Jun 27, 2013

சோற்றுப்பருக்கைகள்.....

சோற்றுப்பருக்கைகள்..
*********************

வாங்கிய ஒரு பொட்டலம்
சோற்றில் இருவர்
உண்டபின்னும் மிச்சமானது
ஒரு கைப்பிடி சோறு.....

இலைகளை குட்டைக்குள்
வீசும்முன் அதில் 
ஒட்டியிருந்த எச்சில் சோற்றையும் 
சேர்த்துக்கொண்டேன் 
மீதமிருந்த சாதத்தோடு.....

ஐந்தாவது மாடியில்
ஏது கொல்லை - சதா
தொல்லைகளாய் ஆகிப்போன
கண்ணாடி ஜன்னல்களினூடே 
சிறகடித்து உறுமுகிறது
சில மாடப்புறாக்கள்......

ஜன்னல் திறக்கையில்
பயத்தின் உச்சம் கொள்கின்றன
அழகு புறாக்கள் - இரண்டோ
மூன்றோ வட்டமிட்டு மீண்டும்
வந்தமர்கிறது அப்புறத்து
திறக்காத ஜன்னலின் கைவரியில்......

என் கையிலிருந்த
தட்டிலிருந்து தட்டப்பட்டது
சோற்றுக்கவழம் - நேற்று நான்
கொட்டிய சோற்றை சுத்தமாய் 
தின்று முடித்த அதே இடத்தில்....

மீண்டும் சில வட்டமிட்டு
வந்தமர்ந்தது கைவரியில்
சோற்றுக்கவளத்தின் அருகில் 
என் ஜன்னல் பூட்டப்பட்டதை
உறுதி செய்துகொண்டு.....

ஊரில் ஒரு நாள்
யாரோ சில கிழட்டு
பிச்சைக்காரர்கள் எச்சில்
இலைகளை துளாவுவதை
நானும் பலரோடு வேடிக்கை
பார்த்து குமட்டிக்கொண்டேன்....


ஆங்கே சாக்கடைக்குள்
காலூன்றி சோற்றுப்பருக்கைகள்
பொறுக்கிய கிழடுகளின்
முகத்தில் வரையப்பட்டிருந்தது
துரத்தப்பட்டதின் கோப வரிகள்....

வீட்டு முற்றத்தில் யாரோ
பழையசாதம் கேட்டனர் - அதுவும்
அந்நேரப்பசி அடங்க
கிடைக்காத சோற்றுப்பருக்கையின்
தேவையின் வலிகள்...

மானுடம் வழி பிழைக்கிறது
சில பலநேரங்களில் - யாசிப்பவனின்
இதயங்களில் வேறு என்ன
புதிதாய் இருந்துவிடப்போகிறது
அடுத்த வேளை உணவின் 
தேடுதல்பற்றிய எண்ணம் தவிர....


ஓ மானுடமே..!! 

உன் பானைக்குள் 
உனக்கும் உன்னவர்களுக்கும்
தவிர ஒரு கவளம் 
சோற்றை மீதம் வை - யாரோ
ஒருவரின் தந்தையோ
நீ அறியாத தாயோ கூட
அந்நேரம் வரலாம்

சில சோற்றுப்பருக்கைகளுக்காய்....


*****



No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...