Jul 6, 2013

வனாந்தரம்.........



இருட்டும் வெளிச்சமும்
ஒரு சேர முடிங்கிக்கிடக்கிறது
எமது அறைகளுக்குள் - நாங்கள்
விளக்கேற்றி வைத்த 
வாழ்க்கைகள் எப்போதும்

வெளிச்சத்தில் இருக்கட்டும்.....

கட்டில்களுக்கிடையே
இடைவெளிகள் - எங்கள்
மனங்களுக்கிடையில் 
எப்போதும் இல்லை ஏனெனில்
எங்களின் ஜாதிக்கு ஒரே பெயர்...

என் வீட்டு வாசலில்
ஏதோ ஒரு யாசகன் - அரிசி
தருவதற்காய் முன்வாசல்
வந்தபோது என்னவர் 
கோபப்படுவார் அன்னிய 
ஆண் முன்
வருதல் நன்றல்ல....

இதோ என் பக்கத்து
இருக்கையில் யாரோ
கைவிட்ட ஒருவரின்
முகத்தில் இரண்டு சாயல்கள்
ஒன்று கணவன் 
மற்றொன்று யாசகன்....

என்னவோ தெரியவில்லை
வீட்டுப்படிகள் மிதித்து
ஆண்டுகள் பலவானபோதும்
இன்னும் கண்களில்
எம் வயிற்றுப்பிள்ளைகளின்
அழகிய வாழ்க்கை ஓடுகிறது....

எப்போதெல்லாம் என்
சிரிக்கிறோமோ அப்போதெல்லாம்
எங்கள் இதயத்தில் வந்துபோவதும்
நிறைந்து நிற்பதுமான
என் குழந்தைகளின் ஏதோ
சில பல நினைவுகள்தான்....

கட்டில்கள் சாட்சி 
சொல்லவா போகிறது - என்
ஆற்றாமைக்கு யார் காரணமென்று
ஆனால் என் வீட்டு வாசற்படிகள்
அவ்வப்போது சூழ்ச்சி
செய்யாமல் இருக்கவேண்டும்
என் பிள்ளைகளை.....

எம் வாழ்க்கையை 
காலம் மாய்த்துவிட்டதாய்
சொன்னால் அது பொய்
எமக்கேயான இவ்வாழ்க்கை
எந்த நிலையிலும் என் 
பிள்ளைகளுக்கு வேண்டாம்...

கொடிது.. கொடிது...
யாருமற்ற சாகா வரம்
கொடிது....

ஒருநாள் வருவான்
ஒரு பொழுது வருவாள்
என மகளையும் மகனையும்
தேடும் நாங்கள்தான் கொடிது...

இனிது.. இனிது
இப்போதைய வாழ்க்கை
இனிது...தனிமையினும்
இது இனிது இனிது...

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...