நேற்றும் வானம்
இருண்டே இருந்தது – கடல்
அலைகளில் புதிதாய் வேகம் எதுவும்
இருக்கவில்லை முன்பு போலவே
அமைதியாய் இருந்தது...
கூண்டுகள் இல்லாத வளைகுடா
புறாக்கள் தங்குவதற்கென புதிதாய்
இடம் தேடவில்லை -யாரும்
கண்டு கொள்ளவில்லை என
வருத்தங்களும் அவைகளில் தெரியவில்லை......
கார் மேகங்களின் கரைகளில்
சில வெள்ளி மின்னல்கள் - கண்களை
காவு வாங்குமோ என
பயந்து போன மின்னல் மனிதர்கள்....
ஒவியர்களை வியக்கவைத்தன
நீலக்கடலில் வீழ்ந்து நிடந்த
மழை மேகங்கள் – தூரிகைகள்
சமைக்காமலே நொடிப்பொழுதில்
உருமாறின முகிலோவியங்கள்.....
வெள்ளிக்கிண்ணங்களில் விழுந்து
தெறிக்கும் முத்துக்களைப்போல்
சில்லென ஒலியுடன் சாலைகளில்
விழுந்து காணாமல் போயின மழைத்துளிகள்...
ஆளரவமின்றி வெறிச்சோடிப்போன
நகரத்தின் சாலையோரங்கள் – மணித்துளியாய்
விழுந்த மழைத்துளிகளை ஈவிரக்கமின்றி
மிதித்துச்சென்றன வாகனங்கள்....
ஏதோ சில உயரங்களில்
என் வீட்டு ஜன்னல்கள் – என்
கை தாண்டி விழுந்த ஒற்றை
மழைத்துளியை யாரோ கைநீட்டி
தாங்கினர் கீழ் வீட்டு ஜன்னலில்....
யார் முகத்திலும் அழுகையோ
வருத்தங்களோ தெரியவில்லை
மழைநீரைத்தவிர – யார் காதுகளிலும்
கைபேசிகள் இல்லாதாலோ என்னவோ
காரணம் புரியவில்லை....
பனித்துளிகளைப்போல் இறகுகளின்
நுனிகளில் தொங்கின மழைத்துளிகள் - புற்கள்
இல்லாததால் புறாக்கள் சுமந்தன பொன் துளிகளை....
கம்பளிக்குள் முகம் புதைத்து
கனவுகளை சூடேற்றிக்கொண்டே
இருக்கிறேன் நாளைய
பனி படர்ந்த விடியலைத்தேடி.....
அன்புடன்
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...