Dec 28, 2012

மின்னஞ்சல்......


அன்பின் மனைவிக்கு,
ஆசை மகளுக்கு,
என் உயிர் அம்மாவுக்கு என
உருகிய வரிகளோடு துவங்கும்
நேற்றைய தபால்கள்.....

ஹாய், டியர், மிஸ்டர்
என உறவுகளையும் உணர்வுகளையும்
உருமாற்றிய இன்றைய
மின்னஞ்சல்கள்.....

வார்த்தைகளால் வாய்மொழிய
இயலாத வாழ்க்கையின்
வலிகளை வரிகளில் விவரிக்கும்
முந்தைய தபால்கள் அஞ்சல்...

இதயங்களினின்றும் பிறக்காத
விரல் நுனிகள் வெளிப்படுத்தும்
துரித வார்த்தைகளில்
குறுகிப்போயிருக்கிறது மின்னஞ்சல்கள்...

தபால்களின் நீண்ட
எதிர்பார்ப்புகள் தந்தவை
காத்திருப்பின் சுகமும்
கனவுகளின் தாகமும்....

விரல் சொடுக்கும் நேரத்தில்
சென்று திரும்பும் மின்னஞ்சல்களில்
ஈரமிருப்பதில்லை - வேகத்தில்
வரும் வரிகளில் வெறுக்கும்படியான
அவஸ்த்தைகள் மட்டுமே அதிகமாய்...

கடல்களும் கண்டங்களும்
தாண்டி வரும் தபால்களில்
தான் சார்ந்த பொய்கள் அதிகமாய்
விளம்புவதில்லை யாரும் - கடிதங்களை
எதிர்பார்த்திருக்கும் இதயங்கள்
வலிக்கும்படியாய்....

தினம் தினம் முகம் பார்க்கும்
கண்ணாடியில் நின்று
நான் அவனில்லை என தன்னையே
ஏமாற்றும் பொய்களைச்சுமந்து
வருகின்றன மின்னஞ்சல்கள்.....

ஒவ்வொரு முறை வரும்
கடிதங்களும் பலமுறை
படிக்கப்படுகின்றன - அவைகளில்
பாசங்களோ கோபங்களோ இருப்பினும்.....

இப்போதெல்லாம் திறந்த
வேகத்திலேயே மூடப்படுகின்றன
மடிக்கணணிகள் - சில
எதிர்பார்ப்புகளற்ற மின்னஞ்சல்களால்
வெறுப்புகள் வெளிப்படாமலுமில்லை.....

கால ஓட்டத்தில் மனிதம் மறந்துபோனது
தபால்காரனை மட்டுமல்ல - சில பல
வலிகளையும் இதயம்
வெளிப்படுத்தும்போது ஆறுதலாய்
வந்து நிற்கும் தபால்களையும்தான்.....


அன்புடன்

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...