நேற்றில் முடியாத பயணம்.....
************************
என் பயணம் மீண்டும்
தொடர்கிறது - உடைசல்களும்
கிழிசல்களுமாய் தெரிந்த
என் பாதைகளை நானே
செப்பனிட்டேன்....
மீண்டும் மீண்டும்
விரிசல்களுக்கான வரைகோடுகளின்
சில சாத்தியக்கூறுகள்
என் பாதையில் பரிணமிக்காது
போகவேண்டும்....
வெண் புகை போல் என்
விழிகளை தாண்டிச்சென்றது
புரைகள் அவ்வப்போது - நான்
ஒருபோதும் என் கண்களை
மூடிக்கொள்ளவில்லை
நல்லவை நோக்கி
விழிகளை விலக்கிக்கொண்டேன்
ஆகாததை அநாதையாய்
அலட்சியம் செய்தேன்...
கேட்பதற்கான செவிப்புலனை
கேள்விகளுக்காய் மட்டும்
திறக்கவில்லை - சில
வேள்விகளுக்காகவும்
புறக்கணித்த கேள்விகளை
அடிக்கடி கேட்டுக்கொண்டேன்...
வாசித்து முடித்தபின்தான்
மனம் சாந்தமானது - இன்று
இத்தனை வாசித்ததில்
எத்தனை வசனங்கள்
உளபூர்வமாக இதுவரை
விவாதிக்காத வசனங்கள் என்று......
நாவை அடக்கிவைப்பதற்காய்
நான் ஒன்றும் வாய் மூடி
இருந்துவிடவில்லை - நாயன்
நவின்றதை நாள்தோறும்
மொழி பெயர்ந்து படித்ததில்
நான் நா நடுங்கினேன்....
இப்போதும் பயப்படுகிறேன்
நான் பாதுகாத்துக்கோர்த்த
மாலைகளினின்றும் இனி
ஒருபோதும் என் முத்துக்கள்
சிதறாதிருக்கவேண்டும்...
என் கால்கள் இன்று லேசாய்
பதறித்துடிக்கிறது - என்
பாதைகளில் விரல் நகங்கள்போல்
அகோரமாய் நீண்டு நிற்கும்
பட்ட மரக்கொம்புகளில் என்
மாலைகள் மாட்டிக்கொள்ளாமல்
இருத்தல் வேண்டும்...
என்னால் இயன்றவரை
நானே பாதுகாத்தேன்
நானே சேர்த்து வைத்தேன்
நானே ஒப்புவித்தேன் உன்னிடம்
இறைவா..!!!
உன்னிடம் யாசிப்பதற்கா
யோசிப்பேன் நான்
என் இறைவா- உன்
இசைவுகளுக்காய்
இன்னும் இன்னும்
யாசித்துக்கொண்டே
என் பயணம் மீண்டும்
தொடர்கிறது - என்
பாதைகளை பாதுகாப்பாயாக....
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...