Oct 19, 2012

அன்பின் மாமாவுக்கு....


அன்பின் மாமாவுக்கு....


ஆயிரம் கனவுகளும் அடங்க மறுக்கும்
ஆசைகளோடும் திறந்து வைத்து
காத்திருக்கிறேன் - நான்
கடல் தாண்டி கொணர்ந்த
எல். இ . டி டெலிவிஷனை....

அவசர தேவைக்காய்
வாங்கிச்சென்றீர்களாம் - எனது
எமர்ஜென்ஸி விளக்கை,
எங்கள் வீட்டு இரவுகள்
பற்றிய எந்த விவஸ்தையுமில்லாமல்....

மிக்ஸியும் கிரைண்டரும் ஃபிரிட்ஜும்
இங்கே அனாதையாய் இருக்கிறது -திருமணத்தின்போது
எமக்கு நீங்கள் கொடுத்த சீர் வரிசையாம்,
நெஞ்சில் ஈரமிருந்தால் ஒன்றை
மறந்திருக்கமாட்டீர்கள்...

உங்கள் நண்பர் கிருஷ்ணன்
திருமணச்சடங்கில் மிதிப்பதற்காய்
இரக்கமின்றி எடுத்துச்சென்றீர்களாம் - உங்கள்
சீர் முழுவதும் தருகிறேன் என் அம்மியை
தந்துவிடுங்கள் மம்மி கேட்கிறார்கள்....

இரண்டு நாட்களாய் என்
வீட்டு இன்வெர்ட்ருக்கு சக்றாத்து - பேட்டரிக்கு
ஊற்றும் தண்ணீர் பாட்டிலை காணவில்லை
உங்கள் பேத்தி சொன்னாள் நீங்கள்தான்
நேற்று நீங்கள்தான் கையில் வைத்திருந்ததாய்...

""நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்""
நோயே வராத நீங்கள் அடிக்கடி
சொல்லும் வாக்கு - இப்போதெல்லாம்
அரசு மருத்துவமனைகளில் உங்கள்
இரவுகளை களிக்கிறீர்களாம்...

இப்போதெல்லாம் உங்கள் மகள்
அழுவதே இல்லை -தென்றலும்
மெட்டி ஒலியும் குங்குமப்பூவும்
லோட் செட்டிங் சுனாமியி்ல்
அடித்துச்சென்றதால்...

தொண்டை அடைத்து
விக்கலில் சிக்கி சாகும் தருவாயில் கூட
என் அழைப்பை காதில் எடுப்பதில்லை - ஆனால்
இப்போதெல்லாம் எப்போதும் என்
அருகிலேயே நிற்கிறாள்...

நேற்றிரவு மின்னலைப்பார்த்து
நட்சத்திரம் ஒளி்ர்கிறது என்கிறாள் - வானத்தை
புதிதாகப்பார்ப்பதால்
குழம்பிப்போயிருக்கலாம், நிலவைப்பார்த்து
சூரியன் என்கிறாள்...

அடுத்தமுறை என் வீட்டு வாசல்
மிதிக்கும்போது ஞாபகம் இருக்கட்டும் - அம்மியும்
ஆட்டுரலும், மண் சட்டியும், சூட்டடுப்பும்
கதம்பையும் கொதும்பும் கூடவே
கொஞ்சம் தீப்பெட்டியும் மண்ணெண்ணையும்
சீராகவோ வரிசையாகவோ கொண்டு வரவும்...

பதிலுக்கு நேற்றைய மிக்ஸியும்
கிரைண்டரும் கியாஸ் அடுப்பும்
ஃபிரிட்ஜும் திருப்பி அனுப்புகிறேன்....

எங்காவது மின்சாரம் இருக்கும்
இடம் கண்டால் ஒரு புகைப்படம்
எடுத்து பிரேம் போட்டு
கொண்டு வரவும் - நமது
அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாக
வைத்துச்செல்லலாம்...


அன்புடன்

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...