May 2, 2013

நான் தொடும் செடிகள்...



நான் தொடும் செடிகள்...
******************************
தெருவென்றோ வீடென்றோ
பார்ப்பதில்லை - கையெட்டும்
தூரத்தில் தலை சாய்த்துநிற்கும்
பச்சை ஓலையின் நுனியை
கிள்ளியெடுக்கிறேன்...

வீட்டுத்தோட்டத்தில்
ஆங்காங்கே நிற்கிறது என்
கைகள் படாத தொட்டால் வாடி
எனினும் ஆற்றுப்படுகை ஒரங்களில்
எப்போது கண்டாலும்
கால்களால் சீண்டி சுருக்கிவிடுகிறேன்...

ஏதோ நினைவுகளில்
கண் போன போக்கில் கால்கள்
நடக்கும்போது என் கை விரல்களில்
என்னையுமறியாமல் வகிர்ந்து
தீர்த்துவிட்ட பலா இலைகள்.....

யார்மீது கோபத்தோடு
வெளியேறினாலும் கல்வீசி தாக்குகிறேன்
கள்ளிச்செடிகளின் மீது - பாலாய்
வழியும் இரத்தத்தையோ
காயத்தையோ நான்
எப்போதும் பொருட்படுத்தியதில்லை....

மோந்து பார்க்காமல்
கறிவேப்பிலையை நான்
யாருக்கும் தருவதுமில்லை
எடுத்துக்கொள்வதுமில்லை....

குளங்களின் சுவர்களின்
பரணிச்செடிகள் - ஆசைகள்
என்னை விட்டுவைக்குமா என்ன
என் கைகளில் அச்சுப்பதிக்காமல்
விட்டதில்லை....

ரோஜாச்செடிகள்
யார் வீட்டில் நின்றாலும்
பரவாயில்லை - ஒரு துண்டு
தாங்களேன் என் மகளுக்கு
என்று கேட்டுவிடுகிறேன்....


இப்போதெல்லாம்
ஓலைக்கீற்றின் நுனிகளில்
ஈற்கல்கள் மட்டும் மிரட்டுகின்றன
பரணிச்செடியில் அச்சும் இல்லை
அசலும் இல்லை....

தொட்டால் வாடியில்
வெறும் கம்புகள் - ரோஜாவில்
வெறும் காய்ந்த முட்கள்
கறிவேப்பிலையில் ஆங்காங்கே
வெண் புள்ளிகளும் ஓட்டைகளும் ....

என் விரல்களை
இதயம் இப்போதெல்லாம்
தடுத்து வைத்துவிடுகிறது
இலைகளின் முகத்தில்
நகக்கீரல்களை பதிக்காதே என்று....

காய்ந்த உடல்களில்
காயங்களை கூட்டாதே
உன் கூரிய விரல்களால்
முட்களை மிருதுவான மூக்கை
உடைத்துவிடாதே...

உன் கண்களால் இலைகளின்
இதயங்களை எரித்துவிடாதே
இலைகளின் நுனிகளிலும்
உயிரின் வலிகளும் உணர்வுகளும்
இருக்கத்தான் செய்கின்றன....




No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...