May 7, 2013

மழையில்....




மழைத்துளிகளில் ஒன்று
சூடான என் தேநீர் 
கோப்பைக்குள் விழுந்து
நுரைத்து நின்ற தேநீர்
குமிழை உடைத்தது...

உடைந்து சிதறிய
குமிழின் திவலைகளில் சில
என் மீசையில் ஒட்டியபோது
தன் மீசையின் மீது
கை வைத்து சைகை செய்தார்
அருகே தேநீர் குடிப்பவர்....

திவலைகளில் ஒரு
நுண்துளி என் இடது விழியில்
தெறித்து வீழ்ந்தபோது
என் வலது இமையும்
இடது இமையும்
ஒரே நேரத்தில் பட படத்தது...

ஒவ்வொரு முறை
மின்னலடித்து முடித்ததும்
காதும் கண்களும் ஒரு
பயத்தோடே இடியின் சப்தத்தை
உட்கொள்ள தயாராயின....

என் கால்களை யாரோ
தள்ளிக்கொண்டே இருந்தனர்
மழையின் வேகம்
கூடுவதால் பக்கத்தில்
நின்ற ஆட்டுக்குட்டி நடு நடுங்கியே
உள் நோக்கி வந்தது....

இரண்டுமுறை உறிந்தபோதும்
என் தேநீர் கோப்பையில்
இன்னும் நுரைகள்
அடங்கவில்லை....

நாட்கள் சென்று
வரும் முதல் மழையில்
நனையாதே என யாரோ
யாரிடமோ சொல்வதைக்கேட்டேன்
அப்போதும் நான் முதல்
மழைத்துளி கலந்த தேநீரையே
குடித்துக்கொண்டிருந்தேன்.....

மழையின் வேகத்தையும்
ஆட்டுக்குட்டியின் தாபத்தையும்
ரசித்தவாறே பருகிக்கொண்டிருந்தேன்
தேயிலைப்பருக்கைகள்
வாயைத்தொட்டபோது
தேநீரின் சுவையை கடந்து
கசப்பை தொட்டிருந்தேன்....

கண்ணாடிக்கோப்பை
என் கைகளில்
கடைசியால் நடுங்கியது
இடியும் மின்னலும்
நின்றுபோய் அடை மழை
சாரலாகிப்போயிருந்தது...

பலமுறை துரத்தியடிக்கப்பட்ட
ஆட்டுக்குட்டி
மீண்டும் மீண்டும்
அதே இடத்தில்
வந்து நின்று நடு நடுங்கியது....

மழைக்காய் மட்டும்
துரத்தப்படுவதால்
ஆட்டுக்குட்டியினுடையது
வெறும் மழையின்
முடிவு தேடிய போராட்டம் மட்டுமே.....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...