May 1, 2013

மணமாகிப்போன மரணம்....


மணமாகிப்போன மரணம்.....
************************

வாங்க, உள்ளே போய்
பாத்துட்டு வாங்க
என வரவேற்கப்படுகிறது
இரு வீட்டிலும்...

முகம் பார்த்து
திரும்பும் முகங்களில்
ஓராயிரம் நினைவலைகள்
சில அறிந்ததும் பல
அறியாததுமாய்.....

முற்றத்தில் விரிக்கப்பட்ட
பிளாஸ்டிக் இருக்கைகளில்
பார்த்ததும் மறந்துபோனதமான
தெரிந்த முகங்கள்....

சிலரின் சின்னச்சிரிப்புகளில்
வெளிப்படுகிறது புதிய
அறிமுகங்கள் - யார் மகன்
இவர் என அறியாமலே
பதில் சிரித்து முடிக்கிறேன் நான்....

என்ன அழகு
ஐஷ்வர்யமான முகம்
நேத்து இப்படி இல்லை
எவ்வளவு ஆசைகள்
எவ்வளவு வருத்தங்கள்
என ஆங்காங்கே சில
முறிந்த வரிகள் பல
காதுகளை சுற்றிச்சுழல்கிறது....

பால் கலக்காத தேநீர்
ஒரு கோப்பை - கண்டிப்பா
நீங்க சாப்பிட்டுவிட்டுத்தான்
போகவேண்டும்
உபசாரம் ஒரு உபத்திரவமாகவே
தெரிகிறது பல நேரங்களில்....

நெய்ச்சோறில்
உப்பில்லை - யாரோ
இருவர் பேசிக்கொண்ட
இடம் மறந்த வார்த்தைகள்....

மேடையைச்சுற்றியும்
உறவினர் கூட்டம் - பாடையை
சுற்றியும் உறவினர் கூட்டம்
மாலையில் துவங்கி
மாலையில் அடங்குகிறது மாலை....

நேரம் குறிக்கப்பட்டே
நடைபெறுகிறது - இதுவும்
எப்போதோ நேரம் குறித்தே
நடைபெறுகிறது....

இறுதியாய் விடை
சொல்லிப்பிரியும்போது
கண்ணீரில் நனைகிறது
இதயங்கள் - இனி
வரவே மாட்டார்
என்பதால் கண்ணீரில்
பயணிக்கிறது ஊர்வலம்....

மணமும் மரணமும்
இன்று ஒன்றுபோல் - துக்கம்
களைந்த மரணம்
தூக்குமேடையில்....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...