May 8, 2013

முதுமை....




இதேபோன்றொரு நாள்
எனக்கும் வரலாம் - முதுமையை
அலைகளினூடே
பேசித்தீற்கும் நாள்.....


ஏகாந்தத்தின் வலியும்
ஆற்றாமையும் இப்போதெல்லாம்
நிறையவே கடல்தீரங்களில் 
சிதறிக்கிடக்கின்றன....

கால்களிரண்டையும் மடக்கி 
கைகளால் கோர்த்து 
வீட்டினுள்ளே யாதுமற்றதொரு
முற்றத்தையே பார்த்திருக்கையில்
ஒரு தொலைதூரப்பயணம்போல்
தெரிகிறது ஒவ்வொரு நாளும்.....

வாழ்க்கை துணைகளை 
இழந்த முதுமைகளில் 
அதிகமும் பிறக்கிறது
கேழாமையும் காணாமையும்
கூடவே இயலாமையும்.....

கரைகளில் நின்று தனிமையின்
வலிகளை அலைகளோடு 
பகிரும்போது மெல்லமாய்
என் கால்களைத்தொட்டு
தாலாட்டு சொல்கிறது....

என் பாதங்களை கரைகளில் 
பதிக்க விடுவதில்லை - ஏகாந்தத்தின்
இன்னல்களை பதியமிடும்
பாதச்சுவடுகளை கண்ணீரால்
கரைத்துவிடுகின்றன அலைகள்....


எப்போதெல்லாம் என்
கனவுகளில் அவள் வருகிறாளோ
அப்போதெல்லாம் அவள்
இயலாதவளாகவே என்னிடம்
நலம் விசாரிக்கிறாள்...

என் வாய் பேசாத முதுமை
ஊரெல்லாம் போய்
கோள் சொல்கிறதாம் - என்
இலக்கு தெரியாத நடையில்
அவர்கள் கெளரவம் போகிறதாம்
பிள்ளைகளின் மனது
அலைகளைப்போன்று
அழகானதில்லையோ.....

மீண்டும் பேசிக்கொண்டும்
மீண்டும் கல்லெறிந்துகொண்டும்
மீண்டும் பின்னோக்கி நடந்துகொண்டும்
மீண்டும் தனியாய் சிரித்துக்கொண்டு்ம்
இருப்பதற்காய் பல இரகசியங்களோடு
யாரும் வரக்கூடும்....

இருட்டின் மறைவில் 
என் ஏகாந்தம் 
உறங்கக்கூடும் உன்
ஆர்ப்பரிக்கும் அழகிய 
சப்தத்தோடு......


அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...