Feb 20, 2014


சூரிய வெளிச்சத்தில்
மட்டுமே கண்ணயர்கிறேன்
இரவுகள் ஒருவேளை
என் வாழ்க்கையை
இருட்டாக்கக்கூடும்....

என் நண்பர்கள் ஆங்கே
வேலிகளில் மண் குன்றுகளில்
மறைந்திருக்கக்கூடும் - நான்
தூங்குதற்காகவல்ல
என்போன்ற பலரை
மரணத்தினின்றும்
தற்காலிகமாய் காப்பதற்காக ...


நாளை இந்த கல்லைத்தான்
உடைத்து எறியப்போகி்றேன் - என்
தேசம் கொதிக்கும் சுதந்திரத்தை
இதினின்று எய்தும் ஏதோ
ஒரு கல் பெற்றுத்தரலாம்...

எனது உடை அழகானது
என் தந்தையைப்போலவே
என் தாயின் அன்பைப்போலவே  - அவர்கள்
எனக்கு உடுத்திய அன்றே
பீரங்கி ரவைகள் துளைத்து
இறந்துபோயினர்
அவர்களின் உடைகளில்
பல இடங்களில் ஓட்டைகள்..


இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
எனது அயர்வில் சற்றும்
நிம்மதியில்லை - இருப்பினும்
என் கனவுகளில் யூப்ரடிஸ் நதிக்கரை
வந்து சொல்கிறது....

ஆங்கே எனக்கான இடத்தில்
கற்களை மடியில் கட்டி
யாரோ ஒரு சிறுவன்
நிற்கக்கூடும் - அவன்
மரணித்துவிடுவானோ எனும்
பயத்தின் வலிகள் இமைகளை
திறந்துவிடுறது....


எந்த முயற்சியும் எங்களுக்கு
அயர்வை தரவில்லை - இறுதி வெற்றி
என்னைப்போலவேஅழகானதொரு
பூவாய் பூக்கும்
அழுக்கு படிந்த மனங்களில்
அழகு மலரும்...


தாய் மடிகள் இங்கே
இல்லவேயில்லை - வெறும்
கற்களாலான படுக்கைகள் மட்டுமே
கனவுகள் முழுக்க
என் தேசத்தின் வெற்றி பற்றியதாக
மட்டுமே இருக்கும்....

எங்கள் அங்காடிகளில்
தலையணைகளோ
பட்டுமெத்தைகளோ இப்போது
விற்பதற்கில்லை - இழந்த
தலைமுறையி்ன் முகங்கள்
மட்டுமே உள்ளன....

நான் தூங்கவேண்டும்....
அடுத்த முறை நானாகவும்
இருக்கலாம் - வேலிகளின்
குறுக்கே நிற்பதற்காக....



No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...