Dec 7, 2012

ஞாபகங்கள்.....




25 வருடங்களுக்கு முன் ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் நேரம் மாலை 4 மணியிருக்கும், வேகமாக ஓடி எனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் பெரியவர் ஒருவரின் சைக்கிளின் வேகத்தோடு போட்டிபோட்டு ஓட முயற்சித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது என் பாதங்கள் ஏதோ ஒன்றை மிதித்துச் செல்கிறது, என்னை அறியாமலே எனது வேகம் குறைந்தது, ஏதேதோ மனக்குழப்பங்கள், ஓட்டம் நின்று சிறிது நேரம் நடக்கத்துவங்கியபோது மீண்டும் அதே ஞாபகம், மனம் ஒரே இடத்தில் நின்றது. திரும்பிப்போகச்சொன்னது. 

என் கண்களை கடந்துபோனதாக நான் நினைத்த அந்த பொருள் அதே இடத்தில் கிடந்தது, மனம் கேட்கவில்லை, ஏதோ ஒரு பாவத்தை செய்துவிட்ட ஒரு பயம், அதனை மிதித்ததால் அல்லாஹ் பாவம் கெடக்கும் என மனதில் நினைத்து அந்த சிறு துண்டு பேப்பரை எடுத்து கண்களில் ஒற்றி அப்படியே அறிவியல் புத்தகத்தின் நடுவில் வைத்து வீட்டிற்கு வந்து அப்படியே வைத்துவிட்டேன். அதற்குப்பின் தினமும் புத்தகத்தை கையில் எடு்ததாலும் அந்த பேப்பரை மட்டும் களைய மனமில்லை. 

அன்றைக்கு அந்த சிறிய வயதில் என் மனதில் ஏற்படுத்திய சில சிறிய சலனங்கள் அந்த பேப்பரை என் அறிவியல் புத்தகத்தை விட்டு அகற்ற மனம் வராமல் அப்படியே வைக்கச்சொல்லிவிட்டது
அதனை எடு்த்து களையவும் முடியவில்லை, எரிக்க நினைத்தேன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே பல பாதங்கள் பட்டு சிதிலங்களாக இருந்த அந்த சிறு துண்டு பேப்பரில் நான் கண்டு பயந்த விஷயம் அதில் அரபி எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த ஓரிரு வரிகளின் துண்டுகள்...

ஒரு 10 வருடம் கழிந்தபின் எப்போதோ ஒரு நாள் பழைய பொருட்களை எல்லாம் ஒதுக்கி எரிப்பதற்காக என் உம்மா எடுத்து குப்பையில் போடும்போது எனது 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகம் அதன் ஓரங்கள் சிதிலமாகி ஆங்காங்கே நீள பூச்சிகள் ஓட்டைகள் போட்டு வால்பூச்சிகள் ஓடிக்கொண்டிருக்க நான் படித்த புத்தகம் என்பதையே மறந்து அந்த மஞ்சள் நிற புத்தகத்தின் அட்டையை திறந்தேன், அப்படியே ஒரு பக்கமாய் பிடித்து வேகமாக பக்கங்களை ஓடவிட்டேன், எந்த உதிரி தாள்களோ இல்லாத அந்த புத்தகத்தில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் ஏதோ புதிதாக கண்களுக்க தென்பட நான் அந்த பக்கத்தை அடைவதற்காக மெதுவாக ஒவ்வொரு பக்கமாக மறித்து கடைசியில் அந்த நடுப்பக்கத்தை அடைந்தபோது நான் கண்டது சாதாரணமான ஒரு சிறு துண்டு அரபி பேப்பரை அல்ல. 

அதனை நான் கண்டெடுத்த தருணம், அந்த நேரத்தில் என் மனது பட்ட அவஸ்த்தை, அதன் பின் அதனை தவிற்கவும் முடியாமல், எரிக்கவும் முடியாமல், களையவும் முடியாமல், யாரிடமும் சொல்லாமலுமாக நான் பயந்த அந்த நேரத்தை, அந்த காலத்தை என ஒவ்வொன்றும் புதிரான, ஆச்சர்யமான அனுபவங்களாகவே இருந்தது.

ஆனால் நான் எடுத்துவைத்தபோது அதனை ஒரு குர்ஆனின் ஏதோ ஒரு பக்கத்தின் ஒரு மூலை என்றே நினைத்திருந்தேன். அதனால் ஏற்பட்டவையே அந்த அனுபவங்கள்...

அதனை மீண்டும் கண்டெடுத்த அன்று அது குர்ஆன் எழுத்துக்கள் இல்லை என்று தெரிந்து அது ஒரு அரபி பத்திரிகையின் சிரு துண்டு என்று தெரிந்தபோது கொஞ்சம் என்னை நினைத்து சிரித்தாலும், அந்த நேரமும் எனக்கொரு பயம் இருந்தது..

மீண்டும் கையில் கிடைத்தபோது ஒருவேளை அது குர்ஆனின் ஏதோ ஒரு பக்கத்தின் ஒரு சிறு துண்டு தாளாக இருந்திருந்தால்....???

அன்புடன்

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...