Dec 30, 2012

முகாரி பாடும் முகவரிகள்......



முகாரி பாடும் முகவரிகள்
******************************

பழைய வீட்டு காதர் குஞ்ஞியின்
மகன் அசங்கண்ணு
காலேஜ்ல படிச்சவன்- பேரு
படிப்புக்கேத்தமாதிரி இல்லைண்ணு
மாத்தியிருக்கானாம் ஹாசன். கே !!.....

சாப்புக்கடை மோலாளி
மைதீங்கண்ணு  புள்ளைக்கு
வாப்பாவின் பெயரை  வச்சாராம் -மம்மாலி
மம்மாலிண்ணு எல்லாரும் கூப்பிடும்போ
கேவலமா இருக்கும்மா.....


தாத்தா பேரு பேரனுக்கு
கொத்தனார் வெள்ளையன் பெத்த
புள்ளைக்கு கிருட்டினண்ணு
வாய் நெறய கூப்பிட்டாரு - கழிஞ்ச வருஷம்
டாட்டாவுல வேலைண்ணு போனான்
""கிருஷ்"" மட்டும்தான் இப்போ இருக்கு.....

தோப்புக்கடை அடிமைக்கண்ணு மகன்
சேமக்கண்ணுக்கு ரெண்டு பயலுவோ - பேரு வக்க
மறந்திட்டானோ என்னமோ
வாயில நுழையாத தஸ்ஸு
புஸ்ஸுண்ணு கூப்பிடுறான்
வெளிநாட்டில பொறந்ததாதம்.....


தவமிருந்து பெத்த புள்ளையாம்
சேசடிமைண்ணு பேரு வச்சார்
தாத்தா குருசு மிக்கேல் - செத்து
பத்து வருஷமாச்சிண்ணாலும் திட்டுறத
நிறுத்தவே இல்லை
பேர மாத்தின பேரப்புள்ள ஜேக்.....

சிவப்பு நிறமும் நல்ல ஒசரமும்
அவங்க மாமா மாதிரி வரணும்- வீரத்துக்கு
பேரு போன குடும்பமில்ல
மீராசாண்ணு அவரு
பேரு வய்யி புள்ளக்கி.....

ஊரும் பேரும் கூடி
குடும்பம் ஒண்ணா சேந்து
பாத்து பாத்து வச்சபேரு - ஒத்தை
நேர் காணலில் வீசப்படுகிறது
பட்டணத்து ஒடைகளில்....

காலம் கணக்கு சொல்கிறது
காணாமல் போன
நேற்றைய முகவரிகள் பற்றி - தினம்
தினம் மாற்றப்படுவது
வெறும் பெயர்கள் மட்டுமல்ல
சமூகங்களின் அடையாளங்களும்தான்....

மாற்றப்படும் பெயர்களால்
பெரிதாய் மாற்றங்கள் வந்ததாய்
நான் காணவில்லை - புதிதாய்
நவீனத்தின் வயிற்றில் பிறக்கிறது
மூட நம்பிக்கைகள்....


புதிய தலைமுறைகளை
அழைப்பதற்கு கண்ணுவும் பிள்ளையும்
குஞ்ஞியும் இல்லாமல் போகலாம் - யாரென
அறியத்தருவதற்காய் சாதா
ஒலித்துக்கொண்டே இருக்கும்
தலைமுறைகள் தாண்டி நம் முகவரிகள்.....


அன்புடன்

பீர் முஹம்மது.... (அபூ ஃபஹத்)A






No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...