May 6, 2013

சவப்பெட்டிகள் சுமக்கும் மாலைகள் ....




சவப்பெட்டிகள் சுமக்கின்றன 
பூமாலைகளை - மணமும் 
மனமும் அறியாமல் 
பெட்டிக்குள் மனிதன்
பிணம் என்ற பெயரோடு......

வாழ்ந்து முடித்ததில்
செய்து தீர்த்தவை பாவமோ
புண்ணியமோ மன்னிப்புகள் போய்
மிச்சவாது எதுவென
யாரும் அறிவதில்லை...

குறுகிய நேரத்தில் பெரும்பாலும்
அடக்கம் கூட நடப்பதில்லை – தாமதங்களின்
பின் வந்து சேர்வது வெளிநாட்டு
மகனோ வெளியூர் சகோதரனோ
திடீர் மழையோஆகலாம்....

நேற்று இறந்துபோன தந்தைகளின்
பாதச்சுவடுகளை பிள்ளைகள்
பின்பற்றுவதாய் கூறுவதில்
அர்த்தமில்லை
ஆகாததும் ஆகுமானதுமாய்
பின்னவர்களின் பெரும் பேறுகளும்
பிழைகளும் மாறுபட்டே நிற்கின்றன....

மரணம் பற்றி
யாரைக்கேட்பினும்
தனது முன்னவரின்
ஆரோக்கியம் பற்றிய
கவலைகளின் இழைகள்
தொகுப்புகளாய் ஓடுகிறது
இதயங்களிலும் வார்த்தைகளிலும்...

எனக்கு அளிக்கப்பட்ட
கால நீட்சியில்
நான் சேர்த்துக்கொண்டே
இருக்கின்றேனோ
பாவமென்றறிந்தே பாவத்தையும்
புண்ணியம் என்ற்றியாமல்
புண்ணியங்களையும்.....

மண்ணறையின் மேலிருந்து
என் கால் பகுதியில் கடைசியாய்
விழும் மண் குவியல்களை
யார் அள்ளி வீசுகின்றார்
என்பதை அறிவதற்குள்
என் முகமும் உடலும்
மூடப்பட்டிருக்கும்...

ஆமாம் நான் ஏற்கெனவே
இறந்துபோனதால் முகத்தில்
மண் குவியல்கள் விழும்போதும்
என்னால் பாற்கமுடியவில்லை.....

காலச்சுவடுகளில்
இன்றும் மரணம் பற்றிய
ஓராயிரம் பதிவுகள் - ஈராயிரம்
சடங்குகளால்
இல்லாமலாக்கப்படுகிறது....

மாலைகள்
சவப்பெட்டிகளில்.....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...