பரிசோதனை என்ன சொன்னதோ
தெரியவில்லை – கொஞ்சம்
யோசிச்சிருக்கலாம் எனும் பதில்
அவரின் களை இழந்த முகத்தருகே....
மெல்ல நான்கை கடந்து ஆறாம்
மாதத்தில் அடுத்த சோதனை -கணவன்
நிறுத்திய இடத்தை மாமியார் தொடர்ந்தார்
கூடவே பதிலையும்தான்
அப்பவே சொன்னேனே என்று.....
ஏழை நான் ஏழை எட்டியபோது
எல்லாம் மாறிப்போனது - கட்டியவனோ
கை கழுவத்தயாரானான், மாமியாரோ
தலைமுழுகத்தயாரானார்...
எட்டி எட்டி எட்டை அடைந்தபோது
என்னை பெற்றெடுத்தவள் என்னருகில்,
என்ன தவம் செய்தனோ என் பிஞ்சு
யாருமற்றுப்போகிறதே என.....
பத்தில் பாதம் பதிக்க என்னில்
பெத்து வீழ்ந்தான் அவன் பேரழகாய்
பெயர் சொல்லக்கூட யாருமற்றுப்போய்..
கருவிலே கலைத்திருக்கலாமோ
யாருமற்றவன் எனும் விலாசம்
கழைந்திருக்கலாமோ – பேதை நான்
பிதற்றத்தான் செய்தேன்....
கால்களை உதைத்து குட்டிக் கண்
சிமிட்டி எனை நோக்கிய பார்வை
இதோ அவனின் இருபத்தைந்தாம்
வயதிலும் அதே பார்வையில்....
பைத்தியம் என்பர் அவனை புத்தி
பேதலித்தவன் என்பர் – என்
வயிற்றுப்பிள்ளை அவன் பார்வையில்
நான் ஏதும் குறை காணவில்லை
யாரையும் அவன்
குறைத்துப்பார்க்கவும் இல்லை....
ஏ மானுடமே இப்பூமியில்
நீ பிறந்து வீழ யாரைக்கேட்டாய் – என்
பிறப்பை மறுக்க யாரை கேட்கிறாய்,
அறிவிழந்தவனோ நான்
அறைகூவத்தெரியவில்லை
உனக்கறிவீனம் என்று.....
என் கலைக்கப்படாத
கருவின் கேள்விகள் - இங்கே
கலைக்கப்படும் கருக்களுக்காய்....
கண்ணீர்த்துளிகளோடு
அபூ ஃபஹத்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...