நிஜங்களை பின்தொடர்ந்து
செல்கையில் நான்
வெறும் நிழலாய் மிச்சமாகிறேன்...
சில நேரங்களில் கடும்சொல் எனும்
நெருப்புக்கவளங்களை உண்கிறேன் - ஆயினும்
உண்டு முடித்தபின் உள் நீற்றல்களைத்தாங்கி
வெளியே சிரிக்கிறேன்....
கரைகளினின்றும்
தூண்டிலிடுபவனை
நான் பயப்படுவதில்லை - எனினும்
தூண்டிலில் கோர்க்கப்படிருப்பது
என் மரணம் என்பதை
நான் மறந்துபோகிறேன்...
என் இறக்கைகளின்
மீதான நம்பிக்கையை உதாசீனம்
செய்துவிட்டு காற்று என்னை
சுமந்து செல்வதாய் எப்போதும்
நினைத்துக்கொள்கிறேன்....
தண்ணீர் தேசத்தில்
மூழ்கி முத்தெடுக்கும்போது
என்னிலிருந்தும் வெளிப்படும்
கண்ணீரை கிஞ்சிட்டும் அறிந்ததாய்
காண்பிப்பதில்லை முத்துக்காய்
வெளியே காத்திருக்கும் கூட்டம்....
பிரபஞ்சம் பெரிது
முன்பு எனக்காய் சேர்த்துவைத்த
பரிவும் பாசமும் நிறையவே
களவாடப்பட்டிருக்கிறது
சில ஈனம் கெட்டவர்களால்....
காலூன்றி நடப்பவனின்
வேகத்தை சகிக்காமல்
பொய்யாய் புகழூட்டி
நொண்டியாக்கிவிடும்
மனிதக்கைத்தடிகள்
கடைசியில் ஆணிவேரை
பிடுங்கிவிடுகின்றன....
என் மீது யாரும் வெறுப்பை
உமிழும்போதும் நான்
வெறுப்பை மட்டுமே வெறுக்கிறேன்
உமிழ்பவனை
வெறுப்பதே இல்லை.....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...